அவமானங்களைத் தாண்டி போராட வேண்டும்!

மதுவிலக்கு ‘வீடியோ’ ஜமீலா ஆவேசம்!

‘செம தைரியசாலி இந்த ஜமீலா.’ அந்த வீடியோவைப் பார்த்து இருந்தால் நீங்களும் இப்படிச் சொல்வீர்கள்.

‘‘எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்தி பூரண மதுவிலக்கைக் கொண்டு வரப்படும்” என்று ஜெயலலிதா சொன்னார்.

அதற்கு ஜமீலா, ‘‘படிப்படியா மதுவைக் குறைப்பேன்னு நீங்க அன்றைக்குச் சொல்லி இருந்தால், ஒரு சசிபெருமாள் இறந்திருக்க மாட்டார். அதைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னார்களா சட்டசபையில்? அமைச்சர்கள்கூட சொல்லவில்லையே? படிப்படியாகக் குறைப்பேன் என்று சொல்லி இருந்தால் எல்லாரும் பொறுமை காத்திருப்பார்கள். எல்லாரும் குடிங்க குடிங்க என்று இந்தப் பக்கம் ஊற்றிக் கொடுத்தார்கள். உங்கள் தாலியை எல்லாம் அறுக்கிறோம். ஆனால், எல்லாரும் என்னை அம்மான்னு சொல்லுங்கள் என்கிறார்களே?” என்று ஆவேசம் காட்டியது அந்த வீடியோ. இப்படிப் பேச உண்மையில் தைரியம் வேண்டும் அல்லவா?

யார் இந்த ஜமீலா?

இப்போது பி.ஜே.பி கட்சியில் இருக்கிறார். அந்தக் கட்சியின் ராயபுரம் தொகுதி வேட்பாளர். வெயிலில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த அவரை, மடக்கிப் பேசினால் அமைதியாகப் பேசுகிறார்.

‘‘தர்மபுரியில்தான் நான் படித்து வளர்ந்தேன். அங்கே, பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். வீட்டுக்கு யாராவது வந்தால், அவர்கள் முன்னாடி உட்காரக் கூடாது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சூழலிலும் என் அப்பா, என்னை நல்லா படிக்க வைத்தார். ஆண் - பெண் சமநிலையைக் கற்றுக் கொடுத்ததும் பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்று புரியவைத்ததும் அவர்தான். சிறிய வயதிலிருந்தே சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அதற்காகத்தான் ஊடகம் சார்ந்த படிப்பு படித்தேன். அப்படியே அரசியல் ஆர்வம் வந்தது.

2011-ல் இருந்து அரசியலில் இருக்கிறேன். அரசியலில் பெண்களுக்குச் சரியான அங்கீகாரம் கிடைத்ததே இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றுதான் ஒரு வருடத்துக்கு முன் சமத்துவ மக்கள் கட்சியில் சேர்ந்தேன். சேர்ந்த சில மாதங்களிலேயே தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு அறிமுகம் ஆனேன். அது சமூகத்துக்குப் பயன்படும் கட்சியாக இல்லை. அங்கே எனக்கு எதிராகச் சில சதிகள் நடப்பதும் தெரிந்தது. கட்சியின் பெயரில் மட்டும்தான் சமத்துவம் இருக்கிறது என்று தெரிந்ததும் அந்தக் கட்சியில் இருந்து விலகி பி.ஜே.பி-யில் சேர்ந்தேன்.

மக்களுக்குத் தேவைப்படுகிற அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த தேசியக் கட்சியான பி.ஜே.பி-யில்தான் வாய்ப்புள்ளது. பெண் வேட்பாளர் என்றாலும்கூட சமத்துவம் அறிந்து அவர்களுக்கான முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். சமத்துவ மக்கள் கட்சியில் இருந்தபோது கிடைக்காத அங்கீகாரம், இங்கு சேர்ந்த சில மாதங்களிலேயே எனக்குக் கிடைத்தது. பெண் தலைவர்களை அதிகம்கொண்ட கட்சி பி.ஜே.பி என்று சொல்லலாம். அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவைவிட கட்சிக்குள் மரியாதை அதிகமாக இருக்கிறது. சமத்துவத்தைப் பரப்ப நினைக்கும் என்னைப் போன்ற போராளிகளுக்கு ஒரு நல்ல இடமாக பி.ஜே.பி இருக்கிறது.

See Also: “திராவிடக் கட்சிகளுக்கு ஓட்டு போடுவது பெண்களுக்கு செய்யும் துரோகம்!”

ராயபுரம் தொகுதியில் இப்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் கடந்த 20 வருடங்களாகப் பதவியில் இருக்கிறார். ஆனால், அங்குள்ள மக்களுக்கோ, அந்தப் பகுதி முன்னேற்றத்துக்கோ அவர் எதுவும் செய்யவில்லை. அந்தப் பகுதி மக்கள் ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அங்கு பிரசாரத்துக்குப் போனபோது எனக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. மக்களுக்குப் பெரும் பிரச்னையாக இருப்பது தரமற்றச் சாலைகளும், சுத்தம் இல்லாத தண்ணீரும்தான். அவர்களின் கோரிக்கையை நிறைவுசெய்து நிச்சயம் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவேன். மாற்றம் தேவைப்பட மக்கள், பி.ஜே.பி-யை வெற்றி பெறச் செய்வார்கள்’’ என்றார் நம்பிக்கையோடு.

ஜெயலலிதாவுக்கு எதிராக வீடியோவில் பேசியதற்குப் பின் தனிப்பட்ட முறையில் மிரட்டல் வருவதாக ஜமீலா சொல்கிறார். ‘‘அரசியலில் இதெல்லாம் சகஜம். இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் அரசியலுக்கு வருகிறோம். ஆனால், பெண் என்பதால் அவமானப்படுத்தும் அளவில் திட்டுகிறார்கள்.  அரசியலில் அவமானங்களைத்  தாண்டிப் போராட வேண்டும். இத்தகைய விமர்சனங்களே போராடவும் தூண்டுகின்றன” என்கிறார் ஜமீலா!

- சு.நந்தினி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick