“நீர்நிலைகளைப் பாதுகாக்கும் கட்சிகளுக்கே வாய்ப்பு!”

நிலம்... நீர்... நீதி!

மிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டின் மிகப்பெரிய துயரம்... நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நிலைகுலைய வைத்த வெள்ளப் பேரழிவு. சென்னை, தூத்துக்குடி, கடலூர் என வெள்ளப் பாதிப்பில் சிக்கிச் சின்னாபின்னமான நிகழ்வு... இன்றைக்கும் கதிகலங்க வைக்கத்தான் செய்கிறது. இதுபோல எதிர்காலத்தில் நிகழாவண்ணம் தடுக்கும் வகையில், நீர்நிலைகளைக் காக்கும் முயற்சியாக, வாசன் அறக்கட்டளை மூலமாக, ‘நிலம்... நீர்... நீதி!’ என்கிற இயக்கத்தை முன்னெடுத்துள்ளது விகடன்.

இதன் ஒரு கட்டமாக நீர்நிலைகள் பற்றிய ஆய்வு, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகள் என ஒரு பக்கம் பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில், சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் ‘மக்கள் கருத்துப் பகிர்வுக் கூட்டம்’ ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியச் சுற்றுச்சூழலியலாளர்கள் அமைப்பு (EFI), லயோலா கல்லூரியின் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் கைகோத்து இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

சென்னை, வியாசர்பாடியில் இருந்து வந்திருந்த இளங்கோ, “லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது பர்மாவில் இருந்து வந்த அகதிகளுக்கு வியாசர்பாடி ஏரியில் குடியிருப்பு இடங்கள் வழங்கப்பட்டன. மிஞ்சியிருந்த பகுதியில் அம்பேத்கர் கலைக்கல்லூரி கட்டப்பட்டது. நீர்நிலைகள் எல்லாம் இப்படித்தான் ஆக்கிரமிக்கப்பட்டன. நீர்நிலைகளைப் பாதுகாத்து மழைப் பேரழிவைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கும் கட்சிகளுக்கே நாம் வாய்ப்பளிக்க வேண்டும்” என்றார்.

அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.நாகராஜன் “மாநகரில் நீர்நிலைகள் பலவும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டன. மிச்சமிருக்கும் நீர்நிலைகளில் 5-க்கு 5 அடி குழி எடுத்து, அதில் தண்ணீர் தேங்கும் வகையில் பராமரிக்க வேண்டும். அந்த இடத்தை மீண்டும் தோண்டவோ... வெட்டவோ வேண்டாம். அதிலிருக்கும் மண்ணை வாரிப் போட்டாலே போதும்... அடுத்தடுத்து மழைக்கு அந்த இடங்கள் குளங்களாக மாறிவிடும். இதுபோன்ற குளங்கள், மழைத் தண்ணீர் சேகரிக்கும் இடங்களாகவும் இருக்கும்” என்று அக்கறையோடு ஆலோசனை சொன்னார்.

பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி “சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் ஒவ்வொன்றின் கரைகளிலும் அந்தந்த ஏரிகளைப் பற்றி விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நிலம்... நீர்... நீதி! சார்பில் நடத்த வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார்.

நிலம்... நீர்... நீதி! இயக்கத்தின் அடுத்தகட்ட பணிகள், அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

- மு.சித்தார்த்
படம்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்