கோடை மழை... கோடி மழை!

தமிழகத் தேர்தலில் கரன்ஸி களேபரங்கள்

ணம் கொடுத்து பாஸ் ஆகிவிடலாம் என்பது 10-ம் கிளாஸ் தேர்வில் இருந்து பதவிக்கு வரத் துடிக்கும் அரசியல்வாதிகள் வரை பொதுகுணம் ஆகிவிட்டது. எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் கரன்ஸி மழை. கோடை மழைக்குப் போட்டியாக கோடி ரூபாய் மழையும் தொகுதிகளில் பொழிந்தது. அதுகுறித்த ‘ப’ நிலை அறிக்கை இது.

காஞ்சிபுரம் பகுதியில் அதிமுக பகுதி செயலாளர் ரவி என்பவரிடமிருந்து 4,00,700 ரூபாயை கைப்பற்றி இருக்கிறார்கள் தேர்தல் பறக்கும் படையினர். விசாரணையின்போது,  “தேர்தல் செலவுக்காகத்தான் பணத்தை வைத்திருக்கிறோம்” என்று சொன்னாராம். திருப்போரூர், செய்யூர் பகுதிகளில் 200, 300 என கொடுத்தார்கள். செங்கல்பட்டு தொகுதியில் தி.மு.க.வினர் 200-லிருந்து 1000 வரை வாரி இறைக்கிறார்கள்.

உளுந்தூர்பேட்டை பா.ம.க வேட்பாளர் பாலு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திக்க உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த தாசில்தார் ராஜேந்திரனிடம், பா.ம.க. வேட்பாளர் பாலு, ‘வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கையில் கத்தையாக வைத்திருந்த பணத்தை தாசில்தார் தலையில் அபிஷேகம் செய்வது போல் கொட்டியதுடன் கட்சிக்காரர்கள் கொடுத்தப் பணக்கட்டுகளை அவர் மீது வீசினார். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க முடியாதத் தேர்தல் துறை, அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல் விட்டதாகவும், பெண் ஊழியர்களிடம் வன்முறையில் ஈடுபட்டதாகவும் வழக்கறிஞர் பாலு மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

பால் பாக்கெட் போட்ட அ.தி.மு.க-வினர்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அ.தி.மு.க-வினர் வினோதமான முறையில் பணப்பட்டுவாடா செய்தனர். பேப்பர்,  பால் பாக்கெட் போடுவது போலவும், தண்ணீர் கேன் போடுவது போலவும் சென்று பணப்பட்டுவாடா செய்தனர். இங்கு தி.மு.க-வும் பணம் கொடுத்தனர் என்கிறார்கள். ஆயிரம் விளக்கு தொகுதியில் ஓட்டுப்போட்டு விட்டு வந்து பரிசு பொருட்களை வாங்கிக்கொள்ளும்படி அ.தி.மு.க தரப்பில் டோக்கன் கொடுத்தார்கள். கோடம்பாக்கம் பகுதியில் டோக்கன் விநியோகத்தில் பிரச்னை உருவானது. எனவே, வீடுவீடாகச் சென்று ‘தேர்தலுக்குப் பிறகு அக்கா எம்.எல்.ஏ ஆனவுடன் கவனிப்பாங்க’ என்று அ.தி.மு.க-வினர் சொல்லி வருகிறார்களாம்.  

வானூர் தொகுதி குயிலாப்பாளையம் பகுதியில் நட்டநடு ராத்திரியில் அ.தி.மு.க-வினர் ரூ.250-ம் தி.மு.க-வினர் ரூ.200-ம் கொடுத்தனர். திண்டிவனம் தொகுதியில் அ.தி.மு.க-வினர் பட்டப் பகலிலேயே பூத் சிலிப்பை கணக்கிட்டு வீடு வீடாக ரூ.250 பணம் பட்டுவாடா செய்தனர்.

விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் கிராமத்தில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும்படையினர் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்துகொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலர், அலுவலர்களைக் கண்டதும் ரூ.44,800–ஐ அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாகக் கிடைத்தத் தகவலையடுத்து தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு வாக்களிக்குமாறு, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்துகொண்டிருந்ததாக பெரியார் நகரைச் சேர்ந்த எம்.சேகர் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக சேகர் வைத்திருந்த ரூ.12,400–ஐ பறிமுதல் செய்தனர்.

சோஃபாவுக்கு அடியில் பணம்!

வாணியம்பாடி அ.தி.மு.க வேட்பாளர் வீட்டில் வாக்களர்களுக்குக் கொடுப்பதற்காக நள்ளிரவில் பணப்பங்கீடு நடைப்பெற்று வருகிறது என தேர்தல் அலுவலருக்கு புகார் வந்தது. தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அ.தி.மு.க வேட்பாளரான நீலோபர் கபீல் வீட்டை சோதனை செய்தனர். அங்கு, சோஃபாவுக்கு அடியில் இருந்து மொத்தம் 14 லட்சத்து 8,820 ரூபாய் பணத்தை கைப்பற்றினர். இதுகுறித்து நீலோபர் கபீல், “ எங்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு கொடுப்பதற்கு வைத்திருந்த சம்பளப் பணம் அது” என்றார். அதை ஏன் சோஃபாவுக்கு அடியில் வைத்தார் என்றுதான் தெரியவில்லை.

இது வேலூர் டெக்னிக்!

வேலூர் மாவட்டம் முழுக்க அ.தி.மு.க-வினர் ஓட்டுக்கு 250 ரூபாய் என கொடுத்தனர். பறக்கும் படை சுற்றிய பகுதியில் ஒரு க்ரூப் குறைவான பணத்தை வைத்துக்கொண்டு பறக்கும் படையை திசை திருப்பியது. இன்னொரு க்ரூப் இறங்கி சுறுசுறுப்பாக பட்டுவாடா செய்தது. ஒரு வட்டச் செயலாளர், ‘பணம் கொடுக்கும்போது மாட்டினாலும் கவலை இல்லை. அம்மா வரைக்கும் பேர் ரீச்சாகுமே’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்