“திராவிடக் கட்சிகளுக்கு ஓட்டு போடுவது பெண்களுக்கு செய்யும் துரோகம்!”

வசந்தி தேவி சாட்டை

ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுவார் என பரபரப்பாகப் பேசப்பட்ட நேரத்தில், கல்வியாளர் வசந்தி தேவி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தின் தலைவர் என செயல்பட்டவர், வசந்தி தேவி. பிரபல தொழிற்சங்கத் தலைவரான சர்க்கரைச் செட்டியாரின் பேத்தி. வசந்தி தேவியின் தந்தை, திண்டுக்கல் நகராட்சித் தலைவராக இருந்தவர். இவரது குடும்பத்தில் பல சாதிமறுப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. வசந்தி தேவியை சந்தித்தோம்.

“கல்வியாளராகிய நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்களே?”

“எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. கல்வியிலும் அரசியல் இருக்கிறது. கல்வி, எப்படி இருக்க வேண்டும், அது யாருக்குப் போய் சேர வேண்டும் என அனைத்தையும் முடிவுசெய்வதே அரசியல்தான்.”

“முதல்வரை எதிர்த்துப் போட்டியிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“இந்தத் தொகுதியில் முதல்வர் மட்டுமல்ல. பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். அவர்கள் எல்லோரையும் எதிர்த்துதான் போட்டியிடுகிறேன்.”

“வி.சி.க-வின் வேட்பாளர் ஆகியது எப்படி?”


“திடீரென ஒருநாள் வி.சி.க தலைவர் திருமாவளவனும், ரவிக்குமாரும் என்னைச் சந்தித்தார்கள். ஆர்.கே.நகரில் போட்டியிடுமாறு கேட்டார்கள். எனக்கு இருக்கும் சமூகப் பொறுப்புகளை உணர்ந்து வேட்பாளர் ஆவதற்கு சம்மதித்தேன்.”

“சரியான நபர், தவறான கூட்டணியில் போட்டியிடுகிறார் என்று சிலர் விமர்சிக்கிறார்களே?”

“என் கொள்கையில் உடன்பட்டவர் களுடன்தான் சேர்ந்துள்ளேன். மக்கள் நலக் கூட்டணியின் பொதுச்செயல் திட்டத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக, இந்தக் கூட்டணி உருவாகி இருப்பதை நல்லதொரு மாற்றமாகப் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை இதுதான் சிறந்த கூட்டணி.”

“ ‘பொதுவேட்பாளர்’ என்று உங்களை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்றும், வி.சி.க ஒரு தலித் கட்சி என்பதால் அதனுடன் அடையாளப் படுத்திக்கொள்ள உங்களுக்குத் தயக்கம் உள்ளது என்றும் சிலர் விமர்சித்தார்களே?”

“இது, முழுக்க முழுக்க அபத்தமானது, அவதூறானது. அப்படி நான் நினைத்து இருந்தால், வேட்பாளர் ஆவதற்கு முன்வந்திருக்கவே மாட்டேனே? வி.சி.க என்பது ஒரு சாதிக் கட்சி அல்ல. அது, அடித்தட்டு மக்களுக்கான ஒரு கட்சி. ‘ஒடுக்கப்பட்ட அனைவருக்குமான விடுதலைக்கான கட்சி’ என்று திருமாவளவனே சொல்கிறார். தலித் விடுதலைக்கு அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும். என்னைப் பொறுத்தவரை, வி.சி.க என்ற ஒரு கட்சிக்கு மட்டும் நான் வேட்பாளர் அல்ல. அந்த அணியில் உள்ள அனைத்துக் கட்சிக்குமான வேட்பாளர். நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினர் கிடையாது. எனவே, ஆர்.கே.நகரில் உள்ள எந்தக் கட்சியையும் சாராத அனைவருக்கும் நான் வேட்பாளர்தான். அந்த வகையில்தான் பொதுவேட்பாளர் என்று சொல்கிறேன். இதைத் திரித்து, என்னையும் வி.சி.க-வையும் கொச்சைப்படுத்த சிலர் அவதூறு செய்கிறார்கள்.”

“இந்த முதிய வயதில் பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுவது கஷ்டமாக இல்லையா?”

“எனக்கு 77 வயதாகிறது. தேர்தல் களத்துக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்தது இல்லை. ‘உங்களைப் போன்ற கல்வியாளர்கள் தேர்தல் களத்துக்கு வரவேண்டும்’ என்று திருமாவளவனும், ரவிக்குமாரும் அழைத்தார்கள். அதிகாரத்தில் இருந்த, இருக்கிற கட்சிகள் வந்து கேட்டிருந்தால் கண்டிப்பாக நான் ஒப்புக்கொண்டிருக்கவே மாட்டேன். வி.சி.க கேட்டதாலேயே, வேட்பாளர் ஆவதற்கு ஒப்புக்கொண்டேன். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடும் வி.சி.க  சார்பில்  போட்டியிடுவதைப் பெருமையாகவே நினைக்கிறேன். கஷ்டமாக இல்லை.”

“பிரசாரத்தில் எந்தப் பிரச்னைகளை முன்வைக்கிறீர்கள்?”

“கடந்த 50 ஆண்டுகளாக, தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறிமாறி ஆட்சிக்கு வந்து ஏராளமான ஊழல்கள் செய்து, மக்களைப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் வைத்துள்ளன. ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும். மதுக்கடைகளைத் திறந்து லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் மது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். மதுவினால், தமிழக மக்களின் வாழ்க்கை சின்னப்பின்னாமாகி இருக்கிறது.

மதுவினால், பெண்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குடியை ஒழிக்காமல் உழைக்கும் மக்களைக் காப்பாற்ற முடியாது. தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போடுவது, மதுவால் வாழ்க்கையை இழந்த பெண்களுக்குச் செய்யும் துரோகம்.”

“ஆர்.கே.நகர் தொகுதியில் பல கோடி ரூபாயில் திட்டங்கள் செயல்படுத்தி இருப்பதாக ஜெயலலிதா சொல்கிறாரே?”


“உண்மையிலேயே, அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்குமானால், ஆர்.கே.நகர் ஏன் இவ்வளவு பின்தங்கிய தொகுதியாக இருக்கிறது?”

- ஆ.பழனியப்பன், எஸ்.மகேஷ்
படம்: கே.ராஜசேகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick