அப்போலோ... மவுன்ட் எலிசபெத்!

சிகிச்சை

மிதாப் பச்சன், ரஜினி​காந்த், விஜயகாந்த் என வி.ஐ.பி.க்கள் ட்ரீட்மென்ட் எடுத்த புகழ்பெற்ற மருத்துவமனை மவுன்ட் எலிசபெத். சிங்கப்பூரில் இருக்கும் இந்தப் பிரபல மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் அப்போலோவுக்கு வந்தது​தான் இப்போது ஹாட் டாபிக்.

ஜெயலலிதாவை அடுத்தகட்ட சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல இருக்கிறார்கள் என்று முதலில் ஒரு தகவல் பரவியது. அதனை அப்போலோ நிர்வாகம் உடனடியாக மறுத்தது. ‘வதந்திகளை நம்ப வேண்டாம். அது  தவறான தகவல்கள்’ என்றும் வெளிப்படையாகச் சொன்னார்கள். 

முதல்வர் சிங்கப்பூர் செல்ல​வில்லை. ஆனால், சிங்கப்பூர் மருத்து​வர்கள் அப்போலோ வரு​கிறார்கள். ஏற்கெனவே, லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் ரிச்சர்ட் பியெல் சென்னையில் அப்போலோ வரை வந்து அவரது உடல்நிலை தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் கலந்தாய்வு செய்தார். ரிச்சர்ட் பியெல் நுரையீரல் மற்றும் செப்சிஸ் எனப்படும் ஒருவகை உயிர்க்கொல்லி பாக்டீரியா நோய் சிகிச்சை நிபுணர். இந்தத் தகவல் பரவியதும்தான் பல விஷயங்களை வெளிப்படையாக மருத்துவமனை நிர்வாகம் சொல்லத் தொடங்கியது.  முதல் அறிக்கையில் தான் குறிப்பிட்ட காய்ச்சல் என்பதை அடுத்து வெளியிட்ட அறிக்கையில் தொற்று என்று குறிப்பிட்டது. அதற்​கான சிகிச்சை பற்றிய ஆய்வுக்குத்தான் டாக்டர் பியெல் வந்தார் எனத் தெரிவித்தது.

அதற்கடுத்து 6-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் முதல்வருக்குப் பல காலங்களாகவே நீரிழிவு நோய் மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருப்பதை அதிகாரபூர்வமாக உறுதி செய்தது.

மேலும் இம்முறை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து நுரையீரல் நோய் நிபுணர் கில்நாணி, இருதய நோய் நிபுணர் நிதிஷ் நாயக், மயக்கவியல் நிபுணர் அஞ்சன் த்ரிகா உள்ளிட்டோர் அப்போலோ வருகை தந்து முதல்வரின் உடல்நிலையை சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழுவுடன் இணைந்து ஆய்வு செய்தனர். இதையும் தனது 6-ம் தேதி அறிக்கையில் அப்போலோ குறிப்பிட்டிருந்தது.

கடந்த அக்டோபர் 10-ம் தேதி வரை வெளியிட்ட அறிக்கை தகவலின்படி, “முதல்வரின் உடல்நலம் பெற அவர் நீண்ட நாட்கள் அப்போலோவில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டி இருக்கும்” என்ற செய்திகள் வெளியானது. அதற்கடுத்து எந்த அறிக்கையையும் அப்போலோ வெளியிடவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் நெருங்க இருக்கிறது. இந்த நிலையில் சிங்கப்பூரின் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர்கள் முதல்​வரின் சிகிச்சைக்காக அப்போலோ வரு​கிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகின. மேலும் அவர்கள் உடற்பயிற்சி  சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு என்றும் தகவல்கள் வந்தன. சிகிச்சை தரும் மருத்துவர்களின் பெயர்களை இதுவரை அப்போலோ வெளியிட​வில்லை. மருத்துவர்களின் வருகையையும் அப்போலோவின் அதிகாரபூர்வ தகவல் மையங்கள் மறுக்கவில்லை.

சிங்கப்பூரின் மிகப் பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை நீரிழிவு சார்ந்த சிறுநீரகக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் பிசியோதெரபி பிரச்னைகளிலிருந்து மீண்டுவர தனி சிகிச்சைக் குழு இயங்கி வருகிறது. அதன்படி உடலினை மீண்டும் இயங்க​வைத்தல், உடல் உறுப்புகளின் தடைபட்ட அன்றாட செயல்பாடுகளை மீட்டுக் கொண்டுவருதல், பேச்சு தடைப்பட்டிருந்தால் அதனை மீட்டுக்கொண்டுவருவதற்கான சிகிச்சை உள்ளிட்டவை அளிக்கப்​படுகின்றன. 26 தனி மருத்துவ நிபுணர்களைக் கொண்ட இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்களும் உள்ளனர். ஆனால், அப்போலோ சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த மருத்துவர்களின் பெயர்களை இன்னும் அறிவிக்காத நிலையில் வந்தவர்கள் யாரென்பதும் ஊர்ஜிதப்படுத்தப்​படவில்லை.

உடல்நலம் பெறுவதற்கு இப்படி ஏராளமான மருத்துவர்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள் என்பதை மட்டும் அறியமுடிகிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்