பச்சையப்பன் கல்லூரியில் பாடித் திரிந்த பறவை!

அஞ்சலி

து கவிஞர்கள் உதிர்கிற காலமா? ஞானக்​கூத்தன், நா.முத்துக்குமார் ஆகியோருக்கு வடித்த கண்ணீரின் ஈரம் காய்வதற்குள், கவிஞர் அண்ணாமலை.

‘‘இப்போ ஒரு பிரச்னையும் இல்லைண்ணே... சினிமாவுல இப்ப நல்ல காசு கொடுக்கறாங்க’’ என இரண்டு நாட்களுக்கு முன்பாக சந்தோஷப்பட்ட அண்ணாமலை, நம்மைத் துக்கத்தில் தள்ளிவிட்டுப் போய்விட்டார். கவிஞன் என்பதற்கான கர்வம், ஒரு பாட்டு ஹிட் ஆனதும் மமதை, கொஞ்சம் கொண்டாடப்பட்டதும் அடுத்தவரைக் கவனிக்காதத் தன்மை, பெயர் கிடைத்ததும் அடுத்தவரை அமுக்குவது என்ற கயமைகள் இல்லாக் கவிஞன். எப்போதும் நண்பர்கள் சூழ் உலகு அண்ணாமலை உடையது. அவர்களுக்குக் கவிதை சொல்லியும் அவர்களிடம் கவிதை கேட்டும் அவரது பொழுதுகள் நிறையும். கடந்த 28-ம் தேதி, அண்ணாமலையின் உடல் நுங்கம்பாக்கம் மின்மயானத்தில் கிடத்தி வைக்கப்பட்டு இருந்தபோது... சூழ்ந்த நண்பர்கள் அவரது கவிதையைச் சொல்லித்தான் அஞ்சலி செலுத்தினார்கள். எல்லாக் கவிஞனுக்கும் அவன் எழுதும் வரிகளே அஞ்சலி ஆவதுதான் சோகங்களில் துயரமானது.

சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் உள்ள ‘கீழப்பட்டு’ என்ற கிராமம். மேல்நிலைப் படிப்பை, திருவண்ணாமலை சங்கராபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். திருவண்ணாமலையில் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது, அங்கே ஒரே வகுப்பில் 15 அண்ணாமலைகள். எந்த மாணவனை எப்படி அழைப்பது? ஒவ்வொரு அண்ணாமலைக்கும் புனைப்பெயர் சூட்டினார் வகுப்பாசிரியர். கவிஞர் அண்ணாமலைக்கு ஆசிரியர் வைத்த பெயர், சுரேஷ். அண்ணாமலை கவிஞர் அல்லவா? தம் பெயரை, சுரேசன் என வைத்துக்கொண்டார். அன்று முதல் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் அவரை சுரேசன் என்றே அழைத்தனர்.

பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. முதல் எம்.ஃபில் வரை படித்தார். ஆறு ஆண்டுகளும் கவியரங்கக் காலங்கள். கவிஞர்கள் கபிலன், ஜெயகுமார் என அவருடைய கவி நண்பர்கள் கூட்டம், எல்லா கவியரங்கங்களிலும் பரிசுகளை அள்ளிக்கொண்டு வரும். 1988-ல் பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேரவைத் தலைவராக இருந்தார் அண்ணாமலை. பச்சையப்பன் கல்லூரிப் படிக்கட்டும் தமிழ்பாடும் என்பது அண்ணா காலத்தில் மட்டுமல்ல, அண்ணாமலை காலத்திலும்தான். சுரேசன் என்ற பெயரில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவந்தார். தமிழரசி, தாய் வார இதழ்களில் இவரது 6 சிறுகதைகள் வெளிவந்தன. தமிழமுது இதழில், ‘வேங்கையின் சபதம்’ என்ற பெயரில், ஈழ மன்னன் எல்லாளச் சோழன் பற்றிய வரலாற்று குறுநாவல் ஒன்றும் வெளியானது.

அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டிகளில், 100-க்கும் மேற்பட்ட பரிசுகளை வாங்கிக் குவித்தார். அப்போது, முன்னாள் பச்சையப்பன் கல்லூரி மாணவரான இயக்குநர் செல்வாவின் தொடர்பு கிடைத்தது. செல்வா இயக்கிய ‘சித்திரப் பாவை’ என்ற தொலைக்காட்சித் தொடரில், முதன் முதலாகப் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, ‘நீலா மாலா’, ‘கோகுலம்’ உட்பட 15 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். இவரது முதல் திரைப்பாடல், நாஞ்சில் கென்னடி இயக்கத்தில் 1992-ல் வெளிவந்த ‘புதுவயல்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. மனோ, சித்ரா ஆகியோர் பாடினர். இரண்டாவது படம், ‘கும்மாளம்’.  சினிமா அவருக்கு கும்மாளமான வரவேற்பைக் கொடுத்தது. அந்தப் படத்தில், ‘திம்சு கட்ட... அடடா திம்சு கட்ட...’ உட்பட மூன்று பாடல்கள் எழுதினார். ‘வேட்டைக்காரன்’ படத்தில் ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாடல்தான் இவரைப் பிரபலப்படுத்தியது. ‘சேனா, ஸ்டூடன்ட் நம்பர் ஒன், மச்சி, ஜங்ஷன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 50 படங்களில் பாடல்கள் எழுதினார். கடைசியாக, 20 படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தார். தேவா, டி.இமான், மணிஷர்மா, விஜய் ஆண்டனி, தமன், வெங்கடேஷ், மரகதமணி, ஜி.வி.பிரகாஷ்குமார், ÿகாந்த் தேவா, பரத்வாஜ், சுந்தர் சி.பாபு, பரணி, ஏ.ஆர்.ரெஹானா, காந்திதாசன், சரோஜ்பாபு, சாய்.வி., பத்மன், ஆல்ட்ரின், கே.பாரதி உட்பட தமிழ் சினிமாவின் பல இசை அமைப்பாளர்களிடம் பாடல்கள் எழுதியுள்ளார்.    

‘சிறு பத்திரிகைக் கவிதைகளின் புதுப் போக்குகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.ஃபில் பட்டம் பெற்ற அண்ணாமலை தற்போது, சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர் என்பதற்கு ஒரு வேடிக்கையான சம்பவம். ‘இனிமேல் சிகரெட்டைத் தொடமாட்டேன்’ என மனைவியிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டார். ஆனால், சிகரெட்டையும் விட முடியவில்லை. காகிதத்தால் செய்த ஒரு ஸ்டாண்டில் சிகரெட்டை நிறுத்தி, கையில் தொடாமலேயே சிகரெட் பிடிப்பார். பார்ப்பதற்கு எல்லோருக்கும் வேடிக்கையாக இருக்கும். ஆனால், அவர் அதை சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட தீவிரத்தோடு செய்துவந்தார். யார் கிண்டல் செய்தபோதும் அதை அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்