‘கேக்’க மாட்டீங்களா? - ஊழல்... மெத்தனம்...

போராட்டம்

ழலுக்கு எதிரான போராட்ட வடிவங்கள் மாறிக்கொண்டே உள்ளன. திருச்சி, பெரகம்பியைச் சேர்ந்த சீனிவாசனின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த பெரகம்பி ஊராட்சியில் கருவேலம் மரங்கள் ஏலம் விட்டத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.  இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த ஐந்து வருடங்களாகப் பலகட்ட போராட்டங்களை நடத்திவருகிறார் சமூக ஆர்வலர் பெரகம்பி சீனிவாசன். விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவையும் தமிழ்நாடு லஞ்சம் ஊழல் ஒழிப்புத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

நீதிபதி செல்வம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டு  நிறைவுபெறுவதை ஒட்டி, கடந்த 28-ம் தேதி திருமண அழைப்பிதழ் பாணியில் அழைப்பிதழ் அச்சடித்து,  பிரதமர், ஜனாதிபதி, சென்னை, மதுரை, திருச்சியில் உள்ள நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு கொடுத்து, ஊர் மக்கள் முன்னிலையில் குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடினார் பெரகம்பி சீனிவாசன்.

அவரிடம் பேசினோம். “எங்கள் கிராமத்தில் உள்ள சுமார் 120 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரியில்  வனத்துறையால் கடந்த 1984-ம் ஆண்டு நாட்டு கருவேல மரங்கள் நட்டனர். பலகோடி மதிப்புள்ள இந்த மரங்களை கடந்த 2011-ம் ஆண்டு ஏலம் என்ற பெயரில் கள்ளத்தனமாக வெட்டினார்கள். இதுதொடர்பாகத்  தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் தகவல்கள் மூலம் கேட்டேன். 3,000 பக்க ஆவணங்கள் அனுப்ப 16 ஆயிரம் ரூபாய் செலுத்தியும் 1,700 பக்கங்கள் வெற்றுத்தாள்களாக வழங்கினர்.

இந்த ஊழல் பின்னணியில் ஊராட்சி மன்றத் தலைவர் லோகேஸ்வரி, அவரது கணவர் அஞ்சாநெஞ்சன் உள்ளிட்டோரும், பி.டி.ஓ. வனத்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் எல்லாம்  இருப்பது தெரியவந்தது. இதை கலெக்டராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரனிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அந்தக் கோபத்தைத்தான் இப்படி வெளிப்படுத்தினேன்’’ என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்
படம்: தே.தீட்ஷித்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்