பாகிஸ்தானை எதிர்த்த பத்திரிகையாளர்!

அடாவடி

பாகிஸ்தான் பத்திரிகையாளர் சிறில் அல்மெய்டா, தற்போது உலகின் கவனத்தைப் பெற்றுள்ளார். பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டான்’ ஆங்கில நாளேட்டில், பாகிஸ்தான் ராணுவத்தைக் கடுமையாக விமர்சனம் செய்ததால், நாட்டை விட்டு அவர் வெளியேறுவதற்கு அந்த நாட்டு அரசு தடைவிதித்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பிறகு, தடையை விலக்கிக்கொண்டது பாகிஸ்தான் அரசு.

‘‘இது என் நாடு... என் வாழ்க்கை... என்ன தவறு நடந்தது?” என்று அச்சமின்றி கேள்வி எழுப்பி உள்ளார் அல்மெய்டா.

லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆகிய இயக்கங்கள், பாகிஸ்தானைத்  தலைமையகமாகக்  கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்தியா மீதான எல்லை தாண்டியத் தாக்குதல்களின் பின்னால் இந்த இரண்டு இயக்கங்களும் இருந்துள்ளன. இந்த அமைப்புகளுக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மறைமுகமான ஆதரவு அளித்து வருவதும் ரகசியம் அல்ல. பாகிஸ்தானின் ராணுவம், அதன் உளவு அமைப்பு ஆகியவற்றின் இந்தச் செயல்பாடுகளுக்குப் பாகிஸ்தான் பொதுமக்களும் கடுமையான எதிர்ப்பை காட்டித்தான் வருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஓர் உயர்மட்டக் குழு கூட்டத்தைக் கூட்டி உள்ளார். அதில், ஐ.எஸ்.ஐ அமைப்பின் தலைவர் ரிஸ்வான் அக்தர்,  நவாஸ் ஷெரீப்பின் தம்பியும் பஞ்சாப் முதல் மந்திரியுமான ஷெபாஸ் ஷெரீப் கலந்துக்கொண்டனர். அந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் முரண்பட்ட கருத்துக்கள் வெடித்ததாம். “பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஆதரவு இருப்பதால் தான் ராணுவத்தால் நடவடிக்கை எடுக்க முடிவது இல்லை” என அரசுத் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெயர் வெளியிட விரும்பாத  சிலர் சொல்லியிருக்​கிறார்கள். அந்தத் தகவலை பாகிஸ் தானில் இருந்து வெளியாகும் ‘டான்’ என்ற நாளிதழ் வெளியிட்டு உள்ளது. அந்தக் கட்டுரையை எழுதியவர் தான் சிறில் அல்மெய்டா.

‘டான்’ பத்திரிகையில், கடந்த 6-ம் தேதி கட்டுரை ஒன்றை எழுதினார் சிறில் அல்மெய்டா. பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைப்பாடுகளுக்கும், அதற்குப்  பொது மக்கள் வைக்கும் விமர்சனம் பற்றியும், ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் அந்தக் கட்டுரையில் அல்மெய்டா எழுதி இருந்தார். அந்தக் கட்டுரை, கவர் ஸ்டோரியாக வெளிவந்ததால் பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை உருவானது.

அந்தக் கட்டுரையில் வெளியான விவரங்களை, பாகிஸ்தான் அரசு முற்றிலுமாக மறுத்தது.  கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதுபோல, ஐ.எஸ்,ஐ அமைப்பு இந்த இரண்டு இயக்கங்களுக்கு ஆதரவு தரவில்லை என அரசு மறுக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ‘கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, அந்தக் கூட்டத்தில் எந்த மோதலும் நடக்கவில்லை’ எனக் கூறி இருக்கிறார். பஞ்சாப் மாநில முதல்வரும் இந்தக் கட்டுரைக்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஆனால், ‘‘நாங்கள் வெளியிட்ட செய்தி உண்மை தான்.  அந்தக் கட்டுரையின் உண்மைத்தன்மையை பலமுறை உறுதிசெய்த பின்னரே, அதை வெளி யிட்டோம். மிகவும் மதிக்கத்தக்க ஒரு பத்திரிக்கையை, தீங்கு இழைக்கும் விதமாக அரசு நடத்துகிறது. இது சரியல்ல” என்று ‘டான்’ பத்திரிக்கை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்