மிஸ்டர் கழுகு: ஞானதேசிகன் சஸ்பெண்ட்... பின்னால் இருக்கும் சஸ்பென்ஸ்!

‘‘வைகுண்டராஜனை வளைக்க ஆளும் கட்சி பகீரதப் பிரயத்தனங்கள் செய்து வருகிறது” என்ற செய்தியோடு வந்த கழுகார், “புகார் என்று வந்தால், அமைச்சர்களுக்கு மட்டும் அல்ல... அதிகாரிகளுக்கும் அ.தி.மு.க ஆட்சியில் ஆபத்துதானே?’’ என்று கேள்வியைப் போட்டார்.

‘‘உண்மைதானே?’’

‘‘சசிகலா புஷ்பா மீது கைவைக்க முடியாமல் ஆளும் கட்சியே திணறி வருகிறதாம். இதற்குக் காரணம் வைகுண்டராஜனின் பின்புலம்தானாம். அதனால், அவருக்கு செக் வைக்க, தாது மணல் ஏற்றிவந்த அவருடைய லாரிகளை மடக்கினார்கள். அதற்கடுத்து, அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டச் சொல்லி கனிமவளத் துறைக்கும், டிட்கோவுக்கும் வாய்மொழி உத்தரவு பறந்தது. இந்த நேரத்தில்​தான், வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன், ‘தாது மணல் வியாபாரத்துக்குத் தடை போடப்பட்டிருந்த காலத்தில், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் 50 லட்சம் டன் அளவுக்கு தாது மணலை அனுமதி இல்லாமல் கடத்தியுள்ளார்கள். 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பிசினஸ் நடந்துள்ளது’ என்ற பகீர் குற்றச்சாட்டை வைத்தார்.’’

‘‘ஆமாம்.’’

‘‘வைகுண்டராஜனுக்கு எதிராக எந்தவொரு ஆவணங்களையும் கனிமவளத் துறையால் தயார்செய்ய முடியவில்லையாம். அதேநேரத்தில், அந்த நிறுவனத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைதான் என ரகசிய போலீஸார் அறிக்கை கொடுத்தார்களாம். அதில், வைகுண்டராஜன் நிறுவனங்களுக்கு ஆதரவாகக் கனிமவளத் துறை, சுற்றுச்சூழல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் செயல்பட்டது குறித்து முதல்வர் கவனத்துக்குச் சொல்லப்பட்டதாம். தாதுமணல் கொள்ளை நடக்கவே இல்லை என்று வைகுண்டராஜன் தரப்பு சொல்லி வந்த நிலையில், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை, கனிமவளத் துறை அதிகாரிகள் ஏழு பேர் அரசுக்கு அறிக்கை அளித்திருந்தார்கள். அதில், ‘வைகுண்டராஜன் முறைகேடாக மணல் அள்ளவில்லை. அவர், ஒப்பந்தம் செய்த இடத்தில் மட்டுமே மணல் அள்ளினார். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில்தான், வி.வி மினரல்ஸ் நிறுவனம் மணல் அள்ளியுள்ளது’ என அரசுக்கே செக் வைக்கும் வகையில்தான் அந்த அறிக்கை இருந்தது. ஏற்கெனவே அனுமதி பெற்றுவைத்திருந்த தாதுமணலை ஏற்றுமதிசெய்ய வேண்டி, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர் வைகுண்டராஜன் தரப்பினர். இந்த வழக்கில் ஏழு அதிகாரிகள் அளித்த ஆவணங்கள் வைகுண்டராஜன் தரப்புக்குச் சாதமாக இருந்துள்ளது. இந்த விவகாரங்களை இப்போதுதான் முதல்வர் கவனத்துக்குக் கொண்டுபோய் இருக்கிறார்களாம்.’’

‘‘ஓஹோ!’’

‘‘வைகுண்டராஜனுக்கு ஆதரவான அறிக்கைதான் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பப்பட்டது. காரணம், தாது மணல் விவகாரத்தில் அனுமதி அளிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. எனவே, மத்திய அரசின் ஒத்துழைப்பே போதும் என்கிறார்கள் வைகுண்டராஜன் தரப்பினர். இந்த அறிக்கையை தயார்செய்த அந்த ஏழு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இப்படி ஓர் அறிக்கை தயார்செய்ய சொன்னதே, கனிமவளத் துறையின் ஆணையாளர் அதுல் ஆனந்த் என்ற விவரம் கிடைத்தபிறகுதான் அவரை சஸ்பெண்ட் செய்ய அரசு முடிவு எடுத்தது. இதன் தொடர்ச்சியாக வைகுண்டராஜன் கைதுசெய்யப்படலாம் என்று தகவலும் உள்ளது. வைகுண்டராஜனின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே அவருக்கு நெருக்கமானவர்கள் இப்போது சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.’’

