கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

 விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று அவருக்கு வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் சால்வை அணிவித்ததில் உள்நோக்கம் ஏதாவது இருக்குமா?


! உள்ளாட்சித் தேர்தலிலும் அவருடன் கூட்டணி வைப்போம் என்பதுதான் உள்நோக்கமாக இருக்க முடியும். ‘இன்னுமா நம்மை இந்த உலகம் நம்புது?’ என்று விஜயகாந்த் நினைத்திருக்கலாம்.

மு.மதிவாணன், அரூர்.

 ‘தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்பே இல்லை’ என்று தமிழக விவசாயிகளிடம் கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளாரே?


! காவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்துள்ள அளவு தண்ணீரைத் தருவது மட்டுமல்ல, தண்ணீரே மொத்தமாகத் தராமல் இருப்பதற்கான காரியங்களையும் கர்நாடக அரசு பார்த்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ என்ற இடத்தில் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் புதிதாக அணை ஒன்றைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு இப்போது சிறிதளவு கிடைக்கும் தண்ணீர் கூடக் கிடைக்காது. இதனை தமிழக அரசும் தமிழகக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்த பிறகும் கர்நாடக அரசு பின்வாங்கவில்லை. இந்த அணை பற்றி விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் முதல்வர் சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் கண்டித்துத் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. மத்தியில் கட்சி மாறுவதே இல்லை.

‘ஒரு டி.எம்.சி.கூட தரமாட்டோம்’ என்று முதல்வர் சித்தராமையா சொல்லி இருக்கிறார். தண்ணீர் திறந்துவிட சில காரியங்களை தமிழக முதல்வர் செய்தாக வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழகத்தில் கூட்ட வேண்டும். இவர்கள் அனைவரும் திரண்டு பிரதமரைச் சந்திக்க வேண்டும். பிரதமர் மூலமாக அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

  சட்டசபை நடக்கும்போது அமைச்சரவை மாற்றம் செய்யக்கூடாது என்று ஏதாவது விதி உள்ளதா?


  சட்டசபை நடக்கும்போது அமைச்சர்களை புதிதாகச் சேர்க்க மாட்டார்கள். பதவியைப் பறிக்க மாட்டார்கள். துறை மாற்றமும் இருக்காது. சபை நடந்து கொண்டு இருக்கும்போது அமைச்சர்கள் வெளி விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார்கள். சபையைவிட்டு வெளியில் அரசு சார்பான அறிவிப்புகள் இருக்காது. இவை அனைத்தும் மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதை மீறி, இப்போது சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக ஆக்கப்பட்டிருக்கிறார். கே.டி.ராஜேந்திரபாலாஜி, பெஞ்சமின் ஆகியோரது துறைகள் மாற்றப்பட்டுள்ளன. மரபுகளை மாற்றுவதே மரபாகிவிட்டது.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

 தமிழகத்தில் மட்டும் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் எந்த பொது விஷயத்திலும் ஒன்று சேரவே சேராதா?


! சில பொது விஷயங்களில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டைத்தான் எடுக்கிறார்கள். அதற்காக ஒரே இடத்தில் ஒன்று கூடி சேர்ந்து முயற்சிகள் செய்வது இல்லை. அதுதான் தமிழகத்தின் துரதிஷ்டம்!

என்.காளிதாஸ், சிதம்பரம்.

இணையத்தளக் குற்றங்களின் எண்ணிக்கை 300 மடங்கு அதிகம் ஆகிவிட்டதாமே?


! இணையத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதைவிட அதிகம் ஆகிவிட்டது அல்லவா? அதனால்தான் குற்றங்களும் அதிகம் ஆகின்றன.

வசந்தகுமார், காரைக்குடி.

  தமிழகத்தில் சமூக நிலைமை மாறி இருக்கிறதா?


! அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தி சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் சொல்லி உள்ள கருத்துக்கள் தமிழகத்துக்கு பெருமை தருவதாக இல்லை. சிலர் நடத்திய ஆய்வு முடிவுகளை அவர் சொல்லி இருக்கிறார்.

‘தமிழகத்தில் 15 சதவிகித திருமணங்கள் குழந்தைத் திருமணங்​களாக உள்ளன. இதில் தேனி, தர்மபுரி மாவட்டங்கள் முதலி​டத்தில் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 115 குழந்தைத் திருமணங்கள் தன்னார்வ அமைப்புகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களில் சாதி ஆணவக் கொலைகள் அதிகமாக நடக்கின்றன. குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது’ என்பதை அவர் புள்ளிவிவரங்களுடன் சொல்லி இருக்கிறார். சமூக நிலைமை மாறிவிட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்?

கு.நீலமேகம், விழுப்புரம்.

 தமிழக சட்டசபையில் என்னதான் நடக்கிறது?


! பல சமயங்களில்  சட்டபூர்வமானதும், மாண்பு காக்கப்பட வேண்டிய விஷயங்​களும் நடப்பதில்லை.

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

 ‘சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி​யாக ஒளிபரப்பினால்தான் மக்களுக்கு உண்மை நிலை தெரியவரும்’ என்கிறாரே மு.க.​ஸ்டாலின்?


! ஆளும் கட்சியாக இருக்கும் போதும் இதைச் சொல்வாரா ஸ்டாலின்?

உமரி. பொ.கணேசன், மும்பை.

 ஒரு மனிதனை எடைபோடுவது எப்படி?


! அவரவர் செயலால் எடை போட வேண்டும் என்று வள்ளுவர் எப்போதோ சொல்லி​விட்டாரே!

அரசி சண்முகசுந்தரம், புதுவண்ணை.

 தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க. மோதல் எப்போது முடிவுக்கு வரும்?


! இது சாத்தியமில்லை. ஆனா​லும் ஆசையைச் சொல்லி விடுகிறேன். இரண்டு கட்சிகளும் திருந்தும்போது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்