கழுகார் பதில்கள்!

ரேவதிப்ரியன், ஈரோடு.

 ‘இனி செயலில் இறங்குவேன்’ என்கிறாரே விஜயகாந்த்?


 அவரது செயல் என்பது சண்டைப் படமாக இருக்கக் கூடாது. குடும்ப சப்ஜெக்டாக இருந்தால் நல்லது!

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

 அ.தி.மு.க-வின் செல்வாக்கு சரிந்து வருவது உண்மையா?


  அ.தி.மு.க என்ற கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் கூட்டத்துக்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஆட்கள் அழைத்துவரப்படுகிறார்கள் என்பது உண்மைதான். அவர்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்தான். கிராமப்புற மக்கள் மனதில் பதிந்த அ.தி.மு.க-வின் செல்வாக்கு அப்படியே இருப்பதைத்தான் இந்தக் கூட்டங்கள் நிரூபிக்கின்றன. பொதுமக்களின் நம்பிக்கையை அ.தி.மு.க. இழந்துள்ளதா, தக்க வைத்துள்ளதா என்பது தேர்தலில் தெரியும்!

திருப்பூர் அர்ஜுனன்.ஜி., அவிநாசி.

 உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த்தை எதிர்த்து, பாட்டாளி மக்கள் கட்சி தனது வேட்பாளராக வழக்கறிஞர் பாலுவை நிறுத்தி உள்ளதே?


  விஜயகாந்த்தை எப்படியும் ஜெயிக்க விடக்கூடாது என்று திட்டமிட்டு உள்ளது பா.ம.க-வின் தலைமை. விருத்தாசலம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை என்று பா.ம.க-வின் வலுவான தொகுதிகளில்தான் விஜயகாந்த் தைரியமாகப் போட்டியிடுகிறார். இது, பா.ம.க-வை ஆத்திரப்பட வைத்துள்ளது. அதனால்தான், வலுவான வேட்பாளர் என்று வழக்கறிஞர் பாலுவை நிறுத்தி உள்ளார்கள். ‘விஜயகாந்த்தை மூன்றாவது இடத்துக்குத் தள்ள வேண்டும்’ என்று பா.ம.க நிறுவனர் சொன்னதாகத் தகவல்!

சம்பத்குமாரி, பொன்மலை.

 ‘செய்தீர்களா? செய்தீர்களா?’ என்று தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருவருமே ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டும் நிலை மாறி, ‘செய்தோமே! செய்தோமே!’ என்று பெருமையாகச் சொல்லும் நிலை தமிழகத்தில் எப்போது வரும்?


 உங்களது நம்பிக்கை பாராட்டத்தக்கது. அந்த நம்பிக்கை நிறைவேற நிஜமாக வேண்டிக் கொள்வோம். நம்பிக்கைதானே வாழ்க்கை!

ஆர்.ஷம்மு, குடந்தை.

 தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியது ஏன்?


 சுயநலமும் தன்முனைப்பும் தான், அவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளியை உண்டாக்கின. வாக்களித்த மக்களை நோக்கித் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து நடித்துவிட்டுப் போய்விட்டதன் விளைவு, மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் என்ன என்பதை இந்தக் கட்சிகளின் பிரமுகர்கள் உணரத் தவறி விட்டார்கள். அந்நியமாகப் போனார்கள். தன்னை வளப்படுத்திக் கொண்டால் போதும் என்று நினைத்தார்கள். அடுத்த தடவை நமக்கு வாய்ப்புக் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று, கிடைத்த இந்த வாய்ப்பில் முடிந்தளவுக்குச் சுருட்டிக் கொள்ள நினைத்தார்கள். இவை அனைத்தும் சேர்ந்து, எந்த ஆட்சி மாறினாலும் நாட்டின் நிலைமை மாறாது என்ற நிலையை உருவாக்கிவிட்டது.

சாதி, மதம், கட்சி பார்க்காமல் யார் நல்லவர் என்று பார்த்து வாக்களிக்கும் மனநிலைக்கு வாக்காளர்கள் வந்தால், நல்லவர்களை அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களாக நிறுத்தும். ஒரு கட்சி நல்லவரை நிறுத்தினால், அடுத்த கட்சியும் நம்மிடம் இருக்கும் நல்லவர் யார் என்று பார்க்கும். காலப்போக்கில் நல்லவர்களில் யார் ரொம்ப நல்லவர் என்ற சூழ்நிலை உருவாகும். அந்தக் காலம் விரைவில் வரட்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்