‘‘முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் பிரச்னைதான் என்ன?’’

‘‘அவருடைய சஸ்பெண்ட் பின்னணி குறித்துப் பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்த ஞானதேசிகனை, கடந்த ஜூன் மாதம் அந்தப் பதவியில் இருந்து மாற்றியதற்கு காரணமே கனிம விவகாரம்தானாம். மின்சார வாரியத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தபோது மின்வெட்டு நிலையை மாற்றினார். இதனால், ஜெ-வின் குட்புக்கில் இடம்பிடித்தார். சில மாதங்களிலேயே தலைமைச் செயலாளர் என்ற உச்சபட்ட அதிகாரத்துக்குக் கொண்டுவரப்பட்டார். அதற்குப் பின்னணியாக இருந்தவர் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன்தான். ‘தள்ளாட்டத்தில் இருந்த மின்சார வாரியத்தைத் தூக்கிப் பிடிக்கவேண்டியவர், தனியார் துறையிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறார். தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததோடு, அதற்குக் கூடுதல் விலையும் கொடுக்கிறார்’ எனக் குற்றச்சாட்டு எழுந்தது.’’

‘‘இப்போது அதற்கு என்ன?’’

‘‘மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கொடுத்த அறிக்கையில், தமிழக மின்வாரியம் இறக்குமதி செய்த நிலக்கரி விவகாரங்களில் நடந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியிருக்​கிறதாம். சில தினங்களுக்கு முன் கருணாநிதி, ‘மின்வாரியத்தைத் தொடர்ந்து நஷ்டத்தில் மூழ்கடிக்கும் காரியங்களே முனைப்போடு நடைபெற்று வருகின்றன’ என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார். இதேபோல் ராமதாஸ் தரப்பில் இருந்தும் காட்டமான அறிக்கை வெளியானது. அதன்பிறகுதான் ஞானதேசிகன் மீது கண் பதித்தார்கள். அதன் தொடர்ச்சியாகத் தற்போது விசுவரூபம் எடுத்துவரும் வைகுண்டராஜன் விவகாரத்திலும் இவர் பெயர் அடிபட ஆரம்பித்தது. இதற்கு மேல் இவரை வைத்திருக்க வேண்டாம் என்றுதான் சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்துள்ளது.’’

‘‘வைகுண்டராஜனுக்கு இவர் என்ன உதவி செய்தார்?’’

‘‘அதுல் ஆனந்தும், ஞானதேசிகனும் வைகுண்டராஜன் விவகாரத்தில் கூட்டு சேர்ந்து அரசை ஏமாற்றியுள்ளார்கள் என்ற புகார் முதல்வர் டேபிளுக்கு சென்றது. அதுல் ஆனந்த், எல்காட் நிறுவனத்தில் நிர்வாக இயக்கு​நராக இருந்தாலும், கடந்த எட்டு ஆண்டு​களாகக் கனிமவளத் துறையைக் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்துள்ளார். அந்தத் துறைக்குக் கீழ்தான் தாதுமணல் வருவதால், வைகுண்டராஜன் தரப்புக்கு இவர் நன்றாக அறிமுகம் என்ற பேச்சும் உள்ளது. வைகுண்ட​ராஜன் தரப்பின் ஆதரவில்தான் கூடுதல் பொறுப்பை எட்டு ஆண்டுகளாக இவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாராம்.’’

‘‘ம்.’’

‘‘கடந்த 2013-ம் ஆண்டு வருவாய்த் துறை ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சுகன்தீப் சிங் பேடி தலைமையில், ஒரு குழுவினர் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தாதுமணல் முறைகேடு குறித்து, ஆய்வுசெய்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்கள். அந்த அறிக்கையில், பல்வேறு முறைகேடுகளில் வி.வி மினரல்ஸ் நிறுவனம் ஈடுபட்டிருந்ததாகச் சுட்டிகாட்டப்பட்டிருந்தது. குறிப்பாக, அனுமதி இல்லாத இடங்களிலும் மணல் அள்ளியுள்ளார்கள். தோரியம் பிரித்தெடுக்கத் தடை இருக்கும்போது, அதையும் எடுத்துள்ளார்கள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அந்த அறிக்கையில் இருந்தன. ஆனால், இதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த அறிக்கை பற்றித் தகவலோ, மேல்நடவடிக்கை எடுக்கவோ ஞானதேசிகன் தவிர்த்துவிட்டார். மேலும் வைகுண்டராஜன் தரப்புக்கு எதிரான ஃபைல்களிலும் இவர் கையெழுத்திடாமல் புறக்கணித்துவிட்டார். அதனால்தான் வைகுண்ட​ராஜன் மீது கைவைக்க முடியாமல் தமிழக அரசின் கைகள் கட்டப்பட்டிருக்கிறதாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்