ரூட்டை மாற்றிய நாட்டாமை...

போயஸ் கார்டனில் ‘கறிவேப்பிலை’ சரத்குமார்

2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களைவிட அ.தி.மு.க ஆட்சியைப் புகழ்ந்து தள்ளினார் சரத். ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கும் மேலாகச் சரியான டிராக்கில் சென்று கொண்டிருந்த அ.தி.மு.க - ச.ம.க கூட்டணியில் நடிகர் சங்கத் தேர்தல்தான் எமனாக வந்தது. கடந்த அக்டோபர்  19-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்ற பின்னர், சரத்குமாருக்கு இறங்குமுகம் தொடங்கியது. அ.தி.மு.க-வில் இருந்து விலகி பி.ஜே.பி கூட்டணிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் அ.தி.மு.க-விலேயே இணைந்திருக்கிறார் நாட்டாமை சரத்குமார். அவரது தாவல்களும், தாவலுக்கான காரணங்களும் தேதிவாரியாகச் சில உண்மைகளை நமக்குச் சொல்கின்றன.

 ஜனவரி-27

சமத்துவ மக்கள் கட்சியின் இன்னொரு எம்.எல்.ஏ எர்ணாவூர் நாராயணனை கட்சியில் இருந்து நீக்கினார் சரத்குமார். “தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் எர்ணாவூர் நாராயணன் ஈடுபட்டார்” என்று சரத் விளக்கம் கொடுத்தார். அதேவேளையில், சரத்குமார் தன்னிசையாகச் செயல்படுவதாகவும் தம்மை நீக்குவது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பாமல் நடவடிக்கை எடுத்தது தவறு என்றும் எர்ணாவூர் நாராயணன் பதில் அளித்ததுடன், ‘சமத்துவ மக்கள் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். எர்ணாவூரின் ச.ம.க-வுக்கு அ.தி.மு.க-வில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்ற அளவுக்குப் பேச்சுகள் கிளம்பின.

பிப்ரவரி 22

சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேட்டிளித்த சரத், “சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி கிடையாது. அ.தி.மு.க தலைமை, கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக் கவில்லை. என்னை அந்தக் கட்சி கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக்கொண்டது. தேர்தலில் அதிக இடங்கள் அளித்தாலும் சரி, இனி அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.” என்று ஆச்சர்ய அதிரடி தந்தார்.

 பிப்ரவரி 27

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத், சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை பிப்ரவரி 26-ம் தேதி இரவு சரத்குமார் நேரில் சந்தித்தார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சரத்குமார்,
‘‘பி.ஜே.பி தலைவர்கள் என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். கூட்டணியில் சேருமாறு அழைத்தனர். கொள்கை அளவில் அதை ஏற்றுக்கொண்டேன்.’’ என்றார்.

 மார்ச் 3

தேசிய கட்சியோடு கூட்டணி சேர்ந்திருந்த சரத்குமாருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. நடிகர் சங்கத்தின் சார்பில் பூச்சி முருகன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில்,“நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த சரத்குமார் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

 மார்ச் 14

அடுத்த அதிரடியாக, நடிகர் சங்கச் செயற்குழு கூட்டத்தில், நடிகர் சங்கப் பொறுப்புகளில் இருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோரைத் தற்காலிகமாக நீக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. ஊழல் புகார்களில் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்படும்வரை அவர்கள் தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டது.

 மார்ச் 23

சரத்குமார் திடீரென போயஸ் கார்டன் சென்றார். ஜெயலலிதாவின் வீட்டுக்குள் அவர் கார் நுழைந்தது. அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்த சரத், “அ.தி.மு.க-வுடன் இணைந்து ச.ம.க தேர்தலில் செயல்படும். சில நல்ல உள்ளங்கள் அ.தி.மு.க-வையும், ச.ம.க-வையும் மீண்டும் இணைத்துள்ளன. தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும்’’ என்று அறிவித்தார்.

இந்தத் திடீர் கூட்டணிக்கும் நடிகர் சங்கத்தின் முறைகேடு புகார்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

- கே.பாலசுப்பிரமணி
படம்: தி.குமரகுருபரன்


அதிரடி பேச்சு காரணமா?

எர்ணாவூர் நாராயணன் கடந்த 13-ம் தேதி ஜெயலலிதாவை சந்தித்தார். இதுகுறித்து கடந்த 21-ம் தேதி புழலில் ச.ம.கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எர்ணாவூர் நாராயணன், “தி.மு.க., தலைவர் கருணாநிதியை எளிதாகச் சந்தித்துவிடலாம். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவை, அவ்வளவு எளிதில் சந்திக்க முடியாது. 11-ம் தேதி கட்சி தொடங்கிய எங்களை, ஜெயலலிதா 13-ம் தேதி அழைத்துப் பேசினார்” என்று கூறி இருந்தார். எர்ணாவூர் நாராயணின் இந்த அதிரடி பேச்சு சரத், அ.தி.மு.க-வுக்குத் திரும்பக் காரணம் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick