முடிந்ததா வெயில் மீட்டிங்... மனம் மாறிய ஜெ...

திருச்சி பிரசார பின்னணி!

டந்த 23-ம் தேதி திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் பிரசாரம் மேற்கொண்டார் முதல்வர் ஜெயலலிதா. மத்தியான வேளையில் கூட்டத்தை நடத்தியதில் விருத்தாசலம், சேலம் பொதுக் கூட்டங்களில் கடுமையான வெயிலால் 5 பேர்  பலியானார்கள். அந்தப் பிரச்னை பூதாகரமாகி, மனித உரிமை கமிஷன் வரை புகார் சென்றது.

திருச்சி கூட்டத்தில் அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் பொதுக்கூட்டத்தை மாலை 5 மணிக்கு என அறிவித்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை என 19 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாக அறிவித்திருந்தார்கள்.  ஹெலிபேட், தனிவிமானம் என நிகழ்ச்சிகளை வளர்த்திக்கொண்டு போனால் செலவுக் கணக்குக் கூடும் என உத்தேசித்து ஒரே மேடையில் 67 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.

தேர்தல் ஆணையத்துக்குப் பதில் சொல்வதில் இருந்து தப்பிக்க நினைத்த ஜெயலலிதா, விழுப்புரம், வேலூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட தொகுதிகளின் வேட்பாளர்களையும் இந்தக் கூட்டத்திலேயே அறிமுகப்படுத்தினார். இனி நடக்கப்போகும் ஜெயலலிதா பிரசாரக் கூட்டங்களில் வேட்பாளர்கள் மேடையில் அமர மாட்டார்கள். அதனால், கட்சிக் கணக்கில்தான் செலவு விவரம் சேரும் என்கிறார்கள்.

பழைய ஹெலிபேட் போதும்!

நாடாளுமன்றத் தேர்தலின்போது இதே ஜி கார்னர் மைதானத்தில்தான்   வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பேசினார். அப்போது ஜெயலலிதா வருகைக்காக மேடைக்கு அருகே ஹெலிபேட் அமைக்கப்பட்டது. அதன்பிறகு, வாகனம் ஓட்டிப் பழகுவதற்கும், கிரிக்கெட் விளையாடுவதற்கும் பயன்பட்டுவந்த அதே ஹெலிபேட் இப்போது புதுப்பிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், திருச்சி விமான நிலையத்தில் அவருக்காக அவரின் பிரதான ஹெலிகாப்டர் சென்னையில் இருந்து முன்னதாகவே வந்து நிறுத்திவைக்கப்பட்டது. சேலத்துக்கு செல்ல தனி விமானத்தில் திருச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் சேலம் போனதுபோல், திருச்சி விமான நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜி.கார்னர் மைதானத்துக்கு ஹெலிகாப்டரில் செல்வார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் சாலை வழியாகவே சென்றார். அந்த நான்கு கிலோ மீட்டருக்கு சாலை இருமருங்கிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட  2,500 போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்கள். அதில் 1,500 போலீஸார் மைதானத்தில் இருந்தார்கள். அதில் பெரும்பாலான காக்கிகள் பொதுமக்களுக்குத் தொப்பி வழங்குவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்தனர். இந்தக் கூட்டத்துக்காகச் சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி திரிபாதி, உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி ஆகியோர் இரண்டு நாட்களுக்கும் மேலாக திருச்சியில் தங்கி பல்ஸ் பார்த்தார்கள். மைதானம் முழுக்க 40 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

நிரம்பி வழிந்த டாஸ்மாக்!

காலையிலிருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட நான்கு போலீஸார் வெயில் கொடுமையைத் தாங்க முடியாமல் மயங்கி விழ, அவர்கள் திருச்சி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மாலை 5 மணி கூட்டத்துக்கு மதியமே திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர். வந்தவர்களுக்கு 300 ரூபாய்க்கு டோக்கன் முறையில் பணம் கொடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வருகை தந்த வாகனங்கள், விமான நிலையம் அருகில் நிறுத்தப்பட, தொண்டர்கள் வயர்லெஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் குவியத் தொடங்கினார்கள். இதேபோல் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நிரம்பி வழிந்தன. தங்கள் வெயிட்டை காட்டுவதற்காக விமான நிலைய சாலையை மறித்து குத்தாட்ட நிகழ்ச்சிகளை நடத்த பாதுகாப்புப் பணியில் இருந்த சத்தியமூர்த்தி, திருச்சி மாநகர கமிஷனர் சஞ்சய் மாத்தூர், அமைச்சர் தங்கமணி, தம்பிதுரை, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் திக்குமுக்காடிப் போனார்கள். இது மட்டுமல்லாமல், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றிவிட, மன்னார்புரம் ரவுண்டானா, கொட்டப்பட்டு மைதானம், பால் பண்ணை என வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதனால் பலரும் அவதிப்பட்டனர். தொண்டர்களும் பல கிலோ மீட்டர் நடந்தே மைதானத்துக்கு வந்து சேர்ந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்