வருமானத்துக்குரிய மேயர்! - திருப்பூர் தகிடுதத்தம்...

ஊழல்

ஸ்ஸில் நம் அருகில் அமர்ந்து பயணிக்கும் ஒருவர் கண் அயர்ந்து தூங்கிவிட்டால், அவர் இறங்கும் ஊர் வந்ததும், யாராவது அவரை தோள்தட்டி எழுப்பிவிடுவார்கள்.  ஆனால், வெளியூரில் இருந்து திருப்பூர் செல்லும் பயணிகள் கண் அயர்ந்துவிட்டால், அவர்களைத் தட்டி எழுப்பும் வேலையை திருப்பூரே பார்த்துக்கொள்ளும். ஆம்... திருப்பூர் மாநகருக்குள் நுழைந்ததும் வீசும் சொல்லமுடியாத துர்நாற்றம், அந்தப் பயணியை அலறியடித்து எழவைக்கும். காஞ்சி மாநதி என்றழைக்கப்பட்டு, பன்னீர் போல ஓடும் நன்னீரை தாகம் தீர மக்கள் அள்ளிக்குடித்த நொய்யல் நதி, இன்று நாற்றம் வழியும் அமில ஆறாகிக் கிடக்கிறது.

உள்ளாடை ஏற்றுமதியில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் திருப்பூர் மாநகரின் உள்கட்டமைப்பு வேதனை அளிக்கும் விதத்தில் உள்ளது. 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மேயர் பொறுப்பில் அமர்ந்தார் அ. விசாலாட்சி. அவருடைய நிர்வாகத்தில், திருப்பூர் மாநகராட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

‘‘திருப்பூர் மாநகராட்சியில், ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்படுகிறது. 150 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் வருகிறது. ஆனால், திருப்பூர் மாநகராட்சியின் நிர்வாகம் அந்த அளவுக்குத் தரமானதாக இல்லை. பாதசாரிகள் நடந்து  செல்ல நடைபாதைகள் கூட இல்லை. உலக அளவில் பெருமையாகப் பேசப்படும் இந்த ஊரை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவுமே இந்த ஐந்து ஆண்டுகளில் தீட்டப்படவில்லை” என்றார், தே.மு.தி.க-வின் 56-வது வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜ்.

மேலும் அவர் நம்மிடம்,  “ ‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்படும் திருப்பூருக்கு பனியன் ஆர்டர் கொடுக்க பல நாடுகளைச் சேர்ந்த ‘பையர்கள்’ வருகிறார்கள். ஆனால், ஏற்றுமதி நிறுவன முதலாளிகளோ, அந்த ‘பையர்களை’ திருப்பூருக்குள் அழைத்து வருவதில்லை. மாறாக, கோயம்புத்தூரில் தங்கவைத்து ஆர்டர்களைப் பெற்றுக்கொண்டு, அப்படியே அனுப்பிவிடுகிறார்கள். அதற்கு, திருப்பூரில் நிலவும் சீர்கெட்ட சுகாதாரம்தான் காரணம். வருமானம் குறைவான மாநகராட்சிகள் எல்லாம், திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால், திருப்பூரைப் பொருத்தவரை வீதிகள்தோறும்  குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன. இந்தக் குப்பைகளுக்கு ‘குட்பை’ சொல்லவேண்டும் என்பதற்காக, இடுவாய் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சொன்னார்கள். பிறகு, அந்தத் திட்டத்தையே குப்பையில் போட்டுவிட்டார்கள்.

முன்னாள் அமைச்சர் ஆனந்தன் ஒரு கோஷ்டியாகவும், மேயர் விசாலாட்சி இன்னொரு கோஷ்டியாகவும், துணை மேயர் குணசேகரன்  தனி கோஷ்டியாகவும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களைப் பங்கு போட்டு விளையாடியதில் நல்ல தீர்மானங்கள் பல நிறைவேறவில்லை.  அப்படி நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் ஆமை வேகத்தில் நடைபெற்றதால், எல்லாமே அரைகுறையாகக் கிடக்கின்றன. அசுரவேக வளர்ச்சியில் இருக்கும் திருப்பூருக்கு ஈடுகொடுக்க, ‘தீயா வேலை செய்யும் மேயர்’ தேவை” என்றார் கோவிந்தராஜ்.

மேயர் தேர்தலின்போது வேட்பாளர் விண்ணப்பத்தில், 7-வது வகுப்பு மட்டுமே படித்துள்ளதாக விசாலாட்சி குறிப்பிட்டார். ஆனால், மேயர் நாற்காலியில் அமர்ந்ததும், தன் பெயருக்குப் பின்னால் ‘பி.ஏ.’ பட்டத்தைச் சேர்த்துவிட்டார். போலிப் பட்டம் குறித்த நிருபர் ஒருவரின் கேள்விக்கு,  விசாலாட்சி அளித்த பதில், ‘வாட்ஸ் அப்’ மூலம் தமிழகத்தையே கலங்கடித்தது. ‘‘எனது பெயருக்குப் பின்னால் உள்ள பி.ஏ. என்பது பட்டம் கிடையாது. ‘பினாங்கு அண்ணாமலை’ என்ற என் அப்பாவின் பெயர்’’ என்று, தோசையை அல்ல... தோசைக்கல்லையே திருப்பிப்போட்டார் மேயர் விசாலாட்சி.

“மாநகராட்சித் துப்புரவு பணியாளர்கள் நியமனத்துக்குத் தலா 3 லட்சம் ருபாய் லஞ்சம் கேட்டதாக மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதுபோக, மொத்தம் உள்ள நான்கு மண்டலங்களில் இரண்டு மண்டலங்களில் உள்ள குப்பைகளை அள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளித்ததையடுத்து, சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனம் 900 துப்புரவுப் பணியாளர்களை நியமனம் செய்து குப்பைகளை அள்ளி வருகிறது. இப்படி டன் கணக்கில் அள்ளப்படும் குப்பையில் இருந்து ஆண்டுக்கு கோடிக்கணக்கில் தனிப்பட்ட வருமானம் கிடைப்பதாகவும், இந்த தனியார் நிறுவனம் மேயர் விசாலாட்சி உள்ளிட்ட சிலரின் பினாமி நிறுவனம் என்ற பேச்சும் உள்ளது. இன்று பெருகிவரும் திருப்பூர் மக்கள் தொகைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான நான்காவது குடிநீர் திட்டம் பேச்சளவிலேயே இருக்கிறது.” என்கிறது மாநகராட்சி வட்டாரம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்