“ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது!”

சதக்கத்துல்லாஹ் கணிப்பு

பி.ஜே.பி கூட்டணியில், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு குளித்தலை சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் மாநிலத் தலைவர் என்.கே.என்.சதக்கத்துல்லாஹ் போட்டியிடுகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘பி.ஜே.பி கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?’’

‘‘பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இணையாக வேறு எந்தக் கட்சியோ, அணிகளோ தமிழக அரசியல் அரங்கில் இல்லை. தமிழகத்தில் தேர்தல், கணிப்புகளைத் தவிடுபொடியாக்குவோம். என்னுடைய தொகுதியைப் பொறுத்தவரை, எனது தந்தை நயினார் முகமது, குளித்தலை நகராட்சித் தலைவராக மூன்று தடவை இருந்தார். எங்கள் ஊர் ஜமாத் தலைவராக 30 வருடங்கள் இருந்துள்ளார். அனைத்து சமூகத்தினரின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. குளித்தலையில் வெற்றி பெறுவது உறுதி.’’

‘‘பி.ஜே.பி சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?’’

‘‘நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்திய மோடியை நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரித்தோம். எளிய இஸ்லாமிய தொழில் முனைவோர்கள் 6,800 பேருக்கு மானிய லோன்கள் வாங்கிக் கொடுத்துள்ளோம். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இஸ்லாமிய சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய நலத் திட்டங்களை வேகப்படுத்திப் பெற்றுத் தந்திருக்கிறோம். பி.ஜே.பி கட்சி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி என்று தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதுமே அந்தக் குரல் உள்ளது. அப்படிச் சொல்கிறவர்கள் இஸ்லாமியர்களை ஓட்டு வங்கிகளாக மட்டுமே பார்க்கிறார்கள். சிறுபான்மை மக்கள் பற்றி வாய் கிழியப் பேசும், மக்கள் நலக் கூட்டணியில்கூட இஸ்லாமிய இயக்கங்களுக்கு இடம் இல்லை. பி.ஜே.பி-யை இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்று சொல்லும் சில தலைவர்கள் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் குரல் அல்ல.’’

‘‘பி.ஜே.பி-யை சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?’’

‘‘கட்சியிலும் ஆட்சியிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைத்துச் சிறுபான்மை மக்களுக்கும் பி.ஜே.பி-யில் உரிய மரியாதை தரப்படுகிறது. இஸ்லாமிய சமுதாயம் அவர்களிடம் நெருங்க முடியாது என்கிற இரும்புத்திரை உடைந்திருக்கிறது.’’

‘‘அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி தேர்தல் வாக்குறுதிகள் பற்றிச் சொல்லுங்களேன்?’’

‘‘மதுவிலக்கைப் படிப்படியாகக் கொண்டு வருவோம் என்று சொல்லும்போதே ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தெரிகிறது. மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்று அ.தி.மு.க சொன்னால், அது பெண் குரல். தி.மு.க சொன்னால், அது ஆண் குரல். இந்த இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மது ஆலைகள் நடத்துகிறார்கள். முதலில் அந்த மது ஆலைகளை மூடிவிட்டு ஓட்டு கேட்க வாருங்கள். மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கையைத் தமிழக மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆண்ட கட்சியையும் ஆளுகின்ற கட்சியையும் வீழ்த்த பி.ஜே.பி-யோடு அணி சேருங்கள் என்று விடுத்த அழைப்பை விஜயகாந்த், அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோர் மறுத்துவிட்டனர். சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் வருத்தப்படுவார்கள்’’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்