ஜெய் ஜவான்! - லெஃப்ட்... ரைட்... லெஃப்ட்!

பதற்றம்இன்ஃபோகிராஃபிக்ஸ்: ஆரிப் முகம்மது

“நமது ராணுவம் பேசாது. வீரத்தைச் செயலில் காட்டும்” - உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின் பிரதமர் மோடி சொன்ன வார்த்தைகள் இவை. அப்படி அவர் சொல்லிய சில நாட்களுக்குள், பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தித் தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டுத் திரும்பியது இந்திய ராணுவம். இந்தப் பதிலடியால் ‘போர் மேகம்’ சூழ்ந்திருக்கிறது.

உரி தாக்குதலுக்கு ராணுவம் மூலம் பதிலடி கொடுப்பதற்கு முன்பு அரசியல் ரீதியாகவும் காய்களை நகர்த்தியது இந்தியா. பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்ததுடன், ‘மாநாட்டில் பங்கேற்கப்போவது இல்லை’ என ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இலங்கை உள்ளிட்ட  நாடுகளையும் அறிவிக்க வைத்தது இந்தியா. இதனால், பாகிஸ்தானுக்கு உலக அரங்கில் தலைக்குனிவு ஏற்பட்டது.  ஆனாலும், ‘பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும்’ என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து மோடிக்கு அழுத்தங்கள் வந்தன. அதையடுத்துதான் பதிலடி தாக்குதலுக்கு இந்தியா தயார் ஆனது. கடந்த 26-ம் தேதி, 5 ராணுவ ஹெலிகாப்டர்களில் பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் தீவிரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ எனப்படும் இந்தத் தாக்குதலில், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தான் ராணுவத்தினரில் 2 பேரும் பலியாகினர்.

இதற்குப் பின், பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்தத் தாக்குதலுக்கு எல்லாக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவு அளித்தன. ஏற்கெனவே, பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் துவண்டுபோயிருந்த பி.ஜே.பி-யினர், அடுத்து நடைபெற உள்ள உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களிலும் பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலையில் இருந்தனர். இப்போது, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ மூலம் பி.ஜே.பி-யினருக்குத் தெம்பு வந்துள்ளது. 

இந்தியாவின் பதிலடியால் பாகிஸ்தான் கடும் ஆத்திரத்தில் உள்ளது. பதில் தாக்குதல் நடத்துவது, வழக்கம்போல தீவிரவாதிகளை ஏவிவிடுவது போன்ற நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபடும் என்பதால், பஞ்சாப் உள்ளிட்ட எல்லைப்புறப் பகுதிகளில் மக்கள் உஷார்படுத்தப்பட்டனர். கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டன. இந்தச் சூழலில்தான், “இந்தியாவின் அச்சுறுத்தல்களுக்கு பாகிஸ்தான் அடிபணியாது. சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடும் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்’’ என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிஸார் அலிகான் சொல்லியிருக்கிறார். இவர் இப்படியென்றால், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்போ, ‘‘எங்களைத் தாக்கினால், அணுகுண்டு வீசி இந்தியாவை அழிப்போம்’’ என இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தார். அதாவது, இந்தியாவை போரில் ஜெயிக்க முடியாது என்பதைக் கடந்தகால வரலாறுகள் மூலம் தெரிந்து கொண்டதால்தான் அணுகுண்டு என்கிற அஸ்திரத்தை பாகிஸ்தான் எடுத்திருக்கிறது. போருக்கு இழுக்கும் வகையிலான இதுபோன்ற நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டால், அதனை எதிர்கொள்ளவும் இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்