மிஸ்டர் கழுகு: டெல்டா காஷ்மோரா

‘காஷ்மோரா’ படம் பார்த்துவிட்டு, அங்கிருந்து நேராக வந்தார் கழுகார். ‘‘படம் எப்படி இருந்தது?” என்றோம். ‘‘நாட்டில் நடப்பதைவிட படத்தில் காட்டுவது ஒன்றும் அதிகம் இல்லை!” என்று கழுகார் பீடிகை போட்டார். ஏதோ பீடிகை பிடித்துவிட்டார் என்பதை உணர்ந்ததால் அமைதியாக இருந்தோம். ‘‘இந்தப் படத்தைப் பார்க்கும்போது சென்னையில் 40 நாட்களில் ஆங்காங்கே நடந்த சில நிஜ சம்பவங்கள்தான் கோர்வையாக எனக்கு நினைவுக்கு வந்தன. அதை திரைக்கதை பாணியில் சொல்லுகிறேன்... கேட்கிறீரா?” என்றபடி சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

‘‘நாட்டுக்கு அவர் ஒரு மன்னர். அவரின் பிரம்மாண்ட பங்களா. இவைதான் நான் சொல்லப்போகும் திரைக்கதையின் முக்கிய கதாபாத்​திரங்கள். அந்த மன்னருக்கு நெருக்கமான அரண்மனை​வாசி​களான சிலர் செல்வ மிதப்பில் மிதக்கிறார்கள். ஊழல் மற்றும் கொள்ளையடித்த கரன்சி கட்டுகள், தங்கம், வைடூரிய நகைகளை அந்த அரண்மனைக்குக் கொண்டு​வருகிறார்கள். ரகசிய சுரங்கம் வெட்டி அதில் அந்தப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கிறார்கள். அரியணையில் அமர்ந்திருந்த மன்னரின் காலடியில் அவர் ஆளும் நாட்டின்  செல்வந்தர்கள், பிசினஸ் புள்ளிகள்... பல நூறு கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் வைத்துவிட்டுப் போகிறார்கள். மொத்தத்தையும் 360 டிகிரி கேமரா ஆங்கிளில் சுழற்றி சுழற்றி காட்டுவதாக வைத்துக்கொள்ளுங்கள்!  ‘காஷ்மோரா’ படத்தில் வரும் பிரம்மாண்ட பங்களா போன்ற அவரது அரண்மனையில் வெளியார் யாரும் உள்ளே நுழைய முடியாது. 24 மணி நேரம் காவல் காக்கும் வீரர்களைக் காவல் போடுகிறார்கள். திடீரென ஒரு நாள் மன்னருக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது. வைத்தியத்துக்காக இமயமலை அடிவாரத்தில் உள்ள சித்தர் குடிலுக்குக் கொண்டுபோகிறார்கள். சிகிச்சை ஆரம்பமாகி சில மாதங்கள் ஆகின்றன. அடுத்த காட்சி... மன்னரின் பங்களாவில் நடப்பது! வண்டி வண்டியாக பங்களாவில் இருந்த விலை உயர்ந்த பொருட்​களை அரண்​மனைவாசிகள் அள்ளிச் செல்லுகிறார்கள். மன்னர் எப்போது திரும்புவார்? மீண்டும் பழையமாதிரி சுறுசுறுப்புடன் ஆட்சி செய்வாரா... என்கிற சந்தேகத்துடன் இருந்த அந்த அரண்மனைவாசிகள் பங்களாவைக் காலி செய்துவிடுகிறார்கள்... இத்துடன் இடைவேளை நேரம் வந்துவிடுகிறது” என்று நிறுத்திய கழுகார், ‘‘படத்தை விட்டு வெளியில்... நிகழ்காலத்துக்கு வருகிறேன்!” எனத் தொடர்ந்தார்.

‘‘டெல்டாவில் இருந்து சென்னையை நோக்கி மெகா சைஸ் கார்கள் சீறிப்பாய்ந்து வந்தன. கார் வெள்ளை. அவர்களது உடுப்பும் வெள்ளை வெளேர். ஆளும் உருவமும் பயமுறுத்துகிறது. மத்தியதர ஹோட்டல்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். திடீரென இவர்களுக்கு எங்கிருந்தோ உத்தரவுகள் வருகின்றன. உடனே நாலைந்து பேர் கிளம்புகிறார்கள். சென்னையில் மையப் பகுதியான அந்த பெரிய வீட்டில் இருந்து வெளியேறும் வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக தங்கள் வாகனத்தைச் செலுத்த வேண்டியது இவர்களது வேலை. இவர்கள் பயணித்த காரின் முகப்பில் சின்ன ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்குமாம். போலீஸ் மேலிடத்துக்கு மட்டுமே அந்த அடையாளம் தெரியும். வாகனம் இடையில் மறிக்கப்பட்டால் அவர்கள் சென்னையில் உள்ள பிரதான அதிகாரிக்கு போனை போட்டுக் கொடுப்பார்கள். சல்யூட் அடித்து வழி விடுவார்கள். அந்தக் கார்களை எந்த டோல்கேட்டிலும், போலீஸ் செக்போஸ்டிலும் நிறுத்தாமல் அனுப்பி வைக்கின்றனர்.

சென்னையின் மையப்பகுதியில் உள்ள வீட்டில் இருந்து மட்டுமல்ல, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை வீடுகள் சிலவற்றில் இருந்தும் இதேபோல் வாகனங்கள் வெளியேறுகின்றன. இந்த வெள்ளை வெளேர் சீருடைக்காரர்கள் அதற்கும் செக்யூரிட்டியாகப் போகிறார்கள். சென்னைக்கு வெளியே கொங்கு மண்டலத்தின் மலையோர பங்களாவில் இருந்தும் இத்தகைய வாகனங்கள் வெளியேறுகின்றன. அங்கும் இதே மாதிரியான ஆட்கள் செக்யூரிட்டியாக இருக்கிறார்கள். வாகனங்கள் எந்தப் பக்கம் இருந்து புறப்பட்டாலும் அவை போய்ச்சேரும் இடம் டெல்டா பக்கமாக இருக்கிறது.”

‘‘வறட்சி மாவட்டம் அல்லவா?”

‘‘சிலருக்கு அது எப்போதும் வளம் கொழிக்கும் மாவட்டம் அல்லவா?

‘‘சென்னை டிராபிக் போலீஸார் மத்தியில் அந்தக் கார்கள் எங்கெங்கே சென்றன? எப்போது வெளியே வருகின்றன? என்பதை ஆச்சர்யத்துடன் கவனித்து செல்போனில் சக போலீஸ் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டார்களாம். அந்த ரூட்டில் ஒருவர் சொல்லித்தான் விவகாரம் வெளியில் வந்தது. சென்னைக்குள் சில கார்களுக்கு பைலட் கார்களாக போலீஸ் வாகனங்கள் சென்றதுதான் டிராபிக் போலீஸாரையே தலைசுற்ற வைத்ததாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்