தமிழகம் 60 - எல்லைகளில் ஏற்பட்ட தொல்லைகள்!

வரலாறுவழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

ன்றைய தமிழ்நாடு மொழிவாரிய மாநிலமாக அமைந்து, வருகிற நவம்பர் 1-ம் தேதியோடு 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா... துக்கமா என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம். இதனால், நமக்கு ஏற்பட்ட நதிநீர், வனவள பாதிப்புகள் ஏராளம்.

மொழிவாரி மாநில எல்லைகள் வரையறுக்கப்பட்டபோது ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. 60 ஆண்டுகள் பின்னோக்கிப் பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையின் தெற்கேயிருந்து தமிழகத்தோடு இணைந்தது. நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடை இழந்ததால் காமராஜர் ஆட்சியில் நாம் கட்டிய நெய்யாறு அணையை கேரளா இன்றைக்கு மூடிவிட்டது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததால் முல்லைப் பெரியாறில் கேரளா முரண்டு பிடிக்கிறது. நெல்லை மாவட்டத்தின் அடவி நயனாறு, உள்ளாறு, செண்பகவல்லி, விருதுநகர் மாவட்ட அழகர் அணைத் திட்டம், பாலக்காடுப் பகுதிகளை இழந்ததால் கொங்கு மண்டலத்தில் சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு - புன்னம்புழா, பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்னைகள் இன்றைக்கும் கேரளாவோடு மல்லுகட்டி நிற்கின்றன.

கர்நாடகத்திடம் கொள்ளேகால், மாண்டியா, கோலாறு பகுதிகளை இழந்ததால் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்னை. ஆந்திரத்தில் சித்தூர், நெல்லூர், திருப்பதி பகுதிகளை  இழந்ததால் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்னை. கணேசபுரத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. இவ்வளவு நதிநீர் ஆதாரங்களும், இயற்கை ஆதாரங்களும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் நாம் இழந்த மண்ணால் ஏற்பட்டவை. சிறு மாநிலங்கள் என்ற கொள்கை மத்திய அரசின் பரிசீலனையில் 1998-லிருந்து இருக்கிறது. அதனால், சமீபகாலத்தில் உத்தராஞ்சல், சட்டீஸ்கர், தெலங்கானா போன்ற மாநிலங்கள் பிரிந்தன. ஒரே மொழி பேசும் மாநிலம் இரண்டாகப் பிரிவதில் தவறு இல்லை என்ற கொள்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் வசதியாக இருக்கும் என்றும் பல சலுகைகள்  கிடைக்கும் என்றும் சிலர் மாநிலங்கள் இரண்டாகப் பிரிவதை வலியுறுத்துகின்றனர். மத்திய அரசின் பகுதியான புதுச்சேரிக்கே சிறப்புச் சலுகை இருக்கும்போது, தமிழ் பேசும் இன்னொரு மாநிலம் அமைந்தால் சில உரிமைகள் கிடைக்கும் என்று வாதிடுகின்றனர். இந்த வகையில் தென் தமிழகம் அமைய வேண்டும் என்று சில வட்டாரங்களில் இருந்து கோரிக்கைகள் எழுகின்றன. இது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று.

சென்னை ராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை, 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்து, பின் அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது. இந்த ஆண்டு, தமிழகத்துக்கு மணிவிழா ஆண்டு ஆகும். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நாளையொட்டி ஆண்டுதோறும் அந்த மாநில அரசுகள் விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் அந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை.

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்’என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து கூறுகிறது. ஆங்கிலேயரின் தவறான நிர்வாகத்தால் ஒவ்வொரு தேசிய இனம் மற்றும் மொழிவாரியாக மாநிலங்கள் அமையாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் வங்கத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர். அன்றைக்கு காங்கிரஸ் கடுமையாக இந்தச் சூழ்நிலையை எதிர்த்தது. இந்த நிலையில், ஐக்கிய தமிழகம், விசால ஆந்திரம், நவக் கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி, 1952-ல் அக்டோபர் 13-ம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம், டிசம்பர் 15-ல் அவருடைய மரணத்தில் முடிந்தது. இந்தப் போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக கர்நூலை தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்துக்குச் சொந்தமான வேங்கடமலையையும் தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் ‘மெட்ராஸ் மனதே’ என்ற கோஷம் வைத்து அர்த்தமற்ற முறையில் போராடினார்கள்.

