மாறாத கெட்ட பெயர்... பயன்படுத்தாத நல்ல பெயர்!

தி.மு.க. தோல்விக்கு என்ன காரணம்?

பெருத்த ஏமாற்றம் அடைந்துவிட்டது தி.மு.க.

1984-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, மாறி மாறிதான் வெற்றி வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் தி.மு.க-தான் இந்த முறை வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் உடன்பிறப்புகள் ஏகபோக நம்பிக்கையில் இருந்தனர். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப்போனது. தி.மு.க மீது இருக்கும் வெறுப்பு, எதிர்க் கட்சிகளின் வாக்குகள் சிதறியது, ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தாதது உள்ளிட்ட காரணங்களே தி.மு.க-வை தோல்விப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளன என்று பரவலாகச் சொல்லப்படுகிறது.

தி.மு.க மீதான வெறுப்பு!

2006-ம் ஆண்டு 96 உறுப்பினர்களுடன் மைனாரிட்டி அரசாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துணையுடன்தான் தி.மு.க ஆட்சி அமைத்தது. அப்போதே, தி.மு.க மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது வெட்டவெளிச்சம் ஆனது. இலவச டி.வி உள்ளிட்ட தேர்தல் அறிக்கை அம்சங்களால் அந்தத் தேர்தலில் தி.மு.க-வால் வெற்றியைப் பெற முடிந்தது. மைனாரிட்டி என்ற அளவுக்காவது வெற்றியைத் தந்த மக்களுக்கு நல்லது செய்வதற்குப் பதிலாக, தி.மு.க தலைமையின் குடும்ப அரசியல் தமிழகத்தைக் கூறுபோட்டு ஆட்சி செய்தது. நிலப்பறிப்பு, குடும்ப ஆதிக்கம், அனைத்துத் தொழில்களிலும் தி.மு.க நிர்வாகிகளின் தலையீடு... அனைத்துக்கும் மேலாக 2ஜி முறைகேட்டில் குடும்ப உறுப்பினர்களுக்குத் தொடர்பு போன்றவை 2011-ல் தி.மு.க-வின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன. அந்த விவகாரங்கள் மக்கள் மனதில் இருந்து இன்னமும் அகலவில்லை.
மதுவிலக்கு என்ற கோரிக்கையை தி.மு.க முன் வைத்தது. ஆனால், தி.மு.க-வினரே மது ஆலைகளை நடத்துகிறார்கள் என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டபோது, அதற்கு தி.மு.க தரப்பினரிடம் இருந்து சரியான பதில்கள் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க மீதான விமர்சனங்களைவிட தி.மு.க மீதுதான் கூடுதல் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களுக்கு தி.மு.க தரப்பில் இருந்து சரியான பதில்கள் இல்லை.

மறுபடியும் கருணாநிதியா?

93 வயதைக் கடந்த ஒரு மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி என்ற போதிலும், மீண்டும் அவர் முதல்வராக வருவதைவிட ஸ்டாலின் வரவேண்டும் என்றே தி.மு.க-வினர் பலரும் எதிர்பார்த்தார்கள்.  மூத்த அரசியல் தலைவர் என அவரை மதிக்கிற பலரும் அவர் மீண்டும் முதல்வராவதை விரும்பவில்லை. வயது, உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் ஓய்வு எடுத்துவிட்டு, ஸ்டாலினுக்கு வழிவிடலாம் என்று பலரும் நினைத்தார்கள்.  எதார்த்த நிலை இப்படி இருக்க, தேர்தல் பிரசாரத்தின் கடைசிக் கட்டத்தில் ஓர் ஊடகத்துக்கு கருணாநிதி அளித்த பேட்டியில், “எனக்கு இயற்கையாக ஏதாவது நேரும் வரை நானே முதல்வர்” என்று குறிப்பிட்டார். அதை இளைய தலைமுறையினர் விரும்பவில்லை. அதனால், கருணாநிதியை கலாய்த்து மீம்ஸ்கள் கிளம்பின.

எதிர்க் கட்சிகளின் வாக்குகள் சிதறல்!

தேர்தல் வெற்றிக்கு கூட்டணி பலமும் முக்கியம். 2011 தேர்தலில் தி.மு.க தோற்றபோது காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., கொங்கு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் உடன் இருந்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸை தவிர, பெரிய கட்சிகள் எதுவும் தி.மு.க-வோடு சேருவதை விரும்பவில்லை. கடந்த முறை அ.தி.மு.க வெற்றிக்குக் காரணியாக இருந்த தே.மு.தி.க-வை இழுக்க தி.மு.க எவ்வளவோ முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்தது. இது தி.மு.க தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியது. கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த பா.ம.க-வும் இப்போது கூட்டணியில் இல்லை. இப்படி வாக்கு வங்கிகளை அள்ளித்தரும் கட்சிகளைக் கூட்டணிச் சேர்ப்பதில் தி.மு.க தோல்வியைத் தழுவியது. அது, தி.மு.க-வுக்கு பெரிய மைனஸ்.

ஸ்டாலின் தவிர யாருமில்லை...

பிரசாரக் களத்தில் மு.க.ஸ்டாலின் மட்டுமே தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார். “பொய்யும், புரட்டும்...” என்று ஜெயலலிதாவுக்கு எதிராக பிறகு, பாட்டுப்பாடி முதல்வர் கனவில் உற்சாகமாகச் சுழன்று வந்தார். பெரும் கூட்டமும் கூடியது. கருணாநிதி சில ஊர்களுக்கு மட்டுமே வேன் பிரசாரம் செய்தார். அதையும் நிறுத்திக்கொண்டார். மாநிலங்களவை எம்.பி-யான கனிமொழி, கூட்டணி கட்சித் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் பிரசாரம் சுமாராகவே எடுப்பட்டது. ப.சிதம்பரம் போன்ற நல்ல பேச்சாளர்களும் களத்தில் இல்லை. குஷ்பு, நக்மா என காங்கிரஸில் இருந்தவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

 முன்னிறுத்தப்படாத ஸ்டாலின்...


தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றால், ஸ்டாலின்தான் முதல்வர் என்று உறுதியான நிலைப்பாட்டை தி.மு.க எடுக்கவில்லை. அது, தி.மு.க-வுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டால் நல்லது என்பதை உணர்ந்துதான், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே, ‘‘ஸ்டாலின் முதல்வர் என்றால் தி.மு.க-வுடன் கூட்டணி” என்று ட்விட்டரில் அறிவித்தார், பி.ஜே.பி-யின் சுப்பிரமணியன் சுவாமி. அந்த எதார்த்த நிலையை கருணாநிதி கணக்கில் எடுக்கத் தவறிவிட்டார். அழகிரியின் பெயரைச் சொல்லி ஸ்டாலினுக்கு முட்டுக்கட்டை போட்ட கருணாநிதி, கட்சியின் வெற்றியை பெரிதாகக் கருதவில்லை என்கிறார்கள். ஸ்டாலினை முன்னிறுத்தி இருந்தால், உறுதியாக தி.மு.க ஆட்சியைப் பிடித்து இருக்கும் என்பது தி.மு.க தொண்டர்களின் உணர்வாக இருக்கிறது.

  -கே.பாலசுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick