“VAO-க்கு லஞ்சம் தர எனக்கு பிச்சை போடுங்க!”

கவர் ஸ்டோரி

ந்த செய்தி, அரசாங்க இயந்திரம் எந்த லட்சணத்தில் இயங்குகிறது என்பதற்கான சாட்சி. லஞ்சம் கொடுப்பதற்காக பிச்சை எடுத்துள்ளான் அந்தச் சிறுவன். இவன் எடுத்தது பிச்சை என்றால் கேட்பதற்குப் பேர் என்ன?... எச்சை!

விழுப்புரம் மாவட்டத்தில் ம.குன்னத்தூர் என்ற கிராமத்தின் வீதிகளில் அஜித்குமார் என்ற சிறுவன் ஒருவன் கடந்த வாரம், கையில் தட்டு ஏந்திப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவனைக் கண்டு பதறிய பொதுமக்கள், கண்கலங்கியவாறு பிச்சை போட்டனர். மாவட்ட நிர்வாகமோ, இந்தச் சம்பவத்தால் அதிர்ந்துபோனது. இந்த சம்பவத்துக்குப் பின்னால், ஒரு குடும்பத்தின் சோகமும், இந்த சமூகத்தின் அவலமும், அரசின் சீர்கேடுகளும் உள்ளன.

உளுந்தூர்பேட்டைக்கு அருகே உள்ளது ம.குன்னூர் என்ற கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலியான கொளஞ்சி என்பவர், சிறுநீரகக் கோளாறு காரணமாக, 11.01.2015 அன்று மரணம் அடைந்தார். கொளஞ்சியின் மருத்துவச் செலவுக்காக அவரது மனைவி விஜயா கடன்கள் வாங்கியிருந்தார். கொளஞ்சி இறந்த பிறகு, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், குடியிருந்த வீட்டை விற்று கடன்களை அடைத்து, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். பண நெருக்கடியால் சிரமப்பட்டு வந்த விஜயா, தமிழக அரசின் சமூகநலப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் இறந்தவர்களின் ஈமச் சடங்குக்கு வழங்கப்படும் ரூ.12,500 தொகைக்கு விண்ணப்பம் செய்தார். அதற்காக, வி.ஏ.ஓ அலுவலகத்தை பலமுறை அணுகியுள்ளார். ஆனால், அந்தத் தொகை கிடைத்தபாடில்லை. இந்த நிலையில், வறுமை காரணமாகக் குடும்பத்தோடு மும்பைக்கு கூலி வேலைக்குச் சென்றுவிட்டார் விஜயா. அதன் பிறகும், பலமுறை வி.ஏ.ஓ அலுவலகத்தை அணுகியுள்ளார். ஆனால், எந்தப் பயனும் இல்லை.

திருவிழாவுக்காக, கடந்த வாரம் மும்பையில் இருந்து வந்திருந்த விஜயா, வி.ஏ.ஓ-விடம் போய் ஈமச்சடங்குத் தொகையைக் கேட்டுள்ளார். ‘இரண்டொரு நாட்களில் தொகை வந்துவிடும்’ என்று தாசில்தார் அலுவலகத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர், மும்பைக்கு உடனடியாகச் செல்லவில்லை என்றால் வேலை போய்விடும் என்ற சூழலில், அந்தப் பணத்தை வாங்கிக் கடனை அடைத்து விடுமாறு மகன் அஜித்குமாரிடம் சொல்லி, அவனை உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டுவிட்டு மும்பைக்குச் சென்றுவிட்டார்.

‘செக் வந்துவிட்டது. வி.ஏ.ஓ-விடம் கையெழுத்து வாங்கிவிட்டால் அதைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று அஜித்குமாரிடம் சொல்லியிருக்கிறார்கள். எனவே, வி.ஏ.ஓ-விடம் கையெழுத்து வாங்க அஜித்குமார் சென்றுள்ளார். அங்கு நடந்த சம்பவத்தைத் தொடர்ந்துதான், பிச்சை எடுப்பதற்கு முடிவுசெய்தார் அஜித்குமார்.

என்ன நடந்தது என்று அஜித்குமாரிடம் கேட்டோம். “வி.ஏ.ஓ. சுப்பிரமணியனிடம் கையெழுத்து வாங்குவதற்காக இரண்டு முறை சென்றேன். அவர், ‘3 ஆயிரம் ரூபாய் கொடு. அப்போதுதான், கையெழுத்துப் போடுவேன்’ என்று சொன்னார். ‘என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. பணம் இல்லாததால்தான், என்னால் படிக்கக்கூட முடியவில்லை. அம்மாவுடன் கூலி வேலைக்குச் செல்கிறேன்’ என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் பணத்தில் குறியாக இருந்தார். எனவே, உளுந்தூர்பேட்டை தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்று விஷயத்தைச் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘சரி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று சொன்னார்கள். அப்போது அங்கு வந்த வி.ஏ.ஓ சுப்பிரமணியன், ‘3 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் பணம் கிடைக்கும்’ என்று கறாராகச் சொன்னார். விண்ணப்பம் செய்தபோதே, வி.ஏ.ஓ-வுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தோம். எனவே, ‘ஏற்கனவே 3000 ரூபாய் கொடுத்தோம். இப்போதும் 3000 ரூபாய் கேட்கிறீர்கள். வரும் பணத்தில் பாதியை நீங்களே கேட்டால் நாங்கள் என்ன செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு, ‘எங்கள் மேலதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டும். அதுக்கப்புறம் உங்கள் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டு வி.ஏ.ஓ. கிளம்பிவிட்டார்.

அதற்கு மேல் என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை. எங்கள் ஊர் கடைகளிலும், எங்கள் ஊருக்கு வரும் பஸ்களிலும் பிச்சை எடுப்பது என்று முடிவு செய்தேன். கடந்த 26-ம் தேதி பிச்சை எடுத்ததில் 1,800 ரூபாய் கிடைத்தது. மறுநாள் மீதித் தொகை கிடைத்தது” என்றான் அந்த சிறுவன்.

‘வி.ஏ.ஓ-வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை போடுங்கள்’ என்ற வாசகம் பொறித்த பேனரைப் பிடித்துக்கொண்டு இந்தச் சிறுவன் பிச்சை எடுக்கும் செய்தி, படத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால், மாவட்ட நிர்வாகம் அதிர்ந்துபோனது.

அதிகாரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

“நான் பிச்சை எடுத்த முதல் நாள் அன்று இரவு, ‘பணத்தை வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று யார் யாரோ எங்களுக்குப் போன் செய்தார்கள். நான் வாங்க மறுத்துவிட்டேன். மறுநாள் காலையில் கோட்டாட்சியர் செந்தாமரையும், போலீஸாரும் வந்தார்கள். ‘நீ செய்திருப்பது அரசுக்கு எதிரான செயல். எங்களிடம் புகார் அளிக்காமல், நீ எப்படி இந்த மாதிரியான செயல்களில் இறங்கலாம்?’ என்று கேட்டார்கள். பிறகு, என்னிடம் புகாரை வாங்கிக்கொண்டு சென்றார்கள்” என்றான் அஜித்குமார்.

இதுதொடர்பாக, மும்பையில் உள்ள விஜயாவிடம் பேசினோம். “என் கணவர் இறந்த உடன் அனைத்துச் சான்றிதழ்களுடன் ஈமச்சடங்கு தொகைக்கு விண்ணப்பித்தேன். அப்போது, வி.ஏ.ஓ. சுப்பிரமணியன் 3 ஆயிரம் ரூபாய் கேட்டார். மூக்குத்தியை விற்று 3 ஆயிரம் கொடுத்தேன். மறுபடியும் 3 ஆயிரம் ரூபாய் கேட்டால் எப்படி? எங்களை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டார்கள்” என்றார்.

இதுகுறித்து வி.ஏ.ஓ சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “நான் பணம் எதுவும் கேட்கவில்லை. அந்தச் சிறுவன் ஏதோ முன்விரோதத்தில் அப்படி சொல்கிறான்” என்றவரிடம், “உங்களுக்கும் அவனுக்கும் என்ன முன் விரோதம்?” என்று திருப்பிக் கேட்டதற்கு, “இல்லை... யாரோ தூண்டுதலின் பேரில் அப்படிச் செய்திருக்கிறான்” என்று முடித்துக்கொண்டார்.

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, அரசு உதவிகளுக்கு வி.ஏ.ஓ-க்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்ற புகார் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி செஞ்சியை அடுத்த மொடையூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்ற மாற்றுத் திறனாளி, கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு, தான் தேர்வாகியும் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்று அதிகாரிகள் சொன்னதால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலிலேயே பிச்சை எடுத்தார்.

அதேபோல, கடந்த 13-ம் தேதி 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு வரவேண்டிய உதவித் தொகைக்கு, நபர் ஒருவருக்கு 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் கேட்பதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருந்தனர்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் லட்சுமியிடம் கேட்டபோது, “அந்த வி.ஏ.ஓ மீது எந்தத் தவறும் இல்லை. அமைச்சர் தலைமையில் நடந்த நலத்திட்ட விழாவில், விஜயா என்பவருக்கு செக் கொடுப்பதற்குத் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்தது. தன்னிடம் செக்கை கொடுக்குமாறு அந்தப் பையன் கேட்டிருக்கிறான். விஜயா பெயரில் இருக்கும் செக்கை 15 வயது சிறுவனிடம் எப்படி கொடுக்க முடியும்? எனவேதான், அவனுடைய அம்மாவை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்கள். ஒருவேளை, வி.ஏ.ஓ லஞ்சம் கேட்டிருந்தாலும் அதுபற்றி மேலதிகாரிகளிடைமோ, என்னிடமோ முறையிட்டிருக்கலாமே. வேறு ஏதோ முன்விரோதத்தால் அந்தச் சிறுவனை யாரோ தூண்டிவிட்டிருக்கிறார்கள். இதுகுறித்து விசாரிக்கிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வி.ஏ.ஓ மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

லஞ்சம் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்படும் அதிகாரி மீது நடவடிக்கை இல்லை. ஆனால், ஒரு சிறுவன் மீது எத்தனை விதமான புகார்களை இந்த அதிகாரிகள் சொல்கிறார்கள். இதுதான் ஒரு அரசாங்க இயந்திரம் செயல்படும் லட்சணம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்