திரௌபதியின் அரசியல் அவதாரம்!

‘மகாபாரதம்’ தொலைக்காட்சித் தொடரில் திரெளபதியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்த ரூபா கங்குலி இப்போது, நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துவிட்டார்.

கொல்கத்தாக்காரரான ரூபா கங்குலிக்கு 49 வயது ஆகிறது. நடனத்திலும், கார் ஓட்டுவதிலும் நடிப்பிலும் இவருக்கு அதிக ஆர்வம். கல்லூரிப் படிப்பு முடிந்த உடன், 1985-ம் ஆண்டு அனில் கபூருடன் இணைந்து ‘ஷாஹீப்’ என்ற படத்தில் நடித்தார் ரூபா கங்குலி. அதுதான் அவருக்கு முதல் படம். ‘இதிலே இனியும் வரு’ என்ற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடன் ஜோடி சேர்ந்தார். அப்போது எல்லாம் கிடைக்காத புகழ், மகாபாரதம் தொடரில் நடித்தபோது இவருக்குக் கிடைத்தது. மகாபாரதத்தில் அதிமுக்கியத் துவம் வாய்ந்த திரௌபதி பாத்திரத்தில் நடித்தார்.

சோகமும் கம்பீரமும் இணைந்த அந்தப் பாத்திரத்தில் ரூபாவை பார்த்த மக்கள், அவரையே திரெளபதியாக நினைக்க ஆரம்பித்தார்கள். இந்தியில் மட்டுமல்லாமல், அந்தத் தொடர் மொழி பெயர்க்கப் பட்ட அனைத்து மொழி களிலும் பிரபலம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து பல தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. ‘பத்ம நடீர் மஜ்ஹி’, ‘யுகந்த்’, ‘அட்டர் மஹால்’ போன்ற திரைப்படங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றார். திரைப் படங்கள் மட்டும் அல்லாமல் பல ஹிந்தி மற்றும் பெங்காலி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.

2004-ம் ஆண்டு ‘பௌ பாரெக்ஸ் ஃபாரெவர்’ என்ற ஆங்கிலத் திரைப்படத்திலும் நடித்தார். இவர் ஒரு பின்னணிப் பாடகியும்கூட.

1992-ம் ஆண்டு துர்பா முகர்ஜி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். நடிப்பா? வாழ்க்கையா? என்ற குழப்பம் அவரின் திருமண வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தியது. கணவருக்காக நடிப்பைத் துறந்துவிட்டு கொல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு அவர் குடும்பத் தலைவியாக மட்டும் இருந்து வந்தார். அன்றாட செலவுகளுக்குக் கூட கணவர் பணம் கொடுக்க மறுத்திருக்கிறார். இதனால், இருவருக்குள் மோதல் தொடர்ந்தது. ஒருகட்டத்தில், மனம் வெறுத்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். பின்பு, இருவரும் அதிகாரப்பூர்வமாகப் பிரிந்தனர். தற்கொலைக்கு முயன்ற பின்னர் அவர் கொடுத்த பேட்டியில், ‘‘ஒரு நடிகையாக என்னை ஏற்க அவருக்கு மனம் இல்லை. அதற்குத் தனிப் பக்குவம் தேவை. கவர்ச்சியாக நடிப்பது என் தவறு இல்லை. ஒரு நடிகை என்றால் எல்லாக் கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டி இருக்கும். ஆனால், இதனைப் பக்குவமாக ஏற்றுக் கொள்ள எந்த இந்தியராலும் முடியாது’’ என்று தைரியமான தனது எண்ணத்தைச் சொன்னார் ரூபா.

சில காலங்கள் கழிந்தது... தன்னுடன் திரைப்படப் பாடல்கள் பாடிய, திப்யெந்து என்பவருடன் லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பில் மும்பையில் வாழ்ந்து வந்தார். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்திருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த உறவு அவருக்கு பொருந்திப் போனது. சினிமா, குடும்பம் இவை இரண்டும்தான் வாழ்க்கையா? என்று நினைத்த ரூபா, அரசியலில் குதித்தார். திரெளபதியாக நடித்ததன் மூலமாக அவருக்கு ஏற்பட்ட பிம்பத்தைப் பயன்படுத்தி

பி.ஜே.பி-யில் சேர்ந்தார். அவர் அரசியலில் நுழைந்தது முதல் சர்ச்சை தொடங்கியது. மாநில

பி.ஜே.பி. மகளிர் அணித் தலைவர் ஆன இவருக்கு ஹவுரா வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இவர் வெற்றி பெறவில்லை. ஆனால், திரிணாமுல் கட்சித் தொண்டரை இவர் தாக்கியதாக வழக்குப் பதிவு ஆனது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவர், காரில் சென்றுகொண்டு இருந்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

‘‘இதோ எங்களுக்கும் ஒரு மம்தா கிடைத்து விட்டார்” என்று பி.ஜே.பி-யினர் சொல்ல ஆரம்பித் தார்கள். ‘‘நான் மம்தா அல்ல. அவரைப் போல ஆக முயற்சிக்கவும் இல்லை. எனக்கெனத் தனித்தன்மை உள்ளது. ஆனால், அவரைப் பார்த்துத்தான் அரசியலில் இறங்கும் ஆசை எனக்கு வந்தது” என்று பகிரங்கமாகச் சொன்னார் ரூபா. ‘‘நடிகைக்கு எதற்கு அரசியல்?” என்று அவரிடம் கேட்டார்கள். ‘‘நான் சம்பாதிப்பதற்காக வரவில்லை. எது தேவையோ அது எனக்கு அதிகமாகவே கிடைத்துவிட்டது” என்றும் ரூபா சொன்னார்.

இப்படிப்பட்ட ரூபா கங்குலியை ராஜ்யசபா நியமன எம்.பி-யாகப் பரிந்துரைத்தார் நரேந்திர மோடி. நியமித்துவிட்டார் பிரணாப் முகர்ஜி. கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து சில மாதங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடம் தான் ரூபாவுக்குக் கிடைத்துள்ளது.

‘‘ஒரு நடிகையாக இருந்து, அரசியலுக்கு வருவது ஒன்றும் நம் நாட்டுக்குப் புதிது இல்லை. எனினும், அரசியலுக்கு வரும் பெண்கள் வெற்றி அடைய பல நெருக்கடிகளையும், பிரச்னைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். இந்தத் துன்பங்களைத் தாண்டி, அவர்கள் தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வது என்பது மக்களுக்காக அவர்கள் போராடு வதில்தான் உள்ளது” என்று சொல்லி களம் இறங்கி உள்ளார் ரூபா.

இந்த செய்தி வெளியானதும் இணையத்தில் ஒருவர் அடித்துள்ள கமெண்ட் என்ன தெரியுமா?

‘‘திரெளபதியாக நடித்த ரூபா கங்குலி எம்.பி. ஆகிவிட்டார். வாழ்த்துகள்! சீதையாக நடித்த நயன்தாரா எம்.பி-யாவது எப்போது?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்