கிருஷ்ணசாமியை பார்த்த ஜெ - ஜெ-வைப் பார்க்க வந்த கிருஷ்ணசாமி!

ப்ளாஷ்பேக்

இது ப்ளாஷ் காலகட்டம்.

2007-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி. ராமநாதபுரம் முதுகுளத்தூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக அப்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி போனார். விழாவில் கலந்துகொள்ள மதுரையிலிருந்து காரில் முதுகுளத்தூரை நோக்கிப் புறப்பட்டார் கிருஷ்ணசாமி. காரின் முன் சீட்டில் அவர் அமர்ந்திருக்க... பின் சீட்டில் கட்சி நிர்வாகிகள் இருந்தனர். முதுகுளத்தூர் அருகே உள்ள கீழ் கன்னிச்சேரி என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது 50 பேர் கொண்ட கும்பல் காரை சுற்றி வளைத்தது. தலையில் டார்ச் லைட்டுகளைக் கட்டியபடி வந்த கும்பலின் கைகளில் தீப்பந்தங்கள், வேல் கம்பு, அரிவாள், உருட்டுக் கட்டைகள் என பயங்கர ஆயுதங்கள். கார் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினார்கள். காருக்குள் இருந்த கிருஷ்ணசாமியை நோக்கி வேல் கம்புகள் பாய்ந்தன. தாக்குதல் நடத்திய கும்பல் ஓடி மறைந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த கிருஷ்ணசாமி படுகாயத்தோடு பரமக்குடி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கே முதலுதவி அளிக்கப்பட்டு மதுரைக் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். காங்கிரஸ் ஆதரவோடு மைனாரிட்டி ஆட்சியை அப்போது நடத்திக் கொண்டிருந்தது தி.மு.க. காங்கிரஸ் கட்சித் தலைவரையே தாக்கிய விவகாரம் பரபரப்பை உண்டக்கியது. அந்த விழாவில் பங்கேற்க வந்த திராவிட விழிப்புணர்ச்சிக் கழகத் தலைவர் பி.டி.குமாரைத் தாக்க வந்தவர்கள்தான், தவறுதலாக கிருஷ்ணசாமியைத் தாக்கி விட்டார்கள். மதுரை அப்போலாவில் இருந்து சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனைக்கு கிருஷ்ணசாமி மாற்றப்பட்டார்.

நவம்பர் 2-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு தோழி சசிகலாவுடன் வந்து கிருஷ்ணசாமி பார்த்தார் ஜெயலலிதா. ‘‘நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டேன். எல்லாத் தகவல்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். உங்களுக்கு இது நடந்திருக்கக் கூடாது. இப்ப உடம்பு எப்படி இருக்கு?’’ என அக்கறையோடு கேட்டதுடன் ‘‘உங்களை கடவுள்தான் காப்பாத்தியிருக்காரு...’’ என்றார் ஜெயலலிதா. உடனே கிருஷ்ணசாமி, ‘‘நீங்க வணங்குற கடவுள்தான் என்னைக் காப்பாத்தியிருக்காரு’’ என்றபோது ஜெயலலிதா முகத்தில் லேசான புன்னகை. கிருஷ்ணசாமி நெஞ்சை நோக்கிப் பாய்ந்த வேல் கம்பு, அவர் அணிந்திருந்த ராமர் டாலரில் முதலில் பட்டு, வழுக்கி வயிற்றில் பாய்ந்தது. அன்றைக்கு கிருஷ்ணசாமியின் உயிரைக் காத்தது ராமர் டாலர்தான். அதை வைத்துதான் ‘‘நீங்க வணங்குற கடவுள்தான் என்னைக் காப்பாத்தியிருக்காரு’’ என சொல்லியிருக்கிறார். ‘‘உங்க நல்ல மனசுக்கு எதுவுமே ஆகாது... நீங்க நல்லா இருப்பீங்க... நூறாண்டு வாழ தெய்வத்தை நான் வணங்குகிறேன்’’ என சொன்னார் ஜெயலலிதா. பக்கத்தில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணசாமியின் மகள் சௌமியா அன்புமணி (டாக்டர் ராமதாஸின் மருமகள்) ஜெயலலிதாவுக்கு வணக்கம் சொன்னார். ‘‘என் கல்யாணத்துக்குக்கூட நீங்க வந்தீங்கம்மா. 1991-ம் வருஷம் டாக்டர் ஐயா மகனுக்கும் எனக்கும் திருமணம் நடந்துச்சே’’ என்று சௌமியா அன்புமணி சொல்ல... ‘‘ஓ நல்லா ஞாபகம் இருக்கு... எப்படிம்மா இருக்க’’ என சொல்லிவிட்டு  விசாரித்துவிட்டுக் கிளம்பினார் ஜெயலலிதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்