5 ஆண்டுகள்... 50 மந்திரிகள்!

அமைச்சரவை சதுரங்கம்

“ஆண்டியும் அரசன் ஆகலாம்” என்ற பழமொழிக்கும் அ.தி.மு.க ஆட்சிக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றமே அதற்கு சாட்சி.

2011-ம் ஆண்டு மே மாதம் அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றபோது அமைந்த அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்த்து மொத்தம் 34 பேர் அமைச்சராகப் பொறுப்பேற்றனர். உள்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள் முதல்வர் கையில் இருந்தன. முதல்வருக்கு அடுத்த இடத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், மூன்றாம் இடத்தில் வேளாண் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனும் அதற்கு அடுத்து மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனும் இருந்தனர்.

முதல் மாற்றம்!

அமைச்சரவை பதவியேற்று ஒரு மாதம் கழித்து, அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம் அடைந்த நிகழ்வு அமைச்சரவை மாற்றத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. ஜூன் 27-ம் தேதி முகமது ஜான், அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். மேலும், சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றம் செய்யப்பட்டன.

அமாவாசை அச்சம்!

முதல் அமைச்சரவை மாற்றம் நடந்த சில தினங்களிலேயே அடுத்த மாற்றத்தை நடத்தி அமைச்சர்களை நடுங்கச் செய்தார் ஜெ. 2011 ஜூலை மாதம் 3-ம் தேதி சட்டத்துறை அமைச் சராக இருந்த இசக்கி சுப்பையா மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். அவருக்குப் பதிலாக செந்தூர் பாண்டியனை சேர்த்து புதிய அரசு பொறுப்பேற்று 2 மாதங்களில் மூன்றாவது அமைச்சரவை பதவியேற்பு விழாவும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதன்பின் இரண்டு மாத காலம் எந்த மாற்றமும் நிகழாமல் இருந்தது. அடுத்த அதிரடி, நவம்பர் மாதம் நடந்தேறியது. நவம்பர் 4-ம் தேதி அமாவாசை தினத்தன்று தமிழக அமைச்சரவையில் சூறாவளி மாற்றம் ஏற்ட்டது. ஆறு அமைச்சர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக புதிதாக ஆறு அமைச்சர்கள் பதவியேற்றனர். மேலும், அமைச்சரவையில் செல்வாக்காக இருந்த செங்கோட்டையனின் சரிவு, இந்த அமைச்சரவை மாற்றத்தில் இருந்துதான் ஆரம்பித்தது. செங்கோட்டையனின் துறையும் மாற்றம் கண்டது. அமாவாசை தினம் என்றால் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற அச்சமும் அமைச்சர்களிடையே ஏற்பட்டது. 2011 டிசம்பர் 9-ம் தேதி அமாவாசை தினத்துக்கு முதல் நாள்,  சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பரஞ்ஜோதி ராஜினாமா செய்தார். அமைச்சராக இருந்த செல்வி ராமஜெயத்தின் பதவியும் பறிக்கப்பட்டது. இருவருக்கும் பதிலாக உள்ளே வந்தவர்கள்தான் எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி.

அதன்பின் அமைச்சரவை மாற்றம் அமாவாசை, பௌர்ணமி என்ற கணக்கு ஏதும் இல்லாமல் வழக்கமான நிகழ்வாக மாறியது. அமைச்சரவையில் பவர்ஃபுல் அமைச்சராக வலம்வந்த செங்கோட்டையன், முக்கியத்துவம் இல்லாத ஐ.டி துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டு மீண்டும் வருவாய்த் துறைக்கு மாற்றப்பட்டு, ஆறாவது அமைச்சரவை மாற்றத்தில் அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது.

பரிதாபத்தில் பள்ளிக்கல்வித் துறை!

அமைச்சரவை மாற்றத்தில் அதிகம் பாதிக்கப் பட்ட துறை என்றால், அது பள்ளிக்கல்வித் துறை தான். அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையே முடிவு செய்யும் துறையின் நாற்காலி அடிக்கடி ஆட்டம் கண்டது. முதல் அமைச்சரவையில் இந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தவர் சி.வி.சண்முகம், அவர் சில மாதங்களில் மாற்றப்பட்டு புதிதாக அமைச்சரவையில் இணைந்த அக்ரி கிருஷ்ண மூர்த்தியிடம் துறை ஒப்படைக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் அவரிடம் இருந்து என்.ஆர் சிவபதி கைக்குச் சென்று, அதன் பின் வைகைச்செல்வனுக்கும், அவருக்கு அடுத்து  உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பழனியப்பனுக்குக் கூடுதல் துறை என பந்தாடப்பட்டது. இறுதியாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணியிடம் இந்தத் துறை ஒப்படைக்கப்பட்ட பின்தான் இந்தத் துறை ஆட்டம் காணாமல் இருந்து வருகிறது.

இரண்டாவது ரவுண்ட்!

ஜெ. முதல்வராகப் பொறுப்பேற்றபோது அவருடன் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று அதன்பின் பதவி இழந்து மீண்டும் அமைச்சர்களாக வந்தவர்கள் கோகுல இந்திரா, ஆர்.பி.உதயகுமார், பி.வி.ரமணா, எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.பி வேலுமணி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சிவபதி உள்ளிட்டோர். இரண்டாவது முறையாக அமைச்சரவையில் வாய்ப்புக் கிடைத்தும் அதிலும் கோட்டை விட்டவர்கள், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சிவபதி ஆகிய இருவர்தான். கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன் வாட்ஸ்அப்பில் வந்த படத்தால் பதவி இழந்தார் பி.வி.ரமணா.

ஆச்சர்ய அமைச்சர்கள்!

ஐந்து ஆண்டுகளில் பலமுறை அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தபோதும் சில அமைச்சர்கள் மட்டும் துறைகூட மாற்றப்படாமல் சாதனை புரிந்து ஐந்து ஆண்டுகளைக் கடத்திவிட்டனர். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பழனிச்சாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆதிதிராவிடர் நலத்  துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர், ஐந்து ஆண்டுகள் தங்களையும் தங்கள் துறையையும் காப்பாற்றிவிட்டார்கள்.

     பதவியேற்பு விழாக்கள்!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறை அமைச்சரவை பதவியேற்பு ஒருமுறை, ஜெ. பதவி பறிபோய் 2014 ஓ.பி.எஸ் தலைமையில் இரண்டாவது முறை, 2015-ல் ஜெ. மீண்டும் முதல்வராகப் பதவியேற்றபோது மூன்றாவது முறை என மூன்று முறை ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவியேற்றது. 15-க்கும் அதிகமான முறை ஆளுநர் மாளிகையில் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இதுவும் ஒரு சாதனைதான்.

ஐந்து ஆண்டுகள் 23 முறை!

2011 முதல் 2016 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 23 முறை அமைச்சரவை மாற்றம் கண்டுள்ளது. மரியம் பிச்சையில் தொடங்கிய மாற்றம், கடந்த மாதம் நீக்கப்பட்ட சின்னையா வரை கிட்டத் தட்ட அரைசதம் எம்.எல்.ஏ-க்கள் இந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சர் நாற்காலிகளில் அமர்ந்து சென்றுள்ளனர்.

- அ.சையது அபுதாஹிர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick