“அப்பாவை மறுபடியும் ஜெயிக்க வையுங்க!”

திருவாரூரைக் கலக்கும் தமிழரசு

தி.மு.க தலைவர் கருணாநிதி தனது சொந்த மண்ணில் மீண்டும் போட்டியிடுவதால், இந்த முறையும் ஸ்டார் தொகுதியாகிவிட்டது திருவாரூர். தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் திருவாரூர் தொகுதியில் வலம் வந்தோம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தலைவரை, இந்த முறை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென தி.மு.க-வினர் சொல்லி வருகிறார்கள். கருணாநிதியை தோற்கடித்தால் அமைச்சர் பதவியும், கட்சியில் அங்கீகாரமும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் முனைப்புடன் தேர்தல் பணி ஆற்றிவருகிறார், அ.தி.மு.க வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம். 5 முறை தங்கள் கையில் இருந்த தொகுதியை இந்த முறை கைப்பற்றிவிட வேண்டும் என்கிற தீவிர முயற்சியில் இருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மாசிலாமணி. இப்படியாக, பல்முனைத் தாக்குதலில் பரபரத்துக் கிடக்கிறது திருவாரூர்.

கருணாநிதிக்கு ஓட்டு சேகரிப்பதற்காக, அவரது மகன் மு.க.தமிழரசு திருவாரூரில் முகாமிட்டு உள்ளார். தினமும் காலை காலை 7 மணிக்கெல்லாம் பிரசாரத்துக்குக் கிளம்பி விடுகிறார். கூடவே, உதவியாளர் ஒருவரையும் அழைத்துச் செல்கிறார். எந்தப் பகுதிக்குச் செல்கிறாரோ, அந்தப் பகுதியில் கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றிய விவரங்களை தமிழரசுவிடம் கொடுத்துவிடுகிறார், தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன். பகுதிச் செயலாளர், கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் என உள்ளூர் நிர்வாகிகளும் தமிழரசுவோடு வருகிறார்கள்.

தொகுதி மக்களிடம், “வணக்கம் நல்லா இருக்கீங்களா... நான் கலைஞர் பையன் தமிழரசு வந்திருக்கேன்... இந்த முறையும் அப்பாவை ஜெயிக்க வைக்கணும்... கண்டிப்பாக ஓட்டு போடுங்க... நம்ம ஊருக்கு அப்பா நிறையவே செய்திருக்கிறார்ல....” என்று புன்சிரிப்புடன் கைகூப்பி வாக்குச் சேகரிக்கிறார். தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை, தி.மு.க-வின் சாதனைகள், அ.தி.மு.க அரசால் திருவாரூர் புறக்கணிக்கப்பட்டது பற்றிய விவரங்கள் ஆகியவை பற்றிய துண்டுப் பிரசுரங்களையும் வாக்காளர்களிடம் விநியோகம் செய்கிறார் தமிழரசு.

வீடு வீடாகச் சென்று ஓட்டுகேட்கும் தமிழரசு, வீட்டில் உள்ள குழந்தைகளை அழைத்து, ‘‘எப்படி இருக்கீங்க’’ என்று செல்லமாகக் கேட்கிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார். கொரடாச்சேரி ஒன்றியம் அபிவிருந்தீஸ்வரம் சென்ற தமிழரசு, “ஒரு மாட்டு வண்டியைக் கொண்டு வாருங்கள்” என்று திடீரென்று கட்சி நிர்வாகிகளிடம் சொன்னார். மாட்டு வண்டியும் வந்தது. அதில் ஏறி கைகூப்பியவாறு தந்தைக்கு வாக்கு சேகரித்தார்.  தமிழரசு, மாவூரில் வாக்குச் சேகரித்துக்கொண்டிருபோது அந்த வழியாக ஒரு பஸ் வந்தது. அதில் ஏறி மக்களிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து, “அப்பாவுக்கு ஓட்டு போடுங்க” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அலிவலம் பகுதியில் ஒரு டீக்கடையில் வாக்குச் சேகரித்தார். அப்போது, தனது சகோதரர் ஸ்டாலின் பாணியில், ‘ஒரு டீ போடுங்க...’ என்றார். டீயைக் குடித்துவிட்டு “பிரமாதம்” என்று டீ மாஸ்டரை பாராட்டிச் சென்றார்.

“ ‘நமக்கு நாமே’ இன்னும் முடியலையா?” என்று தமிழரசுவைப் பார்த்து சிலர் கமென்ட் அடித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்