“கோரமுகத்துடன் செய்தார் ராஜபக்‌ஷே... சிரித்த முகத்துடன் செய்கிறார் சிறீசேனா!”

இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மாணவர்கள்...படுகொலை

லங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் போலீஸாரால்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால், அங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் அமைப்புகளின் கண்டனங்களைத் தொடர்ந்து, அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 20-ம் தேதி தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணத்தில், சோதனைச்சாவடி வழியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான பவுன்ராஜ் சுலக்சன், நடராய கஜன் ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது அவர்களை போலீஸார் சுட்டுக்கொன்றனர். “நிற்காமல் சென்றதால் அவர்களைச் சுட்டுக்கொன்றோம்” என போலீஸார் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் மீதான தாக்குதலை சிங்களர்கள்  இன்னும் கைவிடவில்லை என்பதற்கு இதுவே பகிரங்கச் சான்று என்று தமிழ் அமைப்புகள் கூறுகின்றன.  இந்தச் சம்பவம் தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் தொலைபேசி மூலம் பேசினோம். 

“இன்னும் அரச பயங்கரவாதம் தொடர்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. இது, தமிழர்கள் மீதான கோபத்தின் காட்டு

மிராண்டித்தனமான வெளிப்பாடு. இந்த விவகாரத்தை எங்களுடையத் தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,  ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு  சென்றுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் எனச் சொன்னாலும், ராஜபக்‌ஷே அரசுக்கும், மைத்ரி பால சிறீசேன அரசுக்கும் நடைமுறையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. தமிழர்கள் மீதான எதிர்வினைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இந்தச் சம்பவத்தை  அடக்குமுறை  மற்றும் அடுத்த பயங்கரவாதத்தின்  வெளிப் பாடாகவே பார்க்கிறோம். தமிழர்கள் மீதான  தாக்குதல்களை  ராஜபக்‌ஷே   கோரமுகத்துடன் செய்தார். மைத்திரி பால சிறிசேன  சிரித்துக்கொண்டு செய்கிறார். தமிழர்களுக்கு  எதிரான இந்த செயல்பாடுகளை  தடுத்து நிறுத்த   அனைவரும் ஒற்றுமையாக  செயல்பட வேண்டும். பொது வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம். தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு   தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்து மக்கள் கண்டனக் குரல்களை எழுப்ப வேண்டும். அவர்களுடைய ஆதரவு இருந்தால்தான் ஏனைய  தமிழர்களும் ஈழத்தில் வாழ முடியும். சர்வதேச சமூகத்தின் முன் பிரச்னையை வலுவாகக் கொண்டு செல்ல  முடியும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்