“சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரவேண்டாம்!”

நம் விரல் நம் குரல்!

சினிமா நம்முடைய மூச்சில் கலந்துவிட்ட ஒரு விஷயம். ஆனால் சினிமாக்காரர்கள் இனிமேல் அரசியலுக்கு வரவே வேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்கள் ஈரோடு மாணவிகள்.ஆச்சர்யமாகத்தானே இருக்கிறது. ஆனால், அதுதான் உண்மை!

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். புதிய வாக்காளர்கள், இளம் வாக்காளர் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக  விகடன் குழுமம் சார்பில் ‘நம் விரல்... நம் குரல்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் கருத்தரங்கம் நடத்தி வருகிறோம். இந்தியத் தேர்தல் ஆணையம் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியது. இதன் தொடர்ச்சியாக இளம் வாக்காளர்களது சிந்தனையை உணர்வதற்காகக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் விகடன் நடத்திவருகிறது. இதன் காட்சிகள் விகடன் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் கடந்த வாரம் நடந்த விவாதத்தில் சினிமாவும் அரசியலும் குறித்துப் பேசப்பட்டது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு நடிகர்கள் வருவது புதிதல்ல. நடிகர்கள் அரசியலுக்கு வருவதன் நோக்கம் நிறைவேறுகிறதா இல்லையா? அவர்கள் அரசியலுக்கு வருவது அவசியமா என்று  மாணவிகள் விவாதித்தனர்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்றவுடன் உங்களது நினைவுக்கு வரும் நடிகர் யார்? என்று முதல் கேள்வி கேட்கப்பட்டபோது,  எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், குஷ்பு, சி.ஆர்.சரஸ்வதி, சிங்கமுத்து, சரத்குமார், சீமான், நக்மா என மாணவிகள் பட்டியல் போட்டார்கள்.

‘‘நடிகர்கள் அரசியலுக்கு வந்து என்னென்ன  முயற்சிகள்  செய்திருக்கின்றனர்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது மாணவிகள் சொன்னதன் சாராம்சம்:

‘‘விஜயகாந்த் மக்களுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்கிறார். மற்ற நடிகர்களை ஒப்பிடும்போது அவரால் இயன்ற நன்மைகள் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் கன மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது அவர்தான். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் உதவிகள் செய்வதை நடைமுறைப் படுத்துகிறார். மனதில் தோன்றுவதை எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் பேசுவது அவரின் முக்கியமான குணம். அவர் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது.”

‘‘ஜெயலலிதாவுக்கு இவ்வளவு மரியாதை இருப்பதற்குக் காரணம், அவர் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் என்பது தான். நடிகையாக இருந்தவர் என்றாலும் தைரியசாலி. நன்றாக ஆங்கிலம் பேசக்கூடிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவரது திறமைகளைப் பாராட்டத்தான் வேண்டும்.”

‘‘சினிமாவில் இருந்து முதன் முதலில் அரசியலுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அவர் மக்களோடு மக்களாகப் பணியாற்றினார். சினிமா காட்சிகளில் பிறருக்கு உதவுவது போல நடித்தவர், அ.தி.மு.க-வை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து மக்களுக்கு நல்லது செய்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு, யாரும் மக்கள் குறைகளைத் தீர்க்கும் எண்ணத்தோடு அரசியலுக்கு வருவது இல்லை. எம்.ஜி.ஆர் சினிமாவில் சம்பாதித்த பணத்தைக் கூட மக்களுக்காகச் செலவு செய்தார். அவரைப் பின்பற்றி வந்த ஜெயலலிதாவும் அவரைப் போலவே  தொடர்ந்து நல்லது செய்து வருகிறார்.”

‘‘அரசியலுக்கு வந்த சரத்குமார், சினிமாவில் மக்கள் மத்தியில் பேசப்பட்ட அளவுக்கு அரசியலில் பேசப்படவில்லை. அவர்மீது மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. முதலில்  அவர் அரசியல் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர் சினிமாவில்  தொடர்வதே நல்லது.”

‘‘கலைஞர் கருணாநிதி மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தினார். அதனால் மக்களும் பயனடைந்தனர். இப்போது வரும் எல்லா நடிகர்களும் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு மட்டுமே அரசியலுக்கு வருகின்றனர்.”

‘‘ அரசியல் கட்சிகள் தங்கள் முன்னேற்றத்துக் காகவும், நன்மதிப்புக்காகவும் நடிகர்களை எதிர்பார்க்கின்றன. திரைப்படங்களில் பார்த்துப் பழகிய நடிகர்கள் ஏதேனும் சொன்னால் மக்கள் ஒரு ஆர்வதோடு கேட்கிறார்கள்.  அதையே அரசியல் தலைவர்கள்  சொன்னால் மக்கள் அதைக் கண்டுகொள்வது இல்லை. அதனால்தான் சினிமாக்காரர்களை எல்லாக் கட்சிகளும் விரும்புகின்றன.”

‘‘நடிகர்கள் மக்களுக்கு நன்மைகள் செய்ய நினைத்தால் அதை நடிகர்களாக இருந்தே செய்ய முடியும். அரசியலுக்கு வந்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை.  அவர்கள் அரசியலுக்கு வந்தும் பெரிய மாற்றம் ஏதும் இதுவரை ஏற்படவில்லை.”

‘‘குஷ்பு, நக்மா போன்ற நடிகைகள் காங்கிரஸ் கட்சிக்கு வந்தனர். அதனால் அந்தக் கட்சிக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. நடிகர்களை வரவேற்பதைத் தவிர்த்து அரசியல் கட்சிகள், இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால் மக்களுக்கு நன்மைகள் நடக்கும். சமூகத்தின் மீது அக்கறையும், மாற்றங்கள் கொண்டு வர நினைக்கும் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்.”

இவ்வாறு பிரித்து மேய்ந்தார்கள் மாணவிகள். அடுத்ததாக, ‘‘இன்றைக்கு இருக்கும் நடிகர்களில் அரசியலுக்கு யாராவது வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

‘‘சூர்யா அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு பல நன்மைகள் செய்வார். அவரும் அவர் குடும்பத்தினரும் பல தொண்டுகள் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர் எந்த திசையில் இருந்தாலும் அவர்களுக்கு இயன்ற வரை உதவி செய்ய நினைப்பவர் சூர்யா. அவர் அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.”

‘‘சினிமாவில் இருந்து நடிகர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. வருவோர் யாரும் மக்களின் நன்மைக்காகப் பாடுபடுவது இல்லை. அவர்களின் சுயநலத்துக்காகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடும் வருகின்றனர். இருக்கும் அரசியல் கட்சிகளே, புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து இளைஞர்களை வரவேற்க வேண்டும்.”

‘‘சூர்யா போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் சமூக தொண்டாகச் செய்யும் உதவிகள் அனைத்தும் விளம்பரத்துகாக செய்வதாகத்தான் தெரியும். அவரின் அறக்கட்டளை உதவிகள் என்பது அவர் நடிகராக இருப்பதால் மட்டுமே சாத்தியமாகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் அதன் நோக்கம் மாறிவிடும்.”

‘‘சிவக்குமார் அரசியலுக்கு வர வேண்டும். அவருக்கு தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் பற்று அதிகம். அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பமே மக்களுக்காக நன்மை செய்ய ஆர்வத்துடன் செயல்படுகின்றனர்.”

‘‘ரஜினிக்கு உதவும் மனப்பான்மை அதிமாக இருக்கு. அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்வார். ஆனால், அவர் வருவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், வந்தால் மாற்றம் வரும்”

‘‘நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. வந்தாலும் மக்களுக்கான தேவைகளை யாரும் நிறைவேற்றப் போவதில்லை.”

‘‘பார்த்திபன், ஆர்.ஜே. பாலாஜி போன்ற சமூக அக்கறை கொண்ட நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். உதவ நினைக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் மக்களுக்குப் பயனுடையதாக இருக்கும்.”


‘‘நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களின் துறையில்தான் அதிகம் ஆர்வம் காட்டுவர். அரசியலுக்கு வந்ததும் அவர்களால் முழு வீச்சில்  செயல்பட முடியாது. மற்ற நடிகர்களும் சூர்யாவைப் போன்று அரசியலுக்கு வராமல் மக்களுக்கு உதவலாம்.”

 -தீர்க்கமான சிந்தனையுடன் சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கும் சக்தி படைத்தவர்களாக மாணவிகள் தங்கள் கருத்தைச் சொன்னது வரவேற்கத்தக்கது!

- சு.நந்தினி
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick