‘‘அம்மாதான் பெஸ்ட்!”

நமீதா சொல்லும் நச் விளக்கம்!

தேர்தலுக்கு சுவாரஸ்யம் சேர்க்க இதோ வந்துவிட்டார் நமீதா. மக்களை ‘மச்சான்ஸ்’ ஆக்க, ஆளும் கட்சி அவரை களத்துக்கு அழைத்து வந்துள்ளது. திருச்சி எப்போதும் அரசியல் திருப்புமுனைகளுக்கு பெயர்போன ஊர். அங்கு நடந்த தேர்தல் பிரசார மேடையில் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு உள்ளார் நமீதா.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த சனிக்கிழமை காலையில் கடிதம் எழுதினார் நமீதா. அந்தக் கடிதம் கிடைத்த அடுத்த சிலமணித் துளிகளில் கார்டனில் இருந்து பச்சைக் கொடிகாட்ட, நமீதா அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில்
அ.தி.மு.க-வில் இணைந்தார். கூட்டம் முடித்த கையோடு சென்னைக்குக் கிளம்பியவரிடம் பேசினோம்.

‘‘உங்களுக்குள் இவ்வளவு அரசியல் ஆர்வம் இருந்ததா? திடீர் என அ.தி.மு.க-வில் சேர்ந்துள்ளீர்களே?”

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. அரசியலுக்கு வரணும்னு எனக்கு நாலு வருஷமாவே ஆசை இருந்துச்சு. ரொம்ப ப்ளான் பண்ணிப் பார்த்துட்டு இப்ப அ.தி.மு.க-வுல சேர்ந்துட்டேன். எதுக்காகன்னு கேட்டீங்கன்னா... நம்ம அம்மா தமிழ்நாட்டுக்காகத் தமிழ் மக்களுக்காக நிறைய நல்லது பண்ணியிருக்காங்க. நிறைய நலத் திட்டம்லா தந்து இருக்காங்க. குறிப்பிட்டுச் சொல்லணும்னா ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்ல சாப்பாடு என அம்மா உணவகத்தில கொடுக்கிறாங்க. பெண்களுக்கு நிறையத் திட்டம் கொண்டுவந்திருக்காங்க. பெண்களுக்குத் தாலி வழங்குற திட்டம், தாய்மார்களுக்காக பஸ் ஸ்டாண்டில் தனி அறை கொண்டு வந்ததுனு...  பெண்களுக்கு நிறைய திட்டம்லாம் கொண்டுவந்தாங்க. அம்மா ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கறாங்க... பாதுகாப்புக் கொடுக்கறாங்க. அம்மாதான் பெஸ்ட். அம்மாதான் எல்லாருக்கும் நல்லது பண்ணுறாங்க. இந்தக் கட்சியில் உறுப்பினராகச் சேர்த்துக்கிட்டது ஹாப்பியா இருக்கு.”

‘‘அரசியலில் களமிறங்கிவிட்டீர்கள். அடுத்த தேர்தல்களில் எம்.பி., எம்.எல்.ஏ ஆகிவிடுவீர்களா?”

‘‘இப்போ எனக்கு எலெக்‌ஷன்ல போட்டியிடும் எய்ம் இல்லை. இப்போ மெயின் டார்கெட்... இந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று, அம்மா மறுபடியும் தமிழ்நாட்டுக்கு சி.எம் ஆகணும். இதுமட்டும்தான் என் ஆசை.”

‘‘நீங்கள் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்வீர்களா?”

‘‘நிச்சயமா பண்ணுவேன். நான் ரெடி. என்ன விஷயங்களைப் பேசப்போகிறேன்னு இப்ப சொல்ல முடியாது. என்ன பேசணும்னு அம்மாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேன். அம்மாவோட நல்ல ப்ளான்ஸ் பத்திப் பேசுவேன்.’’

‘‘கடந்த நான்கு வருடங்களாக நீங்கள் தி.மு.க-வில் சேரப்போவதாகவும், அடுத்து தே.மு.தி.க-வில் சேர காய் நகர்த்துகிறார்  எனவும் பேச்சுகள் அடிப்பட்டுக்கொண்டே இருந்தன. இப்போது அ.தி.மு.க-வில் சேர்ந்துள்ளீர்களே?”


‘‘அதெல்லாம் காஸிப்ஸ். அதற்கு நான் பொறுப்பில்லை. எப்பவும் நான் அ.தி.மு.க பார்ட்டி பத்திதான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். நான் வேற பார்ட்டி பத்தி நினைச்சுக்கூட பார்க்கலை. அ.தி.மு.க-வுலதான் சேரணும்னு நினைச்சேன். இப்போ வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அவ்வளவுதான். புரட்சித் தலைவி அம்மாதான் பெஸ்ட். அவங்கதான் எல்லாருக்காகவும் உழைக்கிறாங்க. எல்லாரும் நல்லா இருக்கணும்னு யோசிக்கிறாங்க. இன்னைக்கு... நாளைக்கு... எப்பவுமே அம்மாதான் ஜெயிப்பாங்க.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்