‘‘முதல்வரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்!” - சசிகலா புஷ்பா பேட்டி

பேட்டி

ரு சசிகலா, ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் பாதுகாப்பாக இருக்க... இன்னொரு சசிகலா, ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக வாள் சுழற்றத் தொடங்கிவிட்டார். ‘அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் சசிகலா புஷ்பா அமைதியாகிவிடுவார்’ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் மாறாமல் இருக்கிறார் சசிகலா புஷ்பா.

அ.தி.மு.க-வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்ய சபா எம்.பி-யான சசிகலா புஷ்பா, இப்போது நாடார் சமூக விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளில், அவரது நினை விடத்துக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர், ‘ஜெயலலிதா சொன்னால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார்’ என்று சொல்லி இருந்தார். அவரை சென்னையில் சந்தித்தோம்.

‘‘எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போகிறீர்களா?”

‘‘அ.தி.மு.க தலைமை இட்ட கட்டளையை ஏற்று நான் செய்த பணிகளைப் பாராட்டித்தான் எம்.பி. பதவியை முதல்வர் அம்மா எனக்குத் தந்தார். கட்சியில் நாடார் சமூகத்துக்கு அங்கீகாரம் தரவேண்டும் என்றுதான் கட்சிப் பதவிகளையும் கொடுத்தார். அவர்களுக்கு முழு விசுவாசமாகச் செயல்பட்டேன். கட்சியில் எனக்கு எதிராகப் பிரச்னை கிளம்பியபோது, அம்மாவைப் பார்த்து மனுக் கொடுக்கக் கண்ணீரோடு பல நாட்கள் போயஸ் கார்டன் வாசலில் நின்றேன். ஆனால், எனக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. இப்போதும் சொல்கிறேன், அம்மா என்னை அழைத்து ‘எம்.பி. பதவியை ராஜினாமா செய்’ என்று சொன்னால், கண்டிப்பாக அவரது உத்தரவுக்குக் கட்டுப்படுவேன். வேறு யாரும் என்னை மிரட்டிப் பணியவைக்க முடியாது.’’

‘‘நீங்கள் மேயராக இருந்த தூத்துக்குடி மாநகராட்சியை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு என ஒதுக்கி இருக்கிறார்களே?’’

‘‘அரசியல் காழ்ப்பு உணர்ச்சிதான் இதற்குக் காரணம். என் மீதான கோபத்தில், நாடார் மக்கள் பெரும்பான்மையாக வாழும் தூத்துக்குடி மாநகராட்சியைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு

அ.தி.மு.க. அரசு ஒதுக்கி இருக்கிறது. இதன்மூலம், நாடார் சமூகத்தினரைப் பழிவாங்குவதோடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் துரோகம் செய்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைப்படி, அவர்கள் அதிகமாக வாழும் சென்னை மாநகராட்சியைத்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு ஒதுக்கி இருக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் நிர்வாகத் திறமை வாய்ந்த பலர், இந்தத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்கிறார்கள். அவர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வேன்.”

‘‘முதல்வர் உடல்நிலைபற்றி நிறைய வதந்திகள் பரவுகின்றனவே?’’

‘‘முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும். மனிதராகப் பிறந்த யாருக்கும் உடல் நிலை சரியில்லாமல் போவது இயற்கை. முதல்வர் நலமாக இருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. ஆனால், மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் அவர் முகத்தைக் காட்டவில்லை. அவர் குரலைக் கேட்க முடியவில்லை. ‘முதலமைச்சர் பூரண குணமடைய வேண்டும்’ என்று எதிர்க்கட்சி முதற்கொண்டு அனைத்துக் கட்சியினரும் வேண்டியுள்ளனர். முதலமைச்சர் நலமாக இருக்கிறார் என்றால், அவரைக் காட்ட வேண்டும். இல்லை என்றால், ‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன். தமிழக மக்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று வாட்ஸ் அப் மூலம் முதலமைச்சரே பேசி வெளியிடலாம். அவரது குரலை கேட்டால்தான், அவரைப் பார்த்தால்தான் தமிழக மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நம்பிக்கை வரும். உலவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.’’

‘‘முக்கியப் பிரச்னைகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதாகச் செய்தி வெளியிட்டு உள்ளார்களே?’’

‘‘ ‘காவிரிப் பிரச்னையில் தலைமைச்செயலாளருடன் விவாதித்தார், அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். ஒரு சில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்’ என்றெல்லாம் பத்திரிகை களில் செய்திகள் வருகின்றன. ஆனால், அப்படி ஆலோசனை நடந்தது என்பதற்குச் சாட்சியாக ஒரு போட்டோகூட இதுவரை  வெளியிடவில்லை. இத்தனை நாட்கள் ஆகியும் முதலைமைச்சர் நிலை ரகசியமாகவே வைக்கப்பட்டு உள்ளது. எனவேதான், தொண்டர்களும் மக்களும் கவலைப்படுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்