தலாக்... தலாக்... தலாக்!

பற்றி எரியும் பஞ்சாயத்து

நூற்றாண்டுப் பகையாக காஷ்மீர் விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழலில், மற்றொரு நெருப்பாக இந்தியா முழுக்கப் பரவத் தொடங்கியிருக்கிறது இஸ்லாமியர்களின் ‘தலாக்’ தொடர்பான சட்ட விவாதங்கள்!

‘‘என் கணவர் தொலைபேசி மூலமாகவே தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டார். குழந்தைகளோடு பாதிக்கப்பட்டுள்ள எனக்கு நீதி வேண்டும்’’ என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஷ்ரத் ஜகான் உச்ச நீதிமன்றப் படியேறியிருப்பதுதான் பிரச்னைக்கான அச்சாரம். உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்ச நீதிமன்றம்.

‘பலதார மணம், தவறான உறவு போன்றவற்றுக்கு வழிவகுக்காமல் தடை விதிக்கும் வகையிலும் தலாக் இருக்கிறது. எனவே தலாக் முறை கட்டாயம் அவசியம்’ என பதில் அளித்திருக்கிறது இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம்.

இந்த நிலையில், ‘பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளே மணவாழ்க்கை தொடர்பான இஸ்லாமிய சட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துவிட்டன. எனவே, மதசார்பற்ற இந்தியாவில் இதுபோன்ற சட்டங்களை மாற்றுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று தன் தரப்பை உச்ச நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது மத்திய பி.ஜே.பி அரசு. எதிரும் புதிருமான இந்தப் பதில்கள்தான் பெரும் அனலைக் கிளப்பியிருக்கின்றன.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?

ஃபாத்திமா முசாஃபர் (தமிழக முஸ்லீம் பெண்கள் கூட்டமைப்புத் துணைத் தலைவர்): ‘‘இறைவன் குர்ஆன் மூலம் விதித்த கட்டளைகள் அனைத்துமே சரியானவைதான். அதேசமயம், வாட்ஸ் அப், மெயில், தொலைபேசி மூலம் தலாக் அனுப்புவதும், ஜமாத்துக்கு நேரில் வராமலேயே கணவன் தலாக் சொல்லிவிடுவதும், அதன் அடிப்படையில் தலாக் அளிப்பதும் முற்றிலும் தவறானது.’’

சல்மா (எழுத்தாளர்): ‘‘இஸ்லாமிய நாடுகளில்கூட தலாக் நடைமுறையைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. தலாக் குறித்த புரிதலையும் அதைச் சரியாக நடைமுறைப்படுத்துவதையும் சட்டமும் நீதிமன்றமும்தான் முன்னின்று செய்ய வேண்டும்.’’

நஜ்மா (தமிழ்நாடு மாநிலத் தலைவர், வுமன் இந்தியா மூவ்மென்ட்): ‘‘ஆண், பெண் இருவருக்குமே இஸ்லாம் சம உரிமையை அளித்துவருகிறது. ஆனால், இஸ்லாம் பற்றி சிலர் தவறாகப் பிரசாரம் செய்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றம் இதில் தலையிடுவது தேவையற்றது.’’

கௌஸர் நிஸார் (வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்):
‘‘பொதுச்சட்டப் பிரிவில்கூட, பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு விவாகரத்து வாங்குவதில் சிக்கல் இருக்கலாம். ஆனால், இஸ்லாத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் தனிநபர் சட்டத்தில் எந்தச் சிக்கலும் இல்லை.’’

குர்ஆன் என்ன சொல்கிறது?

தலாக் சொல்வதற்கு முன்பு கணவன் மனைவி இடையே சமரசம் செய்ய வேண்டும். இரண்டு தரப்பிலும் குழுக்கள் அமைக்க வேண்டும். முதல் தலாக் சொன்னபிறகு கொஞ்ச கால இடைவெளிவிட வேண்டும். அப்போது அவர்கள் சமாதானம் அடைந்தால் மீண்டும் சேர்ந்துகொள்ளலாம். புரிதல் உண்டாக வாய்ப்புத் தரவேண்டும். அதன்பிறகும் சமரசம் ஏற்படவில்லை எனில் இரண்டாவது தலாக் சொல்ல வேண்டும். அதற்கும் கால இடைவெளிவிட வேண்டும். அதிலும் சமாதானம் ஏற்படாத நிலையில்தான் மூன்றாவது தலாக் சொல்லப்பட வேண்டும் என்கிறது குர்ஆன். ஒரே மூச்சில் மூன்று தலாக் சொல்லக் கூடாது என்கிறது இஸ்லாம்.

‘‘கணவரிடம் இருந்து பிரிய வேண்டுமானால் பெண்கள் குலா கொடுக்கலாம். அதற்கு கணவரின் சம்மதம், காஜியிடம் அனுமதி எல்லாம் பெற வேண்டும். அதேப் போன்ற நடைமுறைகளை தலாக் விஷயத்திலும் குர்ஆன் முறைப்படி தான் ஆண்கள் பின்பற்ற வேண்டும். முத்தலாக் இருப்பதால் முஸ்லிம்களிடம் விவகாரத்து அதிகம் இருப்பதாக சொல்வது தவறு. எல்லா சமூகத்திலும் இருப்பதுபோலதான் இங்கேயும் இருக்கிறது. தலாக் பிரச்னைக்கான தீர்வு சுப்ரீம் கோர்ட்டிலோ, மத்திய அரசிடமோ இல்லை. முஸ்லிம்களிடம் சிந்தனை மாற்றம் வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்’’ என்கிறார் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத் தலைவர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது.

‘‘இந்த தலாக் விஷயம் 30 ஆண்டுகளுக்கு முன்பே நாடெங்கும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அப்போது இதைச் செய்தவர்... ஷா பானு. இதன்பிறகு  ‘முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986’ என்ற புதிய சட்டத்தை அப்போதைய மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தப் புதிய சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவுக்கு முற்றிலும் முரணாக அமைந்தது. தற்போது, ஜீவனாம்சம் கோரும் இஸ்லாமியப் பெண்கள் நடைமுறை வசதி கருதி, பெரும்பாலும் குற்றவியல் நடை முறை சட்டத்தின் 125-வது பிரிவின்படிதான் மனுசெய்கிறார்கள்’’ என்றார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரோஜா ரமேஷ்.

உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப் போகிறது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்