“ஆன்லைன் மூலம் ஓட்டு போடும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும்!”

‘நம் விரல்... நம் குரல்’ விழிப்பு உணர்வு பிரசாரம்

விகடன் குழுமம் சார்பில் தேர்தல் விழிப்பு உணர்வு குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரிகளிலும், பொது அரங்குகளிலும் நடத்தப்பட்டு வந்த ‘நம் விரல்... நம் குரல்’ விழிப்பு உணர்வு பிரசார நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் இருக்கும் ‘ஸ்பெக்ட்ரம் மாலி’ல் நடத்தப்பட்டது.

முதல் தளத்தில் நடந்த ‘நம் விரல்... நம் குரல்’ நிகழ்ச்சியில், மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அதில், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்த செயல்முறைகளை விளக்கினர்.

இதில் பங்கேற்ற பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் இதோ...

பிரபா (இல்லத்தரசி): ‘‘அரசாங்கம் என்பது ஒருவர் கையில் அல்லது இருவர் கையில் மட்டுமே மாறி மாறி இருக்கக் கூடாது. ஒரு மாற்றம் வரவேண்டும். விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க நல்ல திட்டங்கள் வகுக்க வேண்டும். எனக்கு இரண்டு குழந்தைகள். நான் இப்போது சென்னையில் உள்ளேன். எனக்கு, சொந்த ஊரான மார்த்தாண்டத்தில் ஓட்டு உள்ளது. ஓட்டு போட ஆசையாக உள்ளது. என் போன்றவர்கள் வாக்களிக்க எதுவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்தால் நன்றாக இருக்கும்.’’

மரியா ரோட்ரிகுவஸ் (வழக்கறிஞர்): ‘‘ஓட்டு போடுவது ஜனநாயக உரிமை. 18 வயதில் இருந்து இதுவரை ஒரு தேர்தலைக்கூட நான் புறக்கணித்தது இல்லை. எல்லாத் தேர்தல்களிலும் ஓட்டு போட்டுள்ளேன். நல்ல தலைவருக்கும் ஆளுமைத் திறன் கொண்டவருக்கும்தான் வாக்களிக்க வேண்டும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளைத் தவிர, வேறு எந்தக் கட்சிகளுக்கும் ஆளுமைத் திறன் இருப்பதாகத் தெரியவில்லை.’’ 

சிட்டி பாபு (நிறுவனத்தின் தலைவர்):
‘‘100 சதவிகித வாக்குப்பதிவுக்காக அரசாங்கம் அதன் பணிகளைச் செய்து வருகிறது. நாங்கள் எங்களுடைய முழு ஆதரவையும் அளிக்கிறோம். மக்களாட்சி முறை இன்னும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு எட்டாக்கனியாகவும், கனவாகவுமே இருக்கிறது. நாம் தவறாமல் வாக்குப்பதிவு செய்திட வேண்டும்.’’

காஞ்சனா (இல்லத்தரசி): ‘‘அனைத்து மக்களும் நேர்மையான அரசியலை எதிர்பார்க்கும்போது, நேர்மையான வாக்குப்பதிவும் நடைபெற வேண்டும். கள்ள ஓட்டுகள் போடுவதைத் தவிர்க்கவும் தடுக்கவும் வேண்டியது அவசியம்.’’

see also: “சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரவேண்டாம்!”

மோகன சந்திரன் (துணை ஆணையர் இ.ஆர்.சி.): ‘‘நாங்கள் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து ஓட்டர்ஸ் எஜுகேஷன் ப்ரோக்ராம் நடத்தி குடிமக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பல கல்லூரிகளில் கலை நிகழ்சிகளை நடத்தி இருக்கிறோம். இப்போது, பள்ளிக் குழந்தைகளுக்கு இதுபற்றிய செய்திகளை விதைத்து பேட்ஜுகள் கொடுத்தோம். அதில், ‘என் அப்பாவும் அம்மாவும் கட்டாயம் வாக்களிப்பார்கள்’ போன்ற வாசகங்கள் இருக்கும். இவை அவர்களுக்கும் ஒரு சமுதாயப் பார்வையைக் கொடுப்பதோடு, பெரியவர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும்.’’

குபேந்திரன் (மாணவர்): ‘‘யார் ஜெயிக்கப் போகிறார் என்பது இரண்டாவது கேள்விதான். முதலாவது, நாம் அனைவரும் வாக்களிக்கிறோம் என்பதுதான். மாற்றம் எப்போதுமே இருந்து கொண்டு இருப்பது. இந்தத் தேர்தலிலும் அந்த மாற்றம் ஏற்பட நாம் வாக்களிக்க வேண்டியது நம் கடமை. ஏனென்றால், ஒரு வாக்காளன்தான் உண்மையிலேயே கேள்வி கேட்கும் உரிமையைப் பெற்றவன்.’’

ஜார்ஜ் விஜய் (நடிகர்):
‘‘நாம் அனைவரும் நிறை குறைகளைச் சொல்லியே பழகிவிட்டோம். நாம் ஓட்டு போடாமல் இருப்பதும் ஒரு பெரிய குறைதான். 100 சதவிகித வாக்குப்பதிவு ஏற்பட்டால்தான் நம்முடைய முழுமையான விருப்பம் என்ன என்பதை நாம் அறிய முடியும்.’’
சுமதி (இல்லத்தரசி): ‘‘வயதானவர்கள் பெரியவர்களுக்கு வாக்களிக்கப் போகும்போது, நெரிசல் ஏற்படாதவாறு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அனைவரின் பங்களிப்பும் உறுதி செய்யப்படும். வயதானவர்தானே என்று உதாசீனப்படுத்திவிட முடியாது. அவருடைய ஓட்டுக்கும் மதிப்பு உண்டு.’’

சுரேகா (பெரம்பூர்): ‘‘நான் வேலை செய்வது புனேயில். இங்கு தேர்தல் அன்று விடுமுறை உண்டு. ஆனால், அங்கு கிடையாது. அதனால் வெளியூர்களில் பணிபுரியும் அல்லது படிக்கும் என் போன்றோருக்கு ஆன்லைன் மூலம் ஓட்டு போடும் வசதி ஏற்படுத்தித் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.’’

- மு.சித்தார்த்
படங்கள்: தி.குமரகுருபரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick