கழுகார் பதில்கள்!

படங்கள்: தி.விஜய், எம்.விஜயகுமார்

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

 வெற்றி தோல்வி என்பது ஒருபுறம் இருக்க, அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் ஜெயலலிதாவின் ஊக்கத்துக்கு இரட்டை இலையின் மவுசுதான் காரணமா?


 ஆமாம். மங்காத இரட்டை இலையின் மவுசுதான் காரணம். இரட்டை இலை, எம்.ஜி.ஆர்., இலவசங்கள், பணம், தனது சினிமா இமேஜ்  இவை ஐந்தையும் நம்பித்தான் அரசியலில் ஜெயலலிதா நிற்கிறார். நிலைக்கிறார். நீடிக்கிறார். மற்றவர் யாரையும் அவர் நம்பவில்லை. அவரது அலட்சியமான நடவடிக்கைகளுக்கு இதுதான் காரணம்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

 ‘தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன்’ என்கிறாரே வைகோ?


 தவறான முடிவுகளில் அவரைப்போல உறுதியாக யாராலும் இருக்க முடியாது. பாண்டவர் அணியில் நானே அர்ஜுனன் என்று சொல்லிவிட்டு, அர்ஜுனனே போருக்குப் போகாமல் இருந்தால் எப்படி இருக்கும்? ‘சரியானவருடன் செல், வேறு வழியில்லாவிட்டால் தவறானவருடன் தெரிந்துகொண்டே போ. ஆனால், குழப்பமானவருடன் ஒருபோதும் செல்லாதே’ என்பது பழைய பழமொழி.

(உங்களுக்கு இப்படி ஒரு கேள்வி கேட்க போஸ்ட் கார்டு வாங்கிக் கொடுத்தது மு.க.ஸ்டாலினா?!)

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

 கொதிக்கும் கோடையில்தான் இந்தத் தேர்தலை நடத்த வேண்டுமா?


 அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதுவும் அடுத்து அமைய இருக்கும் புதிய ஆட்சி நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஜனவரியில் தேர்தல் நடப்பது மாதிரியே முன்கூட்டியே ஒரு ஆறு மாத காலத்தை விட்டுக்கொடுத்தால் அடுத்தடுத்து ஜனவரியில் தேர்தல் நடக்கும். அந்த பெரிய மனப்பான்மை ஆட்சியாளர்களுக்கு வருமா?

ஆர்.ஷம்மு, குடந்தை.

 நடைமுறைக்கு சாத்தியப்படாத பல விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறதே தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை?


 நடைமுறைக்கு சாத்தியப்படக்கூடிய விஷயங்களை எல்லாம் இந்த அரசியல்வாதிகள் செய்து கொடுத்து விடுவார்களா? பொதுவாகத் தேர்தல் அறிக்கை என்பது ஓர் அரசியல் கட்சியின் கனவுகள்... கொள்கைகள். அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்திவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதேபோல், இந்த அறிக்கையில் உள்ளதைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சொல்ல முடியாது. தேர்தல் அறிக்கையை வெளியிடும் கட்சியானது ஆட்சிக்கு வந்தால், எந்த மாதிரியான திசையில் போகும் என்பதைக் காட்ட இவை பயன்படும்.
மேலும், தேர்தல் அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டுத்தான் மக்கள் வாக்களிக்கிறார்களா?

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

  ‘தயாநிதி மாறனை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று கருணாநிதி பேசலாமா?’ என்று கேட்கிறாரே ராமதாஸ்?


  காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளவர்களுக்கு தயாநிதி ஊழல் ஒரு கடுகுதானே? ராமதாஸ் கேட்பதில் தவறு இல்லை. சி.பி.ஐ-யால் இரண்டு முக்கியமான வழக்குகளில் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், கருணாநிதி அவரைத்தான் அருகில் மேடையில் வைத்துள்ளார்.

ஆ.ராசாவை ஒதுக்கியது மாதிரி தயாநிதியை ஒதுக்க முடியுமா கருணாநிதியால்? பாசம்... குடும்பப் பாசம்!

இதே குடும்பப் பாசத்தை ராமதாஸாலும் மீறமுடியவில்லையே? மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி கொடுக்கப்பட்டது தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீதும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இத்தகையச் சூழலில் அவரை முதல்வராகவே முன்னிறுத்துகிறாரே, அப்பா ராமதாஸ்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

 கருணாநிதியின் பேச்சில் தடுமாற்றம் உள்ளதைக் கவனித்தீர்களா?


  63-ல் நிலை தடுமாறுபவர்களை நோக்கும்போது 93 வயதில் கருத்துடன் பேசுவதே வியப்புதான்.

எம்.வான்மதி, எடப்பாடி.


 அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவை நேர்மையா... ராஜதந்திரமா?


 வெற்றி பெறுவதற்கு ராஜதந்திரம் தேவை. ஆனால், அதைத் தக்கவைப்பதற்கு நேர்மை அவசியம்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.


 கரூரில் கைப்பற்றப்பட்ட பணம் மறைக்கப்பட்டதா?


 கரூரில் கைப்பற்றப்பட்ட பணத்தின் அளவு குறித்த சந்தேகம் இன்னமும் விலகவில்லை. இந்தச் சந்தேகங்களுக்குத் தேர்தல் கமிஷன் உரிய விளக்கத்தைத் தரவும் இல்லை. கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு, அது யாருடைய பணம், அன்புநாதனுக்கே முழுமையாகச் சொந்தமானதா, யாருக்காக அவர் வைத்திருந்தார், யாரிடம் இருந்து வந்தது, யாருக்கு தரச் சொல்லப்பட்டது என்பது போன்ற விஷயங்களில் தேர்தல் கமிஷன் மௌனம் சாதிக்கிறது.

மத்திய தேர்தல் ஆணையம், ஆணையர்கள் இதில் நேரடியாகத் தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

 ‘காங்கிரஸ் எதிரி என்றால், என்.ஆர்.காங்கிரஸ் துரோகி’ என்று ஜெயலலிதா சாடி உள்ளாரே?


 ஜெயலலிதாவுக்கே தண்ணி காட்டியவர் ஒருவர் உண்டென்றால், அது புதுவை ரங்கசாமிதான். அதனால், துரோகி என்று சொல்லாமல் என்ன சொல்வார்?

கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துத்தான் ரங்கசாமி வென்றார். வென்றதும் ஜெயலலிதாவைப் பார்க்கக்கூட வரவில்லை. போகட்டும். இப்போது மாநிலங்கள் அவைத் தேர்தல் நடந்தது. தன்னுடைய ஆளையே அ.தி.மு.க-வுக்கு அனுப்பி மாநிலங்கள் அவை எம்.பி ஆக்கினார் ரங்கசாமி. அ.தி.மு.க சார்பில் வென்ற அவர், அதிகமான நேரம் ரங்கசாமியுடன்தான் இருக்கிறார்.

ரங்கசாமி சாதாரணமான ஆள் அல்ல என்பது தெரிகிறதா?

உமரி பொ.கணேசன், மும்பை-37.


 ஜெயலலிதாவின் இரட்டை மேடை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதே?


 தனது கட்சி வேட்பாளர்கள் தனக்கு இணையாக தனக்குப் பக்கத்தில் உட்காரும் உரிமை படைத்தவர்கள் அல்ல என்று ஜெயலலிதா நினைத்து இப்படி இரண்டு மேடைகள் அமைத்ததாகப் பலரும் சொல்கிறார்கள். ஆனால், இரண்டு மேடைகளில் உட்கார்ந்து இருப்பதுதான் ராசியானது என்று ஜோசியம் சொல்லப்பட்டதாகத் தகவல். எனவே, மக்கள் இதை உணர்ந்து தங்களது அதிருப்தியை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்