ஸ்டாலினை வாரிசாக அறிவித்திருப்பது சரியா? - திருமாவளவன் பதில்

பேட்டி

மிழக அரசியலில் தற்போதைய ‘லைம்லைட்’ அரசியல்வாதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்தான். எதிர்க் கட்சிகள் எல்லாம் கனத்த மௌனத்துடன் இருந்தபோது, அப்போலோவுக்கு முதல் ஆளாகப்போய், ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரித்தார். அதன்பிறகுதான், தமிழகத்தின் அரசியல் களமாக அப்போலோ மாறியது. தற்போது தமிழக அரசியலில், பரபரப்பாக வலம் வந்துகொண்டிருக்கும் திருமாவளவனை, அவருடைய கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம்.

காவிரிப் பிரச்னைக்காக தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, மக்கள் நலக் கூட்டணியின் பிற தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், நீங்கள் மட்டும் அதில் பங்கேற்க ஆர்வம் காட்டியது ஏன்?

“ ‘காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய பொறுப்பு, ஆளும்கட்சிக்கு மட்டுமல்ல... எதிர்கட்சிக்கும் உண்டு’ என வி.சி.க-தான் முதலில் எடுத்துரைத்தது. கடந்த ஆகஸ்ட் மாதமே, நாங்கள் இதைச் சொன்னோம். அன்றைக்கு தி.மு.க அதை ஏற்கவில்லை. காலம்கடந்து, தற்போது அந்தக் கூட்டத்தை தி.மு.க நடத்தி உள்ளது. ஆனாலும், அதில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஏனென்றால், காவிரி சிக்கலைத் தீர்ப்பதில் கட்சி வேறுபாடு, தேர்தல் கூட்டணிகளைத் தாண்டி, தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.”

“பொன்.ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு, திருநாவுக்கரசருடன் சந்திப்பு என பிஸியாக உள்ளீர்கள். புதிதாக, எதிர்காலத் திட்டம் எதுவும் இருக்கிறதா?”

“டெல்லியில் எதிரும் புதிருமாக உள்ள அரசியல் கட்சியினர் கூட, பொது நிகழ்ச்சிகளில் சாதாரணமாகக் கலந்துகொள்கிறார்கள். தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. பி.ஜே.பி-யை விமர்சித்தால், பிரதமர் மோடியை சந்திக்கக்கூடாது என்பதும், அ.தி.மு.க-வை விமர்சித்தால், அப்போலோவுக்குப் போகக்கூடாது என்பதும், தி.மு.க-வை விமர்சித்தால் தி.மு.க-வின் நிலைப்பாட்டை வரவேற்கக்கூடாது என்பதும் இங்கே உள்ளவர்களின் பார்வையாக உள்ளது. அது தவறு. எல்லா கட்சித் தலைவர்களையும் சந்தித்ததுபோல, திருநாவுக்கரசர் என்னையும் சந்திக்க வந்தார். அதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. எங்கள் அலுவலகத்தின் அருகில் உள்ள பி.ஜே.பி தொண்டர் ஒருவரின் வீட்டுக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன், எங்கள் அலுவலகத்துக்கும் வந்தார்.”

“ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா,  ஆளுநர் கூட பார்க்கமுடியாத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறதே?” 

“ஆளுநர் சந்திக்கவில்லை என்பதை நாம் உறுதிப்படுத்த முடியாது. அவர் சந்தித்து இருக்கலாம்; சில காரணங்களுக்காக அதை வெளிப்படுத்தாமல் இருக்கலாம்; அதற்கான தேவையும் இருக்கலாம்; நிர்பந்தங்களும் இருக்கலாம்; ஆளுநர் முதலமைச்சரை சந்தித்தார் என்பதை நம்மால் எப்படி உறுதிப்படுத்த முடியவில்லையோ... அதுபோல, ஆளுநர் அவரை சந்திக்கவில்லை என்பதையும் நாம் உறுதிப்படுத்த முடியவில்லை.”

“தி.மு.க தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை தனது அரசியல் வாரிசு என்று அறிவித்து உள்ளார். ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எனும் பேரியக்கத்தை சிறப்பாக வழிநடத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?”

“தமிழக அரசியலில், நீண்ட நெடிய அனுபவம் உள்ள மூத்த தலைவர் கலைஞர். அவர் வழிநடத்திய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தனது வாரிசை அறிவிக்கிறார் என்றால், அது சிறப்பான தேர்வாகத்தான் இருக்க முடியும். அவருடைய தேர்வை விமர்சிப்பதற்கு எனக்குப் போதிய அனுபவம் இல்லை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்