கழுகார் பதில்கள்!

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், க.சதீஷ்குமார்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

 ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எனக்குப் பலன் இல்லை. அமைச்சர் பதவியோ, வேறு பொறுப்போ கிடைக்காது’ என்று அன்பழகன் பேசி உள்ளாரே?


  அன்பழகன் யதார்த்தமாகப் பேசினாரா, வருத்தமாகப் பேசினாரா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அரசியல்வாதிகள் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது. ‘ஏதாவது ஒரு தொகுதியில் நில்லுங்கள்’ என்று கருணாநிதி வற்புறுத்தினார். ஆனால், அன்பழகன்தான் அதற்குச் சம்மதிக்கவில்லை. உடல்நிலை, வயது ஆகியவற்றைக் காரணம் காட்டி மறுத்துவிட்டார்.

அன்பழகன் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘‘நான் எதையும் விரும்பியது இல்லை. ஆனால், எல்லாமே எனக்கு வாய்த்திருக்கிறது” என்று சொன்னார். அப்படி வந்த வாய்ப்பை மறுக்கும் மனமும் அன்பழகனுக்கு வாய்த்துள்ளது.


லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

 முன்னாள் முதல்வரான 93 வயது கருணாநிதி வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது உட்கார்ந்துகொண்டு வாங்குகிறார் தேர்தல் அதிகாரி. ஆனால், இன்னாள் முதல்வரான 63 வயது ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது அதிகாரி நின்றுகொண்டு வாங்குகிறாரே?


 பொதுவாக தேர்தல் அதிகாரிகள் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பது விதி. அதன் அடையாளமாகத்தான் அதிகாரிகள் உட்கார்ந்து வேட்புமனுக்களை வாங்குவார்கள். அதைத்தான் கருணாநிதி விஷயத்தில் அந்த அதிகாரி பின்பற்றி உள்ளார். ஜெயலலிதா இப்போது முதலமைச்சராக இருக்கிறார். அதனால் அந்த அதிகாரி பயந்து போயிருக்கலாம். கருணாநிதியின் வயதுக்கும் அனுபவத்துக்கும் மரியாதை கொடுக்கும் வகையில் அந்த அதிகாரி எழுந்து நின்று வேட்புமனு வாங்கி இருந்தாலும் தவறு இல்லை.

சுந்தரி ப்ரியன், வேதாரண்யம்.

 வரும் சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றால் அந்தப் பதவியில் நீடிப்பாரா?


 ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை மற்ற தொகுதிக்காரர்கள் அன்புமணிக்குக் கொடுத்தால் அவர் பென்னாகரம் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக நீடிப்பார். முதலமைச்சராகவும் ஆவார். அத்தகைய செல்வாக்கை பா.ம.க பெறவில்லை என்றால், அன்புமணி ராஜினாமா செய்துவிடுவார்.

பொதுவாக ஒன்று...

‘எனக்கும் ஜெயலலிதாவுக்கும்தான் போட்டி’ என்று சொல்லக்கூடிய அன்புமணி நியாயமாகப் பார்த்தால், தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு களத்துக்கு வந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையே அவருக்கு இல்லை என்று தெரிகிறது. கட்சி ஜெயித்தால் எம்.எல்.ஏ-வாக நீடிப்பது. ஜெயிக்காவிட்டால், எம்.பி-யாகப் போய்விடுவது. இதுதான் மனமாற்றம்.
 
சம்பத்குமாரி, பொன்மலை.

 தமிழக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளைத் தந்துள்ளது. அதில் முக்கியமானது, தாங்கள் வெற்றி பெற்றால் முதியோர் உதவித்தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக மாற்றுவோம் என்பது. இவர்கள் என்ன ஆட்சிக்கா வரப்போகிறார்கள்?


 கருணாநிதி மீதான நம்பிக்கையில் இந்த வாக்குறுதியை இளங்கோவன் தந்துள்ளார். சொல்லப்பட்ட விஷயம் பாராட்டுக்குரியது. எந்த ஆட்சி அமைந்தாலும் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைப்போம்.

எல்.ஆர்.சுந்தர்ராஜன், மடிப்பாக்கம்.

 அ.தி.மு.க-வுக்கு எதிர்ப்பு அலை வீசுவதாகத் தெரியவில்லையே?


 ஸ்டாலினுக்கு கூடும் கூட்டத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள்.

ப.அண்ணாமலை, ஒட்டன்சத்திரம்.

 மக்கள் நலக் கூட்டணியில் தற்போது பிரச்னைகள் ஓய்ந்துவிட்டனவா?


 தலைவர்கள் அனைவரும் தனித்தனியாகப் பிரசாரம் கிளம்பி விட்டதால் பிரச்னைகள் ஓய்ந்துவிட்டன. ஒன்றாகப் பயணிக்கும்போதுதான் ஆயிரம் பிரச்னைகள். துண்டைத் தூக்கிப் போட்டுக் கிளம்புவது, காரில் ஏறாமல் கோபப்பட்டு நடந்துபோவது, திடீரென காரை நிறுத்தச் சொல்லி இறங்கச் சொல்வது... இப்படி பல காமெடிகள். தனித்தனி கார் என்பதால் அவை நின்றுவிட்டன. தற்போது பிரச்னைகள் இல்லை.

(உங்களுக்கு போஸ்ட் கார்டு வாங்கிக் கொடுத்து இப்படி கேட்கச் சொன்னது மு.க.ஸ்டாலினா?)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்