அரசியலுக்கு செங்கோட்டையன் முழுக்கு?

கொங்கு மண்டல அ.தி.மு.க-வில் பரபர...பூசல்

.தி.மு.க-வின் கொங்கு மண்டலத் தளபதி, அ.தி.மு.க ஆட்சியின் அசைக்க முடியாத அதிகாரப்புள்ளி என ஏகப்பட்ட அடையாளங்களோடு வலம் வந்த செங்கோட்டையன், அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு எடுத்துவிட்டார்.

 இதுகுறித்து அ.தி.மு.க புள்ளிகள் சிலரிடம் பேசினோம். “எம்.ஜி.ஆர் காலம் முதலே கொங்கு மண்டலத்தின் முடிசூடா மன்னனாய் இருந்தவர், முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி. எம்.ஜி.ஆரால் வளர்த்துவிடப்பட்டவரான செங்கோட்டையன், ஜா. - ஜெ. அணிகளாக அ.தி.மு.க பிரிந்தபோது, ஜெ. அணியில் இருந்தார். ஒரு கட்டத்தில், முத்துச்சாமி மீதான ஜெயலலிதா அதிருப்தியில் இருக்க  செங் கோட்டையனை அமைச்சர் ஆக்கினார். ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரப் பயணத்தை வடிவமைக்க வேண்டும் என்றால், ‘கூப்பிடு செங்கோட்டையனை’ என்ற நிலைக்குச் சென்றார். இப்படி அசுர வளர்ச்சி கண்ட செங்கோட்டையன் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் பாய்ந்ததையடுத்து, ஓரங்கட்டப்பட்டார்.

 2011 சட்டமன்றத் தேர்தலில், பணத்தைப் பெற்றுக்கொண்டு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுத்தார் என்றும், முதல்வர் பதவிக்கு அச்சாரம் போடுகிறார் என்றும் சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வரிசைகட்டின. அவை தொடர்பாக, அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தினார் ஜெயலலிதா. அப்போது, சசிகலா பற்றித் தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் ஜெயலலிதாவிடம் போட்டுடைத்தார், செங்கோட்டையன். அமைச்சரவையில் மற்றவர்களைவிட செங்கோட்டையனை அதிகம் நம்பும் ஜெயலலிதா, கார்டனைவிட்டு சசிகலாவை வெளியில் அனுப்பினார். அதுமுதலே, சசிகலாவுக்கும் செங்கோட்டையனுக்கும் முட்டல் தொடங்கியது.

இந்த நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அங்கு நகர்மன்றத் தலைவராக இருந்த முத்துச்செல்வியை வேட்பாளர் ஆக்கினார் ஜெயலலிதா. அங்கு சென்ற செங்கோட்டையன் ஒரு பெண்ணுடன் நெருக்கமானார். இந்த விவரம் ஜெயலலிதாவின் கவனத்துக்குச் சென்றது. அடுத்து, செங்கோட்டையனின் உதவியாளருடைய குடும்பக் குழப்பத்துக்கு செங்கோட்டையனே காரணமாக இருக்கிறார் என்ற புகார் பூதாகரமாகக் கிளம்பியது. ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த செங்கோட்டையனின் இடத்தைப் பிடிக்கத் துடித்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். செங்கோட்டையனைக்கு செக் வைத்தார்கள்.

அந்தச் சூழலில், கார்டனுக்கு சசிகலா திரும்பிவந்துவிட்டார். அதையடுத்து, விசாரணையே இல்லாமல் செங்கோட்டையனிடம் இருந்த அத்தனைப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. செல்வாக்கு இழந்த செங்கோட்டையன், அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே தனது தொகுதிக்குத் தேவையானதைக்கூட கேட்டுப்பெற முடியாமல் தவித்தார். எனவே, 2016 தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்திருந்தார். இதைத் தெரிந்துகொண்ட தி.மு.க தலைமை, அவரது உறவினர்கள் மூலம் செங்கோட்டையனுக்கு வலை விரித்தது. ஆனால் அவர், விரும்பவில்லை.

 இந்த நிலையில்தான், ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மீது தனிப்பட்ட விசாரணை நடந்தது. அத்துடன், இந்தத் தேர்தலில் போட்டியிட பணம் கட்டுங்கள் என ஜெயலலிதாவிடம் இருந்தே க்ரீன் சிக்னல் வந்தது. உற்சாகமாகத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனாலும், அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. அரசியலில் இருந்தால் தொகுதியின் தேவைகளையாவது பூர்த்தி செய்யவேண்டும். ஆனால், இவர் கேட்டு எந்த அமைச்சரும் கண்டுகொள்ளப்போவதில்லை. எனவே, அரசியலே வேண்டாம் என்று செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளார்” என்றனர்.

 இதுகுறித்து செங்கோட்டையனின் ஆதரவாளர்களிடம் பேசினோம். “அண்ணனின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் இதுபோன்ற வதந்திகளைக் கிளப்புகிறார்கள். எட்டு முறை எம்.எல்.ஏ., ஐந்து முறை அமைச்சர் என இருந்துள்ளார். இப்போதும்கூட, தொகுதிப் பிரச்னை என்று வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், கொங்கு மண்டலத்தில் அதிகத் தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வின் அரசியல் அதிரடிகளைச் சமாளிக்க செங்கோட்டையன் போன்றவர்கள் தேவை” என்றார்கள்.

- வீ.மாணிக்கவாசகம், படம்: ரமேஷ் கந்தசாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்