‘அம்மா அறிவிப்பு’கள்... அடடா ஐடியாக்கள்!

நையாண்டிஓவியம்: கார்த்திகேயன் மேடி

‘அம்மா உணவகம்’,

‘அம்மா வாரச்சந்தை’ போன்றவற்றைத் தொடர்ந்து ‘அம்மா ஜிம்’, ‘அம்மா பூங்கா’ போன்ற திட்டங்களை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. ஹை! இது நல்லாருக்கே! இன்னும் வேற என்னவெல்லாம் இந்த மாதிரி ஆரம்பிக்கலாம் என கற்பனை காண்டாமிருகத்தை ஓடவிட்டதன் விளைவு...

அம்மா கான சபா:

இந்திய அரசியலின் ஹாட் டாப்பிக்கே, ராஜ்யசபாவில் நவநீதகிருஷ்ணன் நடத்திய பாட்டுக்குப் பாட்டு கச்சேரிதான். அவர் பாடியதைப் பொறுக்காமல் காஷ்மீர் மக்களே போராட்டத்தைக் கைவிட்டதை வெற்றிக்குறியாக எடுத்துக் கொண்டு, அம்மா கான சபாவை ஆரம்பித்து அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கும் இசைப் பயிற்சி வழங்கலாம். ஏற்கெனவே, சட்டசபையில் அம்மாவுக்கு, குளிரக் குளிரப் பாடல்கள் பாடிப் பரிசு பெற்ற அனுபவம் இருப்பதால், ர.ர-க்கள் சட்டென பிக்கப் செய்துவிடுவார்கள். அப்துல் ஹமீதை ஆங்கரிங்குக்கு அழைத்துவந்தால் கச்சேரி களைகட்டிவிடும்.

அம்மா அவதூறு வழக்கு மையம்:

போகிற போக்கைப் பார்த்தால், உலக வங்கிக்கடனை தலைக்குக் கொஞ்சமாய் பகிர்ந்துகொண்டதைப் போல, அவதூறு வழக்குகளையும் ஆளுக்கு ஒன்றாய் பிரித்துக்கொள்ள வேண்டும் போல. இப்படி சகட்டுமேனிக்குக் குவியும் வழக்குகளை முறைப்படுத்த ‘அம்மா அவதூறு வழக்கு மையம்’ ஒன்றைத் தொடங்கலாம். முதற்கட்டமாக அதிகாரமட்டத்து ஆட்களுக்கு எதற்கெல்லாம் அவதூறு வழக்குப் போடலாம், எத்தனைப் போடலாம் எனப் பயிற்சி வழங்கலாம். நாளடைவில் மக்கள் அனைவரும் மாறி மாறி அவதூறு வழக்குப் போட்டு விளையாடலாம்.

அம்மா பதவி வேலைவாய்ப்பு முகாம்:

எட்டுக்கோடி தமிழ் மக்களும் ஒரு முறையாவது மந்திரியாகிவிட வேண்டும் என்ற மாநில அரசின் உயர்ந்த கொள்கையை நிலைநாட்டும் பொருட்டு, பதவி வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தலாம். அதில் கட்சிப் பதவிகள், மந்திரி, எம்.எல்.ஏ, எம்.பி உள்ளிட்ட பதவிகளுக்கான தகுதிச்சுற்றுகளை நடத்தலாம். செலெக்ட் ஆனவர்களுக்கு வரிசைப்படி பதவிகள் வழங்கலாம். பதவிக்காலம் - குறைந்தபட்சம் 30 நிமிடங்கள், அதிகபட்சமும்- 30 நிமிடங்களே.

அம்மா லைப்ரரி:

அண்ணா லைப்ரரியின் நிலைமை நாளுக்குநாள் ஐ.சி.யூ மோடுக்குச் சென்றுகொண்டிருப்பதால் அம்மா லைப்ரரி என்ற புத்தகக் கடலைத் தொடங்கலாம். அதில், ‘ஹிலாரியை அதிபர் ஆக்கிய கில்லாடி’, ‘ஏலியன்ஸ் போற்றும் அம்மாவின் ஏழாண்டு கால ஆட்சி’, ‘சார்லஸ் டார்வினின் அம்மா பரிணாமம்’, ‘அம்மா லா ஆஃப் தெர்மோடைன மிக்ஸ்’ போன்ற புத்தகங்கள் வைக்கலாம். முழுக்க முழுக்கவே இதய தெய்வம் புரட்சித்தலைவி கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அம்மா அவர்களின் புகழ் பாடும் புத்தகங்களைக் குவிக்கலாம்.

அம்மா சென்ஸார் போர்டு:

‘விஸ்வரூபம்’ தொடங்கி ‘தெறி’ வரை கோலிவுட் படங்கள் அநியாயத்துக்கு சிக்கலில் தவிப்பதைத் தடுக்க கருணையுள்ளம் கொண்டு, ‘அம்மா சென்ஸார் போர்டு’ அமைக்கலாம். அதில் சி.ஆர்.சரஸ்வதி, குண்டு கல்யாணம், செந்தில், விந்தியா போன்றவர்கள் உறுப்பினர்களாகவும், தானைத்தலைவி நமீதா தலைவராகவும் இருந்து படங்களைத் தணிக்கை செய்யலாம். ‘க்ரீன்’மேட் பயன்பாடு, அம்மா சென்டிமென்ட் பாட்டு போன்றவை இருக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாம். அரசியல் சார்ந்து பன்ச்கள் பேசப்படும்போது கீழே, ‘பன்ச் பேசும் பழக்கம் புரொடியூசருக்கு தீங்கு விளைவிக்கும்’ என டிஸ்க்ளைமர் போடலாம்.

அம்மா சோஷியல் மீடியா:

தேச நலனுக்காக ‘அம்மா சோஷியல் மீடியா’ தொடங்கலாம். அவ்வப்போது நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம், ‘ஆன் தி வே’யில் இருக்கும் கோடிக்கணக்கான கோடிகளை இதற்காக முதலீடு செய்யலாம். ஃபேஸ்புக் நீலம் போல, அம்மா சோஷியல் மீடியா பச்சை கலராக இருக்கும். