நீதி... நியாயம்... நீதிபதி! - சிக்கல்... சர்ச்சை... கட்ஜூ

வழக்கு

 

டிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வதில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு இணை அவர்தான். ஜெயலலிதா பற்றி அவர் அடித்த கமென்ட்டினால் அதிர்ந்து போய் கிடந்தது தமிழகம். இப்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கமென்ட் அடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவருடைய ஒரு ஃபேஸ்புக் பதிவு, நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாகப் பெரும் புரட்சியை உண்டாக்கியுள்ளது. நீதிமன்றத்தால் அளிக்கப் பட்ட தீர்ப்பில் மக்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால், அதை வெளிப்படுத்த ஒரு களம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து ஒரு போஸ்ட் போட்ட ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுவை நேரில் வந்து விவாதிக்குமாறு அழைத்துள்ளது உச்ச நீதிமன்றம். ஆனால், இது சாத்தியமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மாலில் பணிபுரிந்தவர் சவுமியா. திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்த நிலையில் நிச்சயதார்த்த விழாவுக்காக, கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி எர்ணாகுளம் - சோரன்பூருக்கு ரயிலில் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார். இரவு 10 மணியளவில் வல்லத்தோல் நகர் ரயில் நிலையத்தை ரயில் கடந்து சென்ற சில நிமிடங்களில், விருத்தாச்சலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர், சவுமியா அணிந்திருந்த நகைகளையும், பணத்தையும் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

சவுமியா எதிர்த்துக் கூச்சல் போட முயன்றதால் கொள்ளையன் கோவிந்தசாமி, சவுமியாவின் தலையை ரயில் சுவரில் பலமுறை இடித்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார். பிறகு அவரும் ரயிலில் இருந்து வெளியே குதித்து, 200 மீட்டர் நடந்து சென்று ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சவுமியாவை பார்த்துள்ளான். அப்போதுகூட அவருக்குள் சிறிதும் இரக்கம் தோன்றவில்லை. தண்டவாளத்தில் கிடந்த சவுமியாவை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினார். மிருகத்தனமான தாக்குதலுக்கு இரையான சவுமியா, திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பிப்ரவரி 6-ம் தேதி பரிதாபமாகப் பலியானார்.

பிப்ரவரி 3-ம் தேதி கோவிந்தசாமியை கேரள போலீஸார் கைதுசெய்தனர். கோவிந்தசாமி ஏற்கெனவே 8  வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டவர். சவுமியா இறந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதில் இந்த வழக்கை விரைந்து விசாரித்த திரிச்சூர் விரைவு நீதிமன்றம், கோவிந்தசாமிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. கேரள உயர் நீதிமன்றமும் இத் தீர்ப்பை உறுதி செய்தது.

இதை எதிர்த்து கோவிந்தசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பி.சி.பன்த், யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கோவிந்தசாமிக்கு எதிராக பாலியல் பலாத்காரம், தீவிர காயம் ஏற்படும் வகையில் தாக்கி வழிப்பறி செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. ஆனால், போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி கொலைக் குற்றச்சாட்டை ரத்துசெய்து, கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில்தான் கோவிந்தசாமிக்கு தண்டனை குறைக்கப் பட்டத்தை விமர்சிக்கும் பதிவு ஒன்றினை ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது வலைப்பக்கத்தில் பதிந்திருந்தார். அந்தப் பதிவில், ‘‘நீதிபதிகள் பெரும் தவறினை செய்துள்ளனர். சவுமியா ரயிலிலிருந்து குதித்தார், கோவிந்தசாமி தள்ளிவிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி தண்டனை குறைத்துள்ளார்கள். பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நீதிபதிகளிடம் இத்தகைய தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை. கேள்விப்பட்ட தகவலை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டக் கல்லூரி மாணவர்களுக்குக்கூட தெரியும்’’ என காரசாரமாக சாடியிருந்தார்.

கட்ஜுவின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக இந்த வழக்கில் கோர்ட் கூறுவது சரியா? அல்லது அவர் கூறுவது சரியா என்பது குறித்து நேரில் விவாதிக்க வருமாறு கட்ஜுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து,  ‘‘அரசியலைமைப்பு சட்டம் பிரிவு 124(7)-ன் கீழ் ஓய்வு பெற்ற நீதிபதிகள், நீதிமன்றத்தில் வாதாடக் கூடாது. அதனால், நான் நீதிமன்றத்தில் விவாதிக்கப் போவதில்லை. இதுபோன்ற வழிமுறையை உச்ச நீதிமன்றம் சொல்வது சரியில்லை’’ என மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்