"ஜெ. வந்தாலே பிரச்னைதான்!"

காங்கிரஸ் ராமசாமி கொந்தளிப்புபேட்டி

தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட், ஸ்டாலின் வெளியேற்றம், போட்டி சட்டசபை என நடந்த அமளிதுமளிகளை நேரில் பார்த்தவர் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி. சட்டமன்றம் பற்றிய கேள்விகளை அவரிடம் அடுக்கினோம்.

“சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் பல செய்திகள் வருகின்றன. சட்டமன்றத்தில் என்னதான் நடக்கிறது?”

“சட்டசபை நடவடிக்கை தொடர்பாக வரும் செய்திகளில், தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் பிரச்னை செய்கிறார்கள் என்பதைப் போன்ற தோற்றம்தான் பெரும்பாலும் உள்ளது. ஆனால், ஆளும் கட்சியினர் சாதாரணமாகப் பேசும்போதுகூட கலைஞர், ஸ்டாலின் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து மறைமுகமாகத் தாக்கிப் பேசுகிறார்கள். அதனால், தி.மு.க உறுப்பினர்களுக்குக் கோபம் வருகிறது. அப்போது, தி.மு.க உறுப்பினர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டு, அ.தி.மு.க உறுப்பினர்களின் பேச்சை நீக்க மறுக்கிறார்கள்.”

“சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?”

“கவர்னர் உரை மீது நான் பேசியபோது, ‘தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று எப்படி சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன். முறையான பதில் இல்லை. தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்கிறார்கள். ஆனால், தினமும் கொலை, கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ‘டெங்கு இல்லை’ என்று சொல்கிறார் முதல்வர். உடனே, ‘ஆகா ஓகோ’ என ஆளும் கட்சியினர் புகழ்கிறார்கள். சட்டமன்றத்துக்குள் ஜெயலலிதா வரும் வரைக்கும் சபையில் எந்தப் பிரச்னையும் வருவது இல்லை. அவர் சபைக்கு வருகிறார் என்பது தெரிந்துவிட்டால், அ.தி.மு.க உறுப்பினர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்துவிடும். இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், தமிழ்நாட்டுக்கே மிகப் பெரிய இழுக்காகிவிடும்.”

“நீங்கள் அவையில் பேசும்போது குறுக்கீடுகள் இருந்ததா?”

“கவர்னர் உரையில் பேச அனுமதி கேட்டபோது, எனக்கு ஒரு மணி நேரம் கொடுத்தார்கள். அதில் 15 நிமிடங்கள்தான் பேசினேன். மீதி 45 நிமிடங்களும் அவர்களின் குறுக்கீடுகள்தான். எனது நீண்டகால சட்டசபை அனுபவத்தில் இதுபோன்ற ஒரு நிலையை நான் பார்த்ததே இல்லை. ‘கரும்புக்கு கொள்முதல் விலை கொடுத்தது சிறப்பு’ என்று நான் சொன்னபோது, கைதட்டி வரவேற்றார்கள். அடுத்ததாக, ‘நெல்லுக்கும் விலை கொடுக்க வேண்டும்’ என்று சொல்லி முடிக்கும் முன்னரே என்னை உட்காரச் சொல்லிவிட்டார் சபாநாயகர்.”

“தி.மு.க உறுப்பினர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்? இதற்கு முன் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?”

“சஸ்பெண்ட் நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இதற்கு முன் நடந்த தாமரைக்கனி - பண்ருட்டி ராமச்சந்திரன் விவாதத்தை விடவும், வீரபாண்டி ஆறுமுகம் தாக்கப்பட்டதை விடவும், இன்னபிற குறிப்பிட்டு சொல்ல முடியாத சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது ஒன்றும் மோசமான பிரச்னை அல்ல. இருந்தாலும் காவல் துறை மானியக் கோரிக்கையில் முதல்வர் பேசும்போது ‘எதிர்க் கட்சியே இருக்கக்கூடாது’ என்கிற எண்ணத்தோடு அ.தி.மு.க செயல்பட்டிருக்கிறது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.”

“தி.மு.க-வும் அமைதியாக இல்லையே? வெளியேற்றிய பிறகும் போட்டி சட்டமன்றம் நடத்தி இருக்கிறார்களே?”

“போட்டி சட்டமன்றம் நடத்துவது என்பதும் முதல்முறை அல்ல. அ.தி.மு.க ஆட்சியில் உரிமை மறுக்கப்பட்டபோது கடந்த காலங்களில் போட்டி சட்டசபையை நடத்தி இருக்கிறோம். அப்போது நாங்கள் கைது செய்யப்படவோ, எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவோ இல்லை.”

“காங்கிரஸ் ஏன் அவை நடவடிக்கைகளை புறக்கணிக்கிறது? இனி காங்கிரஸின் செயல்பாடு எப்படி இருக்கும்?”

“நிச்சயமாக நாங்கள் அவைக்குச் செல்வோம். ஆனால், தற்போது எங்களுக்கு அங்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? அதனால்தான் நாங்கள் சில நாட்கள் அவைக்குச் செல்லவில்லை. தி.மு.க கூட்டணியில்தான் நாங்கள் ஜெயித்து இருக்கிறோம். இருந்தாலும் சட்டசபையில் எங்களது நிலைப்பாடு வேறு. அவர்கள் நிலைப்பாடு வேறு.”

“சபை எப்படி நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?”

“உறுப்பினர்கள் தங்கள் தொகுதியின் நிலையைச் சொல்லி அதற்கான முன்னேற்றத்தை மனதில் கொண்டு அவையில் பேச வேண்டும். ஆனால், இங்கு அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனுக்கு வட்டி கட்டி வருகிறோம். அதை எல்லாம் திட்டமிட்டு மறைத்துவிட்டு புகழ்பாடிக் கொண்டு இருக்கிறார்கள். மாநில நிர்வாகத்துக்காக பட்ஜெட் தொகை ஒதுக்கப்பட்டு, ஒப்புதல் பெற்றப்பட்டுவிட்டது. ஆனால், முதல்வர் அறிவிக்கும் அறிவிப்புகளின் தொகை மாநில பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கிறது. நிதிநிலையை சரிசெய்ய தாதுமணல், கிரானைட், கிராவல் போன்றவற்றின் விற்பனையை அரசு முறையாகச் செய்தால் போதும். ஆனால், இவை எல்லாம் சட்டமன்றத்துக்குள் மட்டுமே பேசக்கூடிய விஷயங்கள். அதற்கு அங்கு அனுமதியே கிடையாது. சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்தால் மட்டுமே இந்த பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்