நலத்திட்டங்கள் எதற்கு... பஞ்சமா நடக்கு?

பச்சமுத்து பாய்ச்சல்

‘‘தமிழகத்தில் மன்னராட்சிபோல் ஆட்சி நடத்தும் அ.தி.மு.க., தி.மு.க-வை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, மக்களாட்சி மலர வாய்ப்புத் தாருங்கள்’’ - என்ற ஒற்றை முழக்கத்துடன் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘இலவசங்கள், நலத் திட்டங்கள், மானியங்களுக்கு எதிராகப் பேசி வருகிறீர்களே?’’

‘‘நலத் திட்டங்கள் என்று சொல்பவர்கள் துரோகிகள். இங்கு என்ன பஞ்சமா நடக்கு? இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுக்கிறார்கள். இவர்கள் ஏன் ஆந்திராவைப்போல் நதிகளை இணைக்க வில்லை? விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என்கிறார்கள். அதற்குப் பதிலாக கஷ்டப்படுகிறவர்களுக்கு வேலை கொடுங்கள், வட்டி அதிகம் என்றால் வட்டியைக் குறையுங்கள்.’’

‘‘தேசியக் கட்சிகளை தமிழக மக்கள் ஏற்பதாகத் தெரியவில்லை. ஆனால், நீங்கள் பி.ஜே.பி-யுடன் கைகோத்து உள்ளீர்களே?’’


‘‘தமிழகம் ரசிகர் மன்றங்களால் ஆளப்படுகிறது. பெரியாரின் சொல்லைக் கேட்டு அண்ணா தேர்தலில் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்னை ஆரம்பித்திருக்காது. அண்ணா, எம்.ஜி.ஆரை அரசியலுக்கு அழைத்து வந்தார். அவரின் ரசிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள். இப்படித்தான் விஜயகாந்த், ஜெயலலிதா, கருணாநிதி எனப் பலரும் சினிமாவில் இருந்து வந்தனர். இந்த ரசிகர் அரசியலைத் தூக்கி எறிந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும்.’’

‘‘ஜெயலலிதாவின் இந்த ஐந்தாண்டு ஆட்சி எப்படி?’’

‘‘இலவசமாக உப்பு கொடுத்தேன். தண்ணீர் கொடுத்தேன் என்று சொல்கிறார். கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கிறதா? இல்லையே. அ.தி.மு.க-வில் இருப்பவர்கள் ஆண்மகனாக இருக்க முடியுமா? அ.தி.மு.க அமைச்சர்களின் மனைவிகள் எல்லாம், எங்களுக்கு இனி வீரர்கள்தான் கணவர்களாக வேண்டும்... இந்தக் கோழைகள் வேண்டாம் எனச் சொல்ல வேண்டும். அப்போதுதான், இவர்களுக்குச் சூடு சுரணை வரும்.’’

‘‘இந்திய ஜனநாயக கட்சி, ஒரு சாதி கட்சி எனச் சொல்லப்படுகிறதே?’’

‘‘இல்லை. கட்சி ஆரம்பித்து எட்டு மாதங்களே ஆன நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 120 வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய நிலை. அதனால், வேறு சமூகத்தினருக்கு அதிகமாகப் பரிச்சயம் இல்லை என்பதால், நாங்கள் அதிகமாகக் குறிப்பிட்ட சமூகத்தவரை நிறுத்த வேண்டிய நிலையில் இருந்தோம். ஆனால், இப்போது பல தொகுதிகளில் அனைத்துச் சமுதாய வேட்பாளர்களையும் களமிறக்கி உள்ளோம். இதற்குமுன் பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட்டார்கள். எங்களுடைய கட்சி தேசிய கட்சி. இதில் சாதி இல்லை.’’

- சி.ய.ஆனந்தகுமார்
படம்: என்.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்