சென்னை மாகாணம், தமிழகம் உருவாகியதற்கு பலரின் தியாகங்கள் அளப்பரியவை.

தமிழகத்தின் வட எல்லையான திருத்தணியையும், திருப்பதியையும் தமிழகத்துக்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி-யின் போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. வடக்கு எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி., கொ.மோ.ஜனார்த்தனம், சோமா.சுவாமிநாதன், ஆ.தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரசார பணியையும் மேற்கொண்டார். மங்களம் கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று, வட எல்லைப் பகுதிக்கு புகை வண்டி மூலமாக திருப்பதி வரை செல்ல பயணப்பட்டார், ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தும் கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரைக் கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்போது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல், ‘வேங்கடத்தைவிட மாட்டோம்’ என்று ஒரு மணி நேரம் கர்ஜித்தார், ம.பொ.சி. திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகளை நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

1953-ம் ஆண்டும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடர்ந்து 15 நாள்கள் மறியல் போராட்டம் நடைபெற்றது. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி-யை தாக்க சதிகளும் தீட்டப்பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி-யைக் காப்பாற்றியதாகவும் இவரை நெல்லை தமிழன் என்றும் ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1953-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி, எல்லைத் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி 6 மாத சிறைத் தண்டனையை ம.பொ.சி. பெற்றார்.

திருத்தணி எல்லைப் போராட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக – ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகியவற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்னை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவ ரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக, ஆந்திர சட்டமன்றங்களில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ம.பொ.சி., திருத்தணி எல்லைப் போராட்டம் மட்டுமல்லாமல் நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டத்தையும், செங்கோட்டை, கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கும் துணை நின்றார்.

கன்னியாகுமரி, செங்கோட்டையை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர் குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை பிறப்பெடுத்தது. மணிக்கு, ம.பொ.சி-யின் ஆதரவு கிடைக்கப்பெற்றது. 1954 ஜூனில், நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். அந்தச் சமயத்தில் மூணாறு சென்று பிரசாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். திருவிதாங்கூரில் கல்குளத்தில், நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.

1948-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லை சிக்கலில் சிரோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை தினமணி கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1,000 தாள்களில் அச்சிட்டு, ‘ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக் கூடாது’ என்று நியாயம் கேட்டார் மணி.

1950-ல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல்-அமைச்சரும் அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக்கொள்ளாமல், கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமரசத் திட்டத்துக்கும் தயார் இல்லை என்பதையும் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்ட தளபதிகள் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்கள் முன், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீஸாரால் சுடப்பட்டு மாண்டனர்.

நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீஸாரின் குண்டாந்தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்து போராட்டத்தை நடத்திவந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீஸார் கைதுசெய்து, திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டங்கள் நடத்தி கரையாளர் கைதுசெய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.

இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் – கொச்சி உள்ளடக்கிய கேரள முதல்-அமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனனும் பேசியபின் தேவிக்குளம் – பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது. தேவிகுளம் – பீர்மேடு கேரளத்துக்கு சென்றதற்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. கன்னியாகுமரி – செங்கோட்டை ஆகியவை தமிழகத்தோடு இணைந்தன. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபோது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் 1956 நவம்பர் 1-ம் தேதி காமராசர் கலந்துகொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவுக்கு செங்கோட்டையில் சி.சுப்பிரமணியன் பங்கேற்றார். நாகர்கோவிலில் நடந்த விழாவுக்கு தியாகி பி.எஸ்.மணியை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்டு குமரி மாவட்டம் இணைப்பு விழாவை சிறப்பாக நடத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்