‘‘சீட் முக்கியம் இல்லை... சேவைதான் முக்கியம்!’’

சரத்குமார் பன்ச்

திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். பரபரப்பான பிரசாரத்தின் இடையே அவரிடம் பேசினோம்.

‘‘சமீபத்தில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகினீர்கள். மீண்டும், அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்துள்ளீர்கள். இந்த நிலைப்பாடு ஏன்?’’

‘‘அ.தி.மு.க-வுக்கும் எங்கள் கட்சிக்கும் நெருக்கம் இல்லாதது போன்ற நிலை ஏற்பட்டது. ஆகையால், கூட்டணியில் இருந்து விலகினோம். அ.தி.மு.க. தலைமை எங்களை, மீண்டும் அழைத்தது. எங்கள் கட்சி நிர்வாகிகளோடு கலந்துரையாடல் நடத்தி, நல்லதொரு முடிவாக அ.தி.மு.க-வோடு கைகோத்துள்ளோம்.’’

‘‘கட்சி ஆரம்பித்து ஒரு மாதம்கூட ஆகாத, மக்கள் தே.மு.தி.க-வுக்கு தி.மு.க கூட்டணியில் மூன்று இடங்கள். கட்சி ஆரம்பித்து ஆறு வருடங்கள் ஆகின்ற சமத்துவ மக்கள் கட்சியாகிய உங்களுக்கு அ.தி.மு.க-வில் ஒரு இடம். இதை எப்படி பார்க்கிறீர்கள்?’’

‘‘சேவை செய்வதற்கு சீட் முக்கியம் இல்லை. யார் நல்லது செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நான் கஷ்டப்பட்டு வந்தவன். நாளிதழில் வேலை பார்த்து, அதற்குப் பிறகு சினிமாவில் கதாநாயகனாக ஆகி, பிறகு மக்களுக்குச் சேவைசெய்ய அரசியலுக்கு வந்துள்ளேன். எங்களுக்கு சீட் முக்கியம் இல்லை. மக்களுக்கு நல்லது செய்வதே முக்கியம்.’’

‘‘அ.தி.மு.க பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலால் மக்கள் இறந்துபோனார்களே?’’

‘‘அவர்களுக்கு என் வருத்தங்கள். இறந்தவர்களைப் பற்றிய தகவல்கள், அம்மா பார்வைக்குச் சென்றுள்ளன.  அம்மா விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்.’’

‘‘மக்கள் நலக் கூட்டணியைப் பற்றி?’’

‘‘வைகோ மிகவும் பொறுமைசாலி. ஆனால், தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்தபிறகு அவரும் பொறுமை இழந்து பல இடங்களில் ஆவேசம் காட்டுகிறார்.’’

‘‘அ.தி.மு.க-வில் பணப்புழக்கம் அதிகம் இருப்பதாகத் தகவல் வருகிறதே?’’

‘‘அப்படி எதுவும் இல்லை. மக்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தைக் காட்டினாலே, மிகுந்த வரவேற்பு காட்டுகிறார்கள்.’’

‘‘நடிகர் சங்க விவகாரத்தில், ஜெயலலிதா உங்களுக்கு உதவ முன்வரவில்லையே?’’

‘‘நடிகர் சங்கத் தேர்தலில், அரசியல் இல்லாமல் இருப்பதுதான் நல்லது.’’

‘‘உங்களோடு நடித்த நடிகை நமீதா தற்போது அ.தி.மு.க-வில் இணைந்துள்ளாரே?”

‘‘கலைத்துறையில் உள்ளவர்கள் எல்லோரும் அரசியலில் ஈடுபடுவது, வரவேற்கத்தக்க ஒன்றுதான்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்