தீபாவளிக்கு வேட்டு வைத்த தமிழக அரசு!

புலம்பும் அரசு ஊழியர்கள்

‘தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வால் மக்கள் பணியில் புதிய உத்வேகத்துடன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள உதவும் என நான் நம்புகிறேன்’ என்று 2015-ம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட்டபோது முதல்வர் ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்று புலம்புகிறார்கள் அரசு ஊழியர்கள்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி, ‘‘விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில் அடிப்படை சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிதத்தை 6 மாதத்துக்கு ஒரு தடவை உயர்த்தப்படும். அதன்படி, 01.07.2016 அன்று முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி அறிவிப்பையே இன்னும் தமிழக அரசு வெளியிடவில்லை. தீபாவளி நெருங்கும் நேரத்திலாவது இந்த மூன்று மாதங்களுக்கும் சேர்த்து அகவிலைப்படியை உடனே ரொக்கமாகக் கொடுக்க வேண்டும். அடிப்படை ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படிதான், தீபாவளி செலவுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் 1.1.2016 முதல் மத்திய அரசு ஊழியர்கள் புதிய சம்பள விகிதத்தில் அகவிலைப்படியை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எங்களுக்குப் புதிய ஊதியமும் வரவில்லை. அகவிலைப்படியும் இன்னும் தரவில்லை.

தொகுப்பூதியம், மதிப்பூதியம் வாங்கும் ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 19.2.2016-ல் அறிவித்து இருந்தார். 9-மாதங்கள் ஆகியும் இன்னும் நடவடிக்க இல்லை. பெண் ஊழியர்களின் பிரசவகால விடுமுறையை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்று 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா 29.08.2016 அன்று அறிவித்தார். அதற்குகூட இன்னும் அரசாணை போடவில்லை. இன்று வரை, பிரசவத்துக்கு 6 மாத விடுமுறைதான் வழங்கப்படுகிறது. இப்படி பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அரசின் உத்தரவை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்” என்றார்.

அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகி குமரேசன், “இந்த அகவிலைப்படி தொகை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வரும் என்பதால், எங்களை போன்ற ஊழியர்கள் அதை எதிர்நோக்கி சில செலவுகளைத் திட்டமிட்டிருப்போம். இந்த முறை ஜூலை மாதத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை இந்த மாதம் வந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்தோம். குறிப்பாக இந்த மாதக் கடைசியில் தீபாவளி பண்டிகை வேறு வருவதால் இந்தத் தொகை வந்தால் தீபாவளிக்கு பயன்படும் என்று நினைத்திருந்தோம். ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அமைச்சரவை கூட்டம் நடத்தி அதற்கான ஒப்புதலை பெறுவார்கள் என்று நினைத்தோம் எந்த அறிவிப்பும் வரவில்லை என்பதால், அரசு ஊழியர்களுக்கு இந்த தீபாவளிக்கு சிக்கலை தான் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இது போன்று அகவிலைப்படி நிறுத்தபட்டதில்லை. அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து கோரிக்கை வைத்தாலே உடனடியாக அறிவிப்பு வந்துவிடும். அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து சொல்லியும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தியுள்ளது” என்று புலம்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்