“அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வெளியே வருவார்கள்!”

சசிகலா புஷ்பா தடாலடி

சிகலாவைவிட சசிகலா புஷ்பா ஃபேமஸ் ஆகிவிட்டார். ‘ஜெயலலிதா என்னை அறைந்தார்’ என்று தைரியமாகச் சொல்லிவிட்டு, டெல்லியில் உட்கார்ந்து தினந்தோறும் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேட்டி கொடுத்த அவரை, என்ன செய்வது என்று ஜெயலலிதாவுக்கே தெரியவில்லை.

முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த சசிகலா புஷ்பாவை, ஆஜர் ஆகச் சொன்னது மதுரை உயர் நீதிமன்றம். எனவே, சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தார். மதுரை விமானநிலையமே காக்கிப் படைகளால் நிரம்பி இருந்தது. நீதிமன்றத்துக்குப் போகும் முன்பு விளக்குத்தூண் அருகே காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அவர் வருவதற்கு முன்பாக ஐந்து கார்களில் சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் வந்து இறங்கினார்கள். எல்லாமே நெல்லை பதிவு எண் கொண்ட கார்கள். அந்தக் கார்களில் காமராஜர் படத்துக்குக் கீழே சசிகலா புஷ்பா இருப்பது போன்ற படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், சசிகலா புஷ்பாவிடம் பேசினோம். 

“திராவிடக் கட்சி மூலம் அரசியலுக்கு வந்த எம்.பி-யான நீங்கள், காமராஜர் சிலைக்கு மரியாதை செய்வது ஏன்?’’

“நான் எப்பவுமே பெருந்தலைவருக்கு மரியாதை அளித்து வருகிறேன்.”

“உங்களுக்குப் பிரச்னை என்றவுடன் சமுதாயத்தைத்  துணைக்கு  அழைக்கிறீர்களா?”

‘‘நான் அ.தி.மு.க-வில் இருந்தபோதும் எனது சமுதாயத்துக்கு உதவியிருக்கிறேன். சமுதாய விழாக்களில் பங்கேற்றுள்ளேன். எந்த நேரத்திலும் சமுதாயத்தை விட்டு நான் விலகியதில்லை.”

“தனிக் கட்சி தொடங்கப் போவதாகப் பேச்சு அடிபடுகிறதே?”

‘‘இப்போதைக்கு அது முடியாது. தற்போது கட்சி சார்பற்ற எம்.பி-யாக இருக்கிறேன்.”

“தி.மு.க-வும் காங்கிரஸும் பின்னணியில் இருந்து அ.தி.மு.க-வுக்கு எதிராக உங்களை இயக்குவதாகச் சொல்கிறார்களே?”

“அப்படியெல்லாம் இல்லை. ஆனால், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன். எனக்கு பிரச்னை ஏற்பட்டபோது குரல் கொடுத்து என்னை காப்பாற்றியவர்கள் அவர்கள்.”

“உங்கள் மீது ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறதே?”

‘‘இவை எல்லாம் பொய் வழக்குகள். இதைச் சட்ட ரீதியாகச் சந்திப்பேன்.”

‘‘துணை சபாநாயகர் தம்பித்துரை உங்களை ஹவுஸ் அரஸ்ட் செய்ததாகச் சொன்னீர்கள். அவர் மீது ஏன் புகார் கொடுக்கவில்லை?”

“கூடிய விரைவில் புகார் அளிக்கப் போகிறேன்.”

“தென் மாவட்ட எம்.பி-க்களான முத்துக்கருப்பன், செல்வராஜ், லட்சுமணன், விஜயக்குமார் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் என சொன்னீர்கள். அவர்களும் உங்கள் ஆதரவாளர்களா?”

“பலரும் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தக் கட்சியைவிட்டு வந்த பிறகு அவர்கள் குறித்து நான் பேசுவது இல்லை.”

“டெல்லியில் காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மாவின் பண்ணை வீட்டில் நீங்கள் தங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியானதே?’’

“தேவையில்லாத கேள்வி வேண்டாம்.”

“ஜி.எஸ்.டி மசோதாவில் அ.தி.மு.க. எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்யாதபோது, நீங்கள் மட்டும் கனிமொழி சொல்லி வெளியே வந்தாகச் சொல்கிறார்களே?”

“அது உண்மையில்லை. நானாகத்தான் வந்தேன்”

‘‘ஜெயலலிதாவை இவ்வளவு தைரியமாக எதிர்க்கிறீர்களே?”

“தைரியமான மாவட்டத்தில் இருந்தும், தைரியமான சாதியில் இருந்தும் வந்தவள் நான். எதற்கும் அஞ்சமாட்டேன்.”

“உங்களைச் செயல்படவிடாமல் முடக்கினால் என்ன செய்வீர்கள்?”

“ஒரு ஜனநாயக நாட்டில் அப்படியெல்லாம் செய்ய முடியாது.”

“30-க்கும் அதிகமான அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள், பல மாவட்டச் செயலாளர்கள் உங்களுக்கு ஆதரவு தருவதாகச் சொல்லப்படுவது உண்மையா?”

“ஆமாம். எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் அவர்கள் வெளியே வருவார்கள்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்