மெடிக்கல் டிக்‌ஷ்னரி

விளக்கம்

ஜெயலலிதா மருத்துவ மனையில் அட்மிட் ஆன பிறகு 11 அறிக்கைகளை வெளியிட்டது அப்போலோ. அந்த அறிக்கைகளில் இடம் பெற்றுள்ள சொற்கள் பலவும் மருத்துவம் சம்பந்தப்பட்டது. அந்த மருத்துவ வார்த்தைகளுக்கான விளக்கங்கள் இதோ...

Fever (காய்ச்சல்): காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல. உடல் உறுப்புக்களில் பாதிப்பு, நோய்த்தொற்று போன்ற காரணத்தின் வெளிப்பாடாக காய்ச்சல் ஏற்படுகிறது. உடலின் வெப்பநிலை 38’ செல்சியஸுக்கு அதிகமாகப் போவது காய்ச்சல் எனப்படும். வெப்பநிலை மிகவும் அதிகமாக செல்லும்போது, ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். தீவிர சிகிச்சைக்கு உட்படும் 5 சதவிகிதம் பேருக்குக் காய்ச்சல் இருக்கும்.

Dehydration (நீரிழப்பு): வெயில், போதுமான அளவு நீர் அருந்தாமை, வயிற்றுப்போக்கு, வாந்தி, ரத்தம் வெளியேறுவது உள்ளிட்ட காரணங் களால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறிவிடுகிறது. இதை டிஹைட்ரேஷன் அல்லது நீரிழப்பு என்று சொல்வர். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அதை வெளியேற்ற அதிக அளவில் சிறுநீர் வெளியேறு வதாலும் நீரிழப்பு ஏற்படலாம்.

Normal Diet (இயல்பான ஊட்டச்சத்து உணவு): ஒவ்வொருவருக்கும் தேவையான கலோரி மாறுபடும். உடலுக்குத் தேவையான சாிவிகித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வதை இயல்பான ஊட்டச்சத்து உணவு என்று சொல்வர்.

Nutrition (ஊட்டச்சத்து): உடலின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நுண் ஊட்டச்சத்துக்கள் தேவை.

Standard Medical Protocol (அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகள்): நோயின் தன்மைக்கு ஏற்ப, என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் உள்ளன. நோய் அறிகுறிகள் மற்றும் நோயாளியின் மருத்துவ வரலாறு அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.

Recuperative Treatment (சத்துமீள் சிகிச்சை): நாட்பட்ட அளவில் நோய்வாய்ப்பட்டு மருந்துகளின் கட்டுப்பாட்டில் உடல் இயங்கும் நிலையில், சிகிச்சைக்குப் பிறகு உடலை மீட்டுக்கொண்டுவர அளிக்கப்படும் சிகிச்சை முறை.

Antibiotics (ஆன்டிபயாடிக் அல்லது பாக்டீரியா நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள்): உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரியை அழிக்கும் மருந்துக்கு ஆன்டிபயாடிக் என்று பெயர். டாக்டர் பரிந்துரைக்கும் காலம் வரை, இந்த மருந்தை எடுக்க வேண்டும். இல்லையெனில், மருந்துக்கு எதிராக செயல்படும் தன்மையைக் கிருமி பெற்றுவிடும்.

Infection (நோய்த் தொற்று): காற்று, நீர், உணவு, ரத்தம், என எந்த ஒரு வழியாகவும் நம் உடலுக்குள் கிருமி நுழைவதை நோய்த் தொற்று என்கிறோம். எளிதில், நோய்த்தொற்றுக்கு ஆளாகும் உள் உறுப்பு நுரையீரல்தான்.

Infectious Disease Specialists (தொற்றுநோய் சிறப்பு நிபுணர்கள்): நிமோனியா, டெங்கு, சிக்குன்குனியா போன்றவை தொற்றுநோய்கள். இதற்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்களுக்குத் தொற்றுநோய் சிறப்பு நிபுணர் என்று பெயர்.

Respiratory Support (செயற்கை சுவாச உதவி): சுவாசிப்பதில் பிரச்னை இருப்பவர்களுக்கு வென்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசக் கருவியைப் பயன்படுத்தி சுவாசிக்கச் செய்கின்றனர். நுரையீரல் தொற்று உள்ளவர்களுக்கு இதன் வழியாக மருந்து செலுத்தும் சிகிச்சை, நுரையீரல் விரிவாக்கச் சிகிச்சை, எக்மோ எனப்படும் இணைக்கப்பட்ட இதய மற்றும் நுரையீரல் கருவிச் சிகிச்சை உள்ளிட்டவையும் வழங்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்