தேர்தலுக்கு செலவழித்தது 97 கோடி! - இது தி.மு.க செலவுக் கணக்கு

இன்ஃபோகிராப்ஸ்: ஆரிஃப் முகம்மது

‘பறந்த செலவு ரூ.9.42 கோடி; தேர்தலுக்கு ரூ.64.72 கோடி - அ.தி.மு.க வரவு செலவு!’ என்ற தலைப்பில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. செய்த செலவு கணக்கை 9.10.2016 தேதியிட்ட ஜூ.வி. இதழில் பார்த்தோம். இது தி.மு.க. தேர்தல் செலவு கணக்கு!

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு தி.மு.க. வசம் தேனாம்பேட்டை இந்தியன் வங்கியில் 205.51 கோடி ரூபாய் இருப்பு இருந்தது. தேர்தலுக்காகக் கட்சிக்கு கலெக்‌ஷன்கள் வரத் தொடங்கின. அதாங்க நன்கொடைகள். அப்படி நேரடியாகவும் செக் மூலமாகவும் வந்த வரவு மட்டும் 9.69 கோடி ரூபாய். மொத்தமாக பார்த்தால் 215.21 கோடி ரூபாய் தி.மு.க-விடம் இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு மீதம் இருக்கும் தொகை  117.86 கோடி ரூபாய்.

அடுத்து செலவுகளை அலசுவோம். ஸ்டார் பேச்சாளர்களுக்குப் போக்குவரத்து உட்பட எந்தச் செலவையும் தி.மு.க. செய்யவில்லை. ஆனால், தலைவர்களின் போக்குவரத்து செலவுகளை மேற்கொண்டார்கள். இதற்காக 1.16 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. விமானம், ஹெலிகாப்டர் எதையும் பயன்படுத்தாமல் சாலை வழியாக சென்றுதான் பிரசாரம் செய்ததாக சொல்லியிருக்கிறது தி.மு.க.

இந்துஸ்தான் தாம்சன் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மூலம் 28.36 கோடிக்கு டி.வி. மற்றும் பத்திரிகை​களுக்கு பிரசார விளம்பரங்கள் அளிக்கப்பட்டன. பென்னட் கோல்மேன் என்கிற நிறுவனத்தின் மூலம் 4.75 கோடி ரூபாய்க்கு பல்க் எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் விளம்பரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கூகிள் நிறுவனத்தின் மூலம் இணையத்தளங்களில் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு தரப்பட்ட தொகை 35 லட்சம் ரூபாய். பிரின்ட், எலக்ட்ரானிக்ஸ், பல்க் எஸ்.எம்.எஸ்., கேபிள் டி.வி, இணையத்தளங்கள், டி.வி. சேனல்கள் என விளம்பரங்களுக்காக மட்டும் 33.46 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது தி.மு.க.

பெங்களூரைச் சேர்ந்த நியூ கான்செப்ட் இந்தியா, ரஷ்பா என்டர்பிரைசஸ், ரேகா மார்க்கெட்டிங், மகாவீர் இன்டெர் நேஷனல் ஆகிய நான்கு நிறுவனங்களில் இருந்து 4.62 கோடி ரூபாய்க்கு 21.20 லட்சம் தொப்பிகளையும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜே.கே. ஆப்செட் பிரின்டர்ஸ், கிளாசிக்கா டிசைன் பிரின்டிங், நியூ கான்செப்ட் இந்தியா ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 1.86 கோடி ரூபாய்க்கு 59.24 லட்சம் மாஸ்க்குகள் மற்றும் 1.13 கோடி ரூபாய்க்கு 98 லட்சம் பேட்ஜ்களும் ரஷ்பா என்டர்பிரைசஸ், ரேகா மார்க்கெட்டிங் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 66.36 லட்சம் ரூபாய்க்கு 98.70 லட்சம் மஃப்ளர்களும் ரஷ்பா என்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து 24.29 லட்சம் ரூபாய்க்கு 98.70 லட்சம் டவல்களும் ராயப்பேட்டை அஸ்வின் பிரின்டிங் ஏஜென்ஸியில் இருந்து 4.13  லட்சம் ரூபாய்க்கு 1.57 லட்சம் ஸ்டிக்கர் களும் வாங்கப்பட்டிருக்கின்றன. இப்படி போஸ்டர், பேனர், பேட்ஜ், ஸ்டிக்கர் வகையில் மட்டும் 8.56 கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. மஃப்ளர்களுக்கு கொடுத்த தொகைதான் வாய் பிளக்க வைத்திருக்கிறது. ஒரு மஃப்ளருக்கு 67 பைசா கொடுத்ததுதான் கொடுமை.

தமிழ், தமிழர் என பேசும் தி.மு.க., தொப்பி, மாஸ்க், பேட்ஜ், மஃப்ளர், டவல் ஆகியவற்றை தமிழ்நாட்டில் வாங்காமல் கர்நாடகாவில் போய் வாங்கியிருக்கிறார்கள். தமிழர்களின் வியாபார நிறுவனங்களில் கொள்முதல் செய்யாமல் பெங்களூரில் வாங்கிய பாசத்துக்கு காரணம் என்னவோ?

ராசி கிராஃபிக்ஸ், அஸ்வின் பிரின்டிங், ரத்னா ஆப்செட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 57.08 லட்சம் தேர்தல் அறிக்கைகளைத் தயாரித்திருக்கிறார்கள். இதற்காக 8.28 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. ராயப்பேட்டை அண்ணாமலை பேனர் சென்டரில் இருந்து 70.20 லட்சம் துண்டறிக்கைகளுக்காக 55.28 லட்சம் செலவிட்டிருக்கிறார்கள். வேட்பாளர்களின் தொகுப்புக்காக 4.96 லட்சம் செலவானது. தேர்தல் அறிக்கை, துண்டறிக்கைகளுக்காக மட்டும் 8.88 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மற்ற செலவுகளுக்காக 29.77 லட்சம் செலவானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்