கோடிக்கணக்கான பணத்தின் தலைவர்கள்!

ட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, தங்களின் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் சொத்து மதிப்பையும் தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். சாதாரண மனிதர்களை ஜனநாயகம் என்ற பெயரில் ஆளும் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் கோடிக்கணக்கில் இருந்தது 2006 முதல் தமிழகத்தின் கடைகோடியில் இருக்கும் மக்களுக்கும் தெரியவந்தது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தி.மு.க தலைவர் கருணாநிதி இருவரும் தாக்கல் செய்துள்ள அஃபிடவிட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் இவை. 

‘‘ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டபோது எனது சொத்தின் மதிப்பு ரூ.51.40 கோடி. தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆனபிறகு நான் எந்த சொத்தும் வாங்கவில்லை. அதனால், மீண்டும் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டிய அவசியமில்லை’’ - ஜெயலலிதாவின் சொத்து பற்றி ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியானபோது 2011 செப்டம்பர் 5-ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதாவே சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டிய நிலைக்குக் காலம் அவரைத் தள்ளியது. 2006 ஆண்டிப்பட்டி, 2011 ஸ்ரீரங்கம், 2015 ஆர்.கே.நகர், 2016 ஆர்.கே.நகர் என நான்கு தேர்தல்களில் ஜெயலலிதா சொன்ன சொத்துக் கணக்குகளை முதலில் அலசுவோம்.

2006 தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டபோது ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.24.65 கோடி. 2011 தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டபோது,  அவரின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியானது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பதவியை இழந்தார் ஜெயலலிதா. அந்த வழக்கில் விடுதலைபெற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் போட்டியிட்டார். அப்போது அவர் வேட்புமனுத் தாக்கலில் காட்டிய சொத்து மதிப்பு 117.13 கோடி ரூபாய். அதாவது, முன்பைவிட அவரது சொத்து மதிப்பு இரண்டு மடங்கு அதிகம். இப்போது 118.40 கோடி ரூபாய். கடந்த ஓராண்டில் சொத்து மதிப்பு ரூ.1.26 கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

முதலில் அசையும் சொத்துக்களைப் பார்ப்போம். வங்கி, நிதி நிறுவன இருப்புகளைப் பொறுத்தவரை ஆண்டிப்பட்டி தேர்தலில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள முதலீடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீரங்கம் தேர்தலில் இந்தத் தொகை இடம்பெற்றிருந்தது. அதோடு இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியாவின் நான்கு கணக்குகளின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்தத் தொகை ரூ.9.80 கோடியாகிவிட்டதோடு வங்கிகளின் எண்ணிக்கையும் 24 ஆனது. இப்போது ரூ.10.63 கோடியாகி வங்கிகளின் எண்ணிக்கை ஒன்று கூடுதலாகி 25 ஆனது. 

ஆண்டிப்பட்டி தேர்தலின்போது ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் ரூ.10 கோடி முதலீடு செய்திருந்தார். அது, ஸ்ரீரங்கம் தேர்தலில் ரூ.8.50 கோடியானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.22.09 கோடியானது. இப்போது ரூ.21.50 கோடியாக இருக்கிறது. 2006 தேர்தலில் சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் ரூ.1 கோடி முதலீடு செய்யப்பட்டு இருந்ததாகக் காட்டப்பட்டிருந்தது. 2011 தேர்தலில் ரூ.75 லட்சமாகக் குறைந்தாலும் 2015 தேர்தலில் ரூ.1.37 கோடியாக உயர்ந்தது. இப்போது ரூ.20.12 லட்சம் ஆனது. கொடநாடு எஸ்டேட்டில் 2006-ல் எதுவும் குறிப்பிடவில்லை. 2011-ல் 1 கோடி ரூபாய் முதலீடு. 2015-ல் ரூ.3.14 கோடியாக உயர்ந்தது. இப்போது ரூ.3.13 கோடி. 2006-ல் ராயல்வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட்டில் எதுவும் குறிப்பிடவில்லை. 2011-ல் ரூ.65 லட்சமாக இருந்த முதலீடு 2015-ல் ரூ.2.76 கோடியானது. இப்போது ரூ.40.41 லட்சம்.

தன்னிடம் உள்ள நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருப்பதால் அவற்றின் விவரங்களைத் தர முடியவில்லை என்று 2006 மற்றும் 2011 வேட்புமனுக்களில் சொல்லியிருக்கிறார். 2010 ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 21280.300 கிராம் தங்கம் நீதிமன்றத்தில் உள்ளது எனவும், ரூ.3.12 கோடி மதிப்புகொண்ட 1,250 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருப்பதாகவும் சொல்லியிருந்தார். அந்தக் கணக்கு இப்போதும் தொடர்கிறது. ஜெயலிதா வசிக்கும் வீட்டின் பரப்பு 10 கிரவுண்ட். 1967-ல் 1,32,009 ரூபாய்க்கு ஜெயலலிதா மற்றும் அவருடைய தாய் பெயரில் வாங்கப்பட்டு இருக்கிறது. 2006-ல் ரூ.5 கோடியாக இருந்த வீட்டின் மதிப்பு, 2011-ல் ரூ.20.16 கோடியாக அதிகரித்தது.
2016-ல் ரூ.43.96 கோடியாக உயர்ந்துவிட்டது.

இனி கருணாநிதியின் சொத்துக் கணக்கு!

தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களின் சொத்துக் கணக்கை வேட்புமனுவோடு கட்டாயம் காட்டியாக வேண்டும் என்ற விதி, 10 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது. ஆனால், இந்தியாவிலேயே முதன்முறையாக எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வோர் ஆண்டும் தங்களின் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும் என்ற முன்னோடியை உருவாக்கியது தமிழகம்தான். ‘அரசியலில் நேர்மை... பொதுவாழ்வில் தூய்மை’ என்பது கரைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969-ல் முதல்வர் நாற்காலியில் முதன்முறையாக அமர்ந்த கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக்கணக்கை அவசியம் வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட முதல் ஆண்டில் (தீர்மானம், முன்தேதியிட்டு கொண்டு வரப்பட்டது) 165 எம்.எல்.ஏ-க்கள் தங்களின் சொத்துக் கணக்குகளை சட்டசபைக்கு அளித்தார்கள். அதன் பிறகு ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு’ ஆன கதையாக அந்த எண்ணிக்கை தேய்ந்து மறைந்தே போய்விட்டது. தீர்மானம் கொண்டுவந்த கருணாநிதியே முதல் ஏழு வருடங்களுக்குப் பிறகு, கடந்த 2006-ம் ஆண்டுவரை தன் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்