மக்கள் நலக் கூட்டணி to கேப்டன் விஜயகாந்த் அணி!

புறப்பட்டது பாண்டவர் அணி

‘தனித்துப் போட்டி’ என விஜயகாந்த் அறிவித்த பிறகும்கூட தே.மு.தி.க-வைச் சுற்றி தேர்தல் களம் தகித்துக்கொண்டிருந்தது. அறிவாலயம் போவாரா, கமலாலயம் செல்வாரா என விஜயகாந்த்தைச் சுற்றி வந்த சஸ்பென்ஸ் முற்றுப்பெற்றுவிட்டது. தாயகமும், பாலன் இல்லமும், வெளிச்சமும், பி.ராமமூர்த்தி நினைவகமும் ஒன்றாக கேப்டன் ஆபீஸில் லேண்ட் ஆகிவிட்டன. மக்கள் நலக் கூட்டணியும் தே.மு.தி.க-வும் கைக் கோத்துக்கொண்டதுதான் இந்தத் தேர்தலின் முதல் திருப்பம். மக்கள் நலக் கூட்டணி இப்போது விஜயகாந்த் அணியாக மாறிவிட்டது. கதிர் அரிவாளும், சுத்தியல் அரிவாளும், மோதிரமும், பம்பரமும் சேர்ந்து முரசு கொட்ட தயாராகிவிட்டன. ‘ராசிதான்... கை ராசிதான்... உன் முகமே ராசிதான்’ என விஜயகாந்த் நடித்த ‘என் ஆசை மச்சான்’ படத்தில் பாட்டு வரும். விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஆக்கி அவரோடு ராசி போட்டிருக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியினர். கூட்டணி வைபவம் நடந்த தே.மு.தி.க-வின் தலைமை அலுவலகத்தில் நடந்த களேபரக் காட்சிகள் இங்கே...

கேப்டன் டி.வி-க்கு டி.ஆர்.பி.!

தமிழக தேர்தல் வரலாற்றிலேயே பத்திரிகையாளர்களை அழைக்காமல் அமைந்த தேர்தல் கூட்டணி இதுவாகத்தான் இருக்கும். ‘தூ’ விவகாரத்துக்குப் பிறகு மீடியாவுக்கும் விஜயகாந்த்துக்கும் இடையே ஏழாம் பொருத்தம். மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க-வுடன் இணையும் முக்கியத் தருணத்தைக்கூட எந்த மீடியாவும் நேரடியாக கவர் செய்துவிடக் கூடாது என்பதில் விஜயகாந்த் உறுதியாகவே இருந்தார். அது அப்பட்டமாகவே வெளிப்பட்டது. கூட்டணிக் காட்சிகள் முழுவதையும் கேப்டன் டி.வி மட்டுமே ஒளிபரப்பியது. தே.மு.தி.க அலுவலகத்தின் வளாகத்தில்கூட பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. யாரும் உள்ளே நுழைந்துவிடாத அளவுக்கு ராணுவ கோட்டைப்போல தடுப்புகள் போட்டு ரோட்டில்தான் நிறுத்தப்பட்டனர். மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வந்தபோது அவர்கள் பின்னால் சில பத்திரிகையாளர்கள் நுழைந்துவிட்டனர். அவர்களையும் வெளியே விரட்டினார்கள். வைகோவே, ‘‘நீங்கள் வெளியில் நில்லுங்கள். திரும்பி வந்து உங்களிடம் பேசுகிறோம்’’ என தே.மு.தி.க-வின் குரலாக மாறினார்.

வைகோ, திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தே.மு.தி.க அலுவலகத்துக்குள் வந்தபோது அந்தக் காட்சிகளை எல்லாம் உள்ளே இருந்த கேப்டன் டி.வி மட்டுமே கவர் செய்தது. விஜயகாந்த்தை தலைவர்கள் சந்தித்தது, கூட்டணி ஒப்பந்தம் போட்டது, முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த், 124 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டி... என எல்லா விஷயங்களையும் முதலில் கேப்டன் டி.வி-தான் செய்தியாக வெளியிட்டது. கூட்டணி ஒப்பந்தம் முடிந்த பிறகு நடந்த தலைவர்களின் உரைகளைக்கூட கவர் செய்ய எந்த மீடியாவும் அனுமதிக்கப்படவில்லை. அதையும் கேப்டன் டி.வி-தான் லைவ் செய்தது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பேசியபோது கார்ட்லெஸ் மைக்கோடு கேப்டன் டி.வி லோகோ பொருத்திய மைக்கையும் சேர்த்துப் பிடித்துதான் பேசினார்கள். கேப்டன் டி.வி-யின் ‘லைவ்’ காட்சியைத்தான் மற்ற சேனல்களும் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். மீடியாவுக்கு நோஸ்கட் கொடுத்து கேப்டன் டி.வி-யின் டி.ஆர்.பி-யை எகிற வைத்தனர். இறுதியாக விஜயகாந்த் பேசியபோது கேப்டன் டி.வி-க்கு மறக்காமல் நன்றி சொன்னதும் ஆச்சர்யம்தான். அதைவிட ஆச்சர்யம் ஒன்றும் உண்டு. வைகோ பேசியபோது, ‘‘என்னை ‘அர்ச்சுனன்’ என்றும், திருமாவை ‘பீமன்’ என்றும் முத்தரசன் சொன்னார். அர்ச்சுனனும் பீமனும் இருக்கும்போது தர்மரை (விஜயகாந்த்) யாரும் நெருங்க முடியாது. அதனால், இந்த அணி பற்றி, அ.தி.மு.க – தி.மு.க எழுப்பும் கேள்விகளுக்கும் பத்திரிகைகளுக்கும் எங்கள் அணியின் தர்மராக உள்ள விஜயகாந்த் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. யார் எந்தக் கேள்வி கேட்க விரும்பினாலும், எங்களைக் கேளுங்கள். அவர் பக்கம் நெருங்கவிடமாட்டோம்’’ என்றார். அதாவது, மீடியாவினர்கூட அவர் பக்கம் நெருங்கவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பை மக்கள் நலக் கூட்டணியினர் ஏற்றிருக்கிறார்கள். ‘‘பேட்டி கேட்காதீர்கள், டி.வி-க்கு பைட் தரமாட்டேன்’’ என அடிக்கடி விஜயகாந்த் சொல்வார். அந்த வேலையையும் இப்போது மக்கள் நலக் கூட்டணியினர் பார்த்துக் கொள்வார்கள்போல.

வைகோ கையில் கவர்!

வைகோ, திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரே காரில்தான் வந்தார்கள். அவர்கள் காரில் இருந்து இறங்கியபோது வைகோ கையில் பெரிய கவர் ஒன்று இருந்தது. அந்த கவரை ரொம்பப் பத்திராக எடுத்து வந்தார். கவர் கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அதை இறுக்கிப் பிடித்திருந்தார். ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.எம்., சி.பி.ஐ ஆகிய கட்சிகள் போட்டியிட விரும்பிய தொகுதிகள் பட்டியல், மக்கள் நலக் கூட்டணி தே.மு.தி.க-வை ஏற்றுக்கொண்டதற்கான ஆதரவுக் கடிதம் ஆகியவை அந்த கவரில் இருந்தாகச் செய்திகள் கசிந்தன. ஆதரவுக் கடிதத்தில் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுதல், கூட்டணிக்கு விஜயகாந்த்தான் தலைவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதையெல்லாம் தாண்டி அந்த கவரில் வேறு சில பேப்பர்களும் இருந்தன என கிசுகிசுக்கிறார்கள் தே.மு.தி.க-வினர்.

ராசிதான்... கை ராசிதான்!

விஜயகாந்த்தின் ராசி எண் 5. 2005-ம் ஆண்டில் தே.மு.தி.க உதயமானது செப்டம்பர் 14-ல். 2011 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் 41. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் 14. இதன் கூட்டுத்தொகை அத்தனையும் ஐந்துதான். 2014 எம்.பி தேர்தலில் விஜயகாந்த் பிரசாரத்தைத் தொடங்கிய தேதி மார்ச் 14. முதல் கட்ட பிரசாரத்துக்கு ஒதுக்கப்பட்ட நாட்கள் 14. இதே ராசி எண் ஐந்துதான் இப்போதும் அரங்கேறியது. பங்குனி உத்திர நாளான 23-ம் தேதி மக்கள் நலக் கூட்டணியோடு அச்சாரம் போட்டார் விஜயகாந்த். ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு அது மீடியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது நேரம் காலை 10.40 இதன் கூட்டுத்தொகை ஐந்து. இதை எல்லாம்விட கூட்டணியில் ஐந்து கட்சிகள்தான் இப்போது இருக்கின்றன. தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 124. இதன் கூட்டுத்தொகை 7. விஜயகாந்த் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு சில தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்து கூட்டுத்தொகை ஐந்து என வரும்படி தொகுதிகளில் போட்டியிடவும் விஜயகாந்த்திடம் திட்டம் இருக்கிறதாம்.

தனித்துப் போட்டி... கிளம்பிய எதிர்ப்பு!

‘தனித்துப் போட்டி’ என விஜயகாந்த் அறிவித்தபோது மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை. தொண்டர்கள் மத்தியிலும் லேசாக சலசலப்பு. அதனால்தான் மக்கள் நலக் கூட்டணியோடு சேர்வதில் ஆர்வம் காட்டினார். மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தே.மு.தி.க அலுவலகத்துக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் வரையில் விஜயகாந்த்துடன் நிழல்போல வலம் வரும் பார்த்தசாரதி, சந்திரகுமார் போன்ற தலைமைக் கழக நிர்வாகிகளுக்குக்கூட தெரியவில்லை. விஜயகாந்த் அறையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகி வெளியே வந்தபோதுதான் விஷயம் தெரிந்தது. கூட்டணி முடிவு பற்றி தலைவர்கள் உரையாற்றியபோது முக்கிய நிர்வாகிகள் முகத்தில் பெரிய சந்தோஷத்தைப் பார்க்க முடியவில்லை.

தி.மு.க-வுக்கு வைக்கும் செக்!

தே.மு.தி.க அலுவலகத்தில் வைகோ மைக் பிடித்தபோது தி.மு.க மீதுதான் அதிகமாகக் குறிவைத்துப் பேசினார். ‘‘அ.தி.மு.க-வுக்கும் விஜயகாந்த் அணிக்கும்தான் தேர்தலில் போட்டி’’ எனச் சொன்னார் வைகோ. ‘‘10 மாதங்களுக்கு முன்பு, விஜயகாந்த்துடன் விமானத்தில் பயணித்தபோது, ‘என்னுடைய கட்சியை அழிப்பதற்கு, அண்ணன் கலைஞரும் அவருடைய செல்லப்பிள்ளை ஸ்டாலினும் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று விஜயகாந்த்திடம் தெரிவித்தேன். அதற்கு விஜயகாந்த், ‘அதெல்லாம் ஒண்ணும் நடக்காது. நீங்க அப்படி நினைக்காதீங்க. ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடமாட்டோம். தி.மு.க கையில் மறுபடியும் ஆட்சியைப் போகவிட மாட்டோம்’ என நம்பிக்கையாகச் சொன்னார்’’ இந்தப் பேச்சை சுட்டிக்காட்டும் தி.மு.க-வினர், ‘‘தி.மு.க-வை ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில், வைகோ தீவிரம் காட்டி வருகிறார். அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தி.மு.க-வுக்குத் தாவியதால் அந்தக் கோபத்தைக் காட்ட நினைக்கிறார். அதற்காக விஜயகாந்த்துடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்’’ என்றார்கள்.

ராமகிருஷ்ணன் பெயரை மறந்த விஜயகாந்த்!

இறுதியாக விஜயகாந்த் பேசியபோது மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுக்கு நன்றி சொன்னார். அதில் வைகோ, திருமாவளவன், முத்தரசன் பெயர்களைச் சொல்லிவிட்டு ராமகிருஷ்ணன் பெயரைச் சொல்லவில்லை. உடனே வைகோ விஜயகாந்த்திடம் சொல்ல... அவர் பெயரை குறிப்பிட்டார். ‘‘நான் பேசும்போது பொதுவாகப் பெயர்களைக் குறிப்பிட மாட்டேன். ஆனால், இப்போது சொல்ல வேண்டிய நிலை வந்துவிட்டது’’ என்றார். மீண்டும் வைகோ விஜயகாந்த்திடம் ஏதோ சொல்ல.. ‘‘இந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோதான்’’ என அழுத்தமாகச் சொல்லி பேச்சை முடித்தார்.

110 விதிதான் 110 சீட்டா?

‘அ.தி.மு.க-வின் ‘பி’ டீம்தான் மக்கள் நலக் கூட்டணி’ என விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தே.மு.தி.க-வுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்திருக்கிறது. இதை வைத்து மீம்ஸ்களும் வீடியோக்களும் பறந்துகொண்டிருக்கின்றன. சட்டசபை விதி 110-ன் கீழ் ஜெயலலிதா வெளியிட்ட பல அறிவிப்புகள் பஞ்சராகி இருக்கின்றன. ஜெயலலிதாவுக்குப் பிடித்த 110 விதி எண்ணைப் போலவே 110 இடங்கள் மக்கள் நலக் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டிருப்பது சலசலப்பைக் கிளப்பிவிட்டது. தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் “வைகோ எப்போதும் அ.தி.மு.க-வுக்கு நன்மைதான் செய்வார்’’ எனப் பேசியிருப்பதும் பூதாகரமாகிவிட்டது.

கூட்டணிக்குக் காரணம் என்ன?

‘‘மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்த்தை அழைத்தபோது தேர்தல் செலவுகளுக்கு என்ன செய்வது என்கிற தயக்கம் விஜயகாந்த்திடம் இருந்தது. அதே நேரம் பி.ஜே.பி-யினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பி.ஜே.பி-யோ விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மறுத்துவிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பி.ஜே.பி அணியில் தே.மு.தி.க.தான் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு முதன்மைக் கட்சியாக இருந்தது. ஆனால், அந்த அணியை தேசிய ஜனநாயக கூட்டணி என்றும் பி.ஜே.பி அணி என்றும்தான் அழைத்தார்கள். அதனால், விஜயகாந்த்தின் முக்கியத்துவம் குறைந்துபோனது. அதையும் சொல்லி தே.மு.தி.க கூட்டணி எனப் பெயர்வைக்கச் சொன்னார் விஜயகாந்த். அதற்கும் பி.ஜே.பி ஒப்புக்கொள்ளவில்லை. தி.மு.க பக்கமும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. தி.மு.க-வோடு கூட்டணி என்பதை பிரேமலதா விரும்பவில்லை. தே.மு.தி.க விதித்த நிபந்தனைகளை தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் ஏற்றுக்கொள்ளாததால், அதை ஏற்றுக்கொண்ட மக்கள் நலக் கூட்டணியே பெஸ்ட் என விஜயகாந்த் தீர்மானித்தார். பி.ஜே.பி-யோடு நின்று தோற்றுப்போவதைவிட, மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கும் மக்கள் நலக் கூட்டணிதான் சரியான சாய்ஸ் என முடிவுவெடுத்தார்’’ எனக் கூட்டணிக்குக் காரணம் சொன்னார்கள் மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, மா.அ.மோகன் பிரபாகரன்
படங்கள்: ப.சரவணகுமார்


நல்லதோர் வீணை செய்தே...


மக்கள்  நலக் கூட்டணி - தே.மு.தி.க இணைந்த நேரத்தில் சி.பி.எம் எம்.எல்.ஏ பாலபாரதியின் ஃபேஸ்புக்கில் ‘நல்லதோர் வீணை செய்தே...’ என ‘பாரதி’யின் வரிகள் போஸ்ட் செய்யப்பட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. அந்தப் பதிவுக்குக் கீழே பரபர என கமென்ட்களும் குவியத் தொடங்கின. ‘நல்லதோர் மக்கள் நலக் கூட்டணி, விஜயகாந்த் அணியில் சேர்ந்து புழுதியில் விழுந்துவிட்டதா?’ என விமர்சனங்கள் கிளம்பின. இந்தக் கூட்டணியை விரும்பாமல்தான் இப்படியொரு போஸ்ட்டை பாலபாராதி போட்டிருக்கிறார் எனப் பேச்சுகள் கிளம்பின. பாலபாரதியிடமே, ‘‘இந்த வரி எதற்காக?’’ எனக் கேட்டோம்.

‘‘மாவீரன் பகத்சிங் தூக்கிலடப்பட்ட நாள் இன்று. அதற்காக, முதலில் நல்லதோர் வீணை செய்தே என்ற வரியைப் போட்டேன். பிறகு ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டேன். திரும்பி வந்து பார்த்தபோது, தே.மு.தி.க கூட்டணி - மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததைவைத்து பலரும் கமென்ட்ஸ் போட்டிருந்தனர். நல்லதோர் வீணைக்கும் இப்போதைய அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலடப்பட்ட நாள். அதை வைத்து இதை எழுதினேன். ‘கூட்டணி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்தப் பதிவைப் பற்றி பலரும் பலவிதமாக யூகம் செய்கிறார்கள். அதை நீக்கிவிட்டால், நல்லது’ என்றார்கள். அரசியல் மாற்றம் ஏற்படுகிறபோது அந்த வரி பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்துகிறது என்பதால், நீக்கிவிட்டேன்’’ என்றார். 

- கே.புவனேஸ்வரி


பாண்டவர்களின் கர்ஜனை!

தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி உறுதியான பிறகு, தே.மு.தி.க-வின் அலுவலகத்திலே ஐவர் அணியினர் உரையாற்றினார்கள். அனல் கக்கிய பேச்சுகளின் ‘ஹைலைட்ஸ்’கள்.

முத்தரசன் (சி.பி.ஐ.): ‘‘ஐந்து பேர் உள்ள இந்த அணியில் விஜயகாந்த் தர்மர். துரியோதனின் தொடையை உரித்துக் ரத்தத்தைக் குடித்துக் கொன்ற பீமனைப்போல் திருமாவளவன் இருக்கிறார். வைகோதான் அர்ச்சுனன்.

ஜி.ராமகிருஷ்ணனை நகுலனாக நினைத்துக் கொள்ளுங்கள். என்னைச் சகாதேவனாக கருதிக்கொள்ளுங்கள். போர்க்களம் எத்தனை கடுமையாக இருந்தாலும், இறுதியில் வெல்வது பாண்டவர்கள்தான். தி.மு.க., அ.தி.மு.க அல்லாத ஒரு மாற்றுத் தேவை என்று மக்கள் கனவு கண்டார்கள். அது நனவாகி உள்ளது. இரண்டு தீய சக்திகளையும் எதிர்த்துப் போர்க்களத்தில் இறங்கி இருக்கிறோம்.’’

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): ‘‘ ‘நான் ‘கிங் மேக்கரா’க இருப்பதை தொண்டர்கள் ஏற்கவில்லை. ‘கிங்’காக இருப்பதைத்தான் விரும்புகிறார்கள்’ என தே.மு.தி.க மாநாட்டில் அண்ணன் விஜயகாந்த் சொல்லியிருந்தார். அதிலேயே தி.மு.க ரூல்டு அவுட்டாகிவிட்டது. ‘அ.தி.மு.க-வை அப்புறப்படுத்துவதுதான் ஒரே நோக்கம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என விஜயகாந்த் சொல்லியிருந்தார். புதிய வரலாறு படைக்க வேண்டும் என்பதால், அவர் இந்த மகத்தான முடிவை எடுத்துள்ளார். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், நிச்சயம் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றுவார்.’’

ஜி.ராமகிருஷ்ணன் (சி.பி.எம்.): ‘‘கடந்த 47 ஆண்டுகளாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழகத்தை வஞ்சித்துவிட்டனர். இந்த 47 ஆண்டுகளில் ஆட்சி மாற்றம் மட்டும்தான் நடந்துகொண்டிருந்ததே தவிர, மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்போது ஒட்டுமொத்தமாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. பகத்சிங்கின் நினைவு நாளில் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைப்பதற்கான ஓர் உடன்பாடு இந்த அணிக்குள் ஏற்பட்டுள்ளது.’’

வைகோ (ம.தி.மு.க.): ‘‘இனிமேல் இந்த அணி, ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என அழைக்கப்படும். ‘நாம் கூட்டணி ஆட்சிதானே அமைக்கப்போகிறோம்’ என விஜயகாந்த்திடம், கேட்டேன். அதற்குக் கொஞ்சமும் யோசிக்காமல் ‘ஆமாம்... நாம் கூட்டணி ஆட்சிதான் அமைக்கப் போகிறோம். அதை இங்கேயே அறிவித்துவிடுங்கள்’ என்றார். வெற்றிபெற்ற பிறகு, இலாகாக்கள் என்னவென்பதை நாங்கள் எங்களுக்குள் தீர்மானித்துக்கொள்வோம். இந்தக் கூட்டணி மக்கள் எதிர்பார்த்த கூட்டணி, மாற்றம் தரும் கூட்டணி, மகத்தான கூட்டணி, மாபெரும் கூட்டணி.’’

விஜயகாந்த் (தே.மு.தி.க.):
‘‘மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் என்னிடம் வந்து, ‘நாங்க நாலுபேரும் ‘கிங் மேக்கரா’ இருக்கோம். நீங்க ‘கிங்’கா இருங்க’ன்னு சொன்னாங்க. உடனே நான் கையெழுத்துப்போட்டுக் கொடுத்துவிட்டேன். பணத்துக்கு ஆசைப்பட்டு, நான் அங்க போய்ட்டேன்... இங்க போய்ட்டேன்னு என்னென்னமோ சொன்னாங்க. ஆனா, நான் எங்கேயும் போகல. இங்கதான் இருக்கேன். ‘தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி’ என முன்புச் சொன்னேன். தெய்வம்தான் நல்ல மக்களை எனக்கு அடையாளம் காட்டி உள்ளது. அதுதான் மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்துள்ளேன். அவர்களுக்குத் தெய்வத்தைவிட மக்களை அதிகமாகப் பிடிக்கும். எனக்குத் தெய்வத்தைப் பிடிக்கும். அதனால், இப்போது தெய்வமும் மக்களும் கூட்டணி அமைத்துள்ளது.’’

- ஜோ.ஸ்டாலின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick