தேர்தல் களத்தில் ‘மறுமலர்ச்சி’ வேட்பாளர்கள்!

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா அணியில் ம.தி.மு.க வேட்பாளர்களாக 26 பேர் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம்காண்கிறார்கள். அவர்களில் தனித்துவம் வாய்ந்தவர்களில் சிலரைப் பற்றி...

மல்லை சத்யா (திருப்போரூர்): அடிப்படையில் ஒரு குங்ஃபூ வீரர் - தேசிய சாம்பியன். பி.ஏ. வரலாறு, எம்.ஏ. சமூகவியல் படித்தவர். மாமல்லபுரம் நகரச்செயலாளர் எனத் தொடங்கி, ம.தி.மு.க-வின் இளைஞர் அணிச் செயலாளராகி, இப்போது துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். 1996-ல் மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவராகத் தேர்வாகி, ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். அதனால், சிறப்புநிலை பேரூராட்சி என தி.மு.க அரசால் தேர்வு செய்யப்பட்டு, ரூ.2 கோடி சிறப்பு நிதியும் வழங்கப்பட்டது. அந்த நிதியில், குடிநீருக்கான பல திட்டங்களை நிறைவேற்றி பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றார். மாமல்லபுரம் சிற்பங்களைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியபோது, அன்றைய பிரதமர் வாஜ்பாயியை வைகோவுடன் சந்தித்து, கட்டணத்தைக் குறைக்க வைத்தார். 1996 சட்டமன்றத் தேர்தலில் திருப்போரூர், 2001 சட்டமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு 2006 தேர்தலில் எழும்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். 2014-ல் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்ற மல்லை சத்யாவின் பெயர், மாமல்லபுரம், திருப்போரூர் பகுதிகளில் பிரபலம்.

வே.ஈஸ்வரன் (கிணத்துக்கடவு):
மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த ஒரு பொறியாளர். தந்தை தி.மு.க-க்காரர். அதனால், சிறு வயதில் இருந்தே தி.மு.க-வில் ஈடுபாட்டுடன் இருந்தார். ம.தி.மு.க தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்தார். கட்சியின் பொறியாளர் அணி அமைப்பாளர், மதுக்கரை ஒன்றியச் செயலாளர் என பல பொறுப்புகளை வகித்து இப்போது, மாநில இளைஞர் அணிச் செயலாளர், கோவை மாவட்டச் செயலாளராக உள்ளார். தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதன்முறை.மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு, கோவை-பொள்ளாச்சி அகல ரயில் பாதை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம், பொள்ளாச்சியில் யானை - மனிதன் மோதல், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம், வெள்ளலூர் குப்பைக்கிடங்கு, கல்வி உரிமைச்சட்டம் என ஏராளமான பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். போராட்டங்களில் பல முறை சிறைக்குச் சென்றுள்ளார். கல்வி உட்பட பல விஷயங்களுக்காக நீதிமன்றத்தின் மூலமாகவும் போராடுகிறார். கோவையில் அண்ணா பல்கலைக்கழகம், நிதிப்பற்றாக் குறை என்ற காரணத்தைக் காட்டி மூடப்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது, அண்ணா பல்கலையில் 200 கோடி ரூபாய் நிதி இருக்கிறது என்பதை ஆர்.டி.ஐ மூலமாகக் கண்டறிந்து, பல்கலைக்கழகத்தைக் காப்பாற்றியவர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்