கோடி கோடியாக கரன்சி மழை!

மாட்டிக்கொண்ட மந்திரி பினாமிகள்!

மிழ்நாட்டின் ‘பவர்ஃபுல்’ அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமான, கரூரைச் சேர்ந்த அன்புநாதன் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்தப் பணம், வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என்று தகவல்கள் வருகின்றன. கரூரில் 4.75 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்தியாவிலேயே இவ்வளவு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது கரூரில்தான் என்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி சொல்லி இருக்கிறார். உண்மையில், அன்புநாதனின் வீட்டில் இருந்து பல நூறு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன. உண்மை விவரங்களை அதிகாரிகள் மறைக்கிறார்கள் என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

யார் இந்த அன்புநாதன்?

கரூர் தோட்டக்குறிச்சியை அடுத்த அய்யம்பாளையத்தில் அன்புநாதனின் வீடு உள்ளது. அன்புநாதனின் அப்பா பெரியசாமி, கரூர் பாலிடெக்னிக் கல்லூரியின் பங்குதாரராக இருந்தவர். அப்பாவின் மறைவுக்குப் பிறகு, கல்லூரி நிர்வாகத்தில் இருந்து விலகினார் அன்புநாதன். அதன்மூலம் கிடைத்த பணத்தில் ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் என லோக்கலில் அவர் வலம்வந்தார். தனது சகோதரியை திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுத்துள்ளார். சகோதரியின் கணவர் மூலம் நத்தம் விசுவநாதன் நெருக்கமாகிறார். கூடவே, ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும் நெருக்கமாகிறார்.

கரூரில் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில்களுக்கு முழுக்குப் போட்டுவிட்டு,   சென்னை உட்பட சில முக்கிய நகரங்களில் தனது பிசினஸ்களை அதிகரித்து உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், அன்புநாதன் மூலமாக பல கோடிகள் சினிமா துறையில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கரூர் குன்னம்சத்திரத்தில் உள்ள அன்னை மகளிர் கல்லூரியும், திருச்சி ஆர்.வி.எஸ் கல்லூரியும் இவரது கட்டுப்பாட்டில் இருக்கின்றனவாம். ஆர்.வி.எஸ் கல்லூரியை அமைச்சர் வைத்திலிங்கம் தரப்புக்கு மாற்றிவிட ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள்.

பண்ணை வீட்டில் அமைச்சர்கள்!

இப்போது ஓ.பன்னீர்செல்வம்,  நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி என அனைவரும் அன்புநாதனுக்கு மிகமிக நெருக்கம் என்கிறார்கள். அமைச்சர்கள் பன்னீர் செல்வமும், நத்தம் விசுவநாதனும் அன்புநாதனுக்குச் சொந்தமான கரூர் அய்யம்பாளையத்தில் உள்ள பண்ணைவீட்டில் சில முறை தங்கிச் சென்றதாகவும் சொல்கிறார்கள். அன்புநாதன் வீட்டுக்கு ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் சர்வசாதாரணமாக வந்து போவாராம். கல்லூரி ஒன்றை விலைக்கு வாங்கும் விவகாரத்தில், செந்தில்பாலாஜிக்கும் அன்புநாதனுக்கும் பகை ஏற்பட, அவர்கள் இருவரும் எதிரும்புதிருமாக உள்ளார்களாம். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை வீழ்த்தியதன் பின்னணியில் அன்புநாதன் இருந்தார் என்றும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. கரூர் தொகுதி வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ள விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளராக கொண்டுவரப்பட்டது, பின்னர் அவரது பதவி பறிக்கப்பட்டது என அனைத்துக்கும் அன்புநாதனே காரணம் எனச் சொல்லப்பட்டது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், தொகுதிப் பொறுப்பாளர்களாக இருந்த அமைச்சர்களின் சார்பாக அந்தந்தத் தொகுதிகளுக்கு, பணம் சப்ளை செய்யும் பொறுப்பு அன்புநாதனிடம் ஒப்படைக்கப் பட்டதாம். அந்தக் காரியத்தை அவர் கச்சிதமாக செய்துமுடித்தாராம். திருச்சி, கோவை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள தொகுதிகளுக்கு, ஆம்புலன்ஸ் மூலம் எந்தப் பிரச்னையும் இல்லாமல், பாதுகாப்பாக பணம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே, இந்தத் தேர்தலிலும் கரன்சிகளை சப்ளை செய்வதற்கான பொறுப்பு சில மாதங்களுக்கு முன்பாக, அன்புநாதனிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில் பல இடங்களில் பண சப்ளை கச்சிதமாக செய்து முடிக்கப்பட்டு விட்டதாம். 
கண்டுகொள்ளாத அதிகாரிகள்...

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி காலையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, கரூர் மாவட்ட எஸ்.பி-யான வந்திதா பாண்டேவுக்கு போன் செய்துள்ளார். கரூர் அய்யம்பாளையம் பிரிவுச் சாலையில்  அன்புநாதனுக்குச் சொந்தமான குடோனில் ஆய்வு நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார். அதுவரை, லோக்கல் அதிகாரிகள் யாரும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். லக்கானி உத்தரவை அடுத்து, காலை 10.30 மணிக்கு வந்திதா பாண்டே மற்றும் தேர்தல் பறக்கும் படையினர், அன்புநாதனின் அய்யம்பாளையம் குடோனுக்குள் சென்றனர். குடோனின் நுழைவாயிலில் இருந்த ஆளுயர இரும்புக்கதவை போலீஸார் பூட்டிவிட்டனர். அந்தக் கதவின் ஓட்டைகள் வழியாகக்கூட யாரும் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்பதில் போலீஸார் கவனமாக இருந்தனர். கீழே விரிக்கப்பட்டிருந்த தார்பாய்களால் அந்தக் கதவை போலீஸ் அதிகாரிகள் மூடினர். அடுத்து, தேர்தல் செலவுக்கணக்குப் பார்வையாளர் சில்ஆசிஷ், அவரைத் தொடர்ந்து வருமானவரித் துறை இணை ஆணையர் மணிகண்டன், ராஜசேகர், நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் குடோனுக்குள் சென்றனர். 

அடுத்ததாக, மாவட்டத் தேர்தல் துணை அலுவலரான டி.ஆர்.ஓ அருணா அங்கு வந்தார். மாலையிலும், அடுத்த நாள் காலையிலும் என 24 மணி நேரத்துக்கு மேல் சோதனை தொடர்ந்தது.

இந்த ரெய்டு தொடர்பான தகவல் காட்டுத்தீ போல பரவியது. அய்யம்பாளையம் பொதுமக்கள், அ.தி.மு.க-வினர், தி.மு.க-வினர் என ஏராளமானோர் அங்கு குவிந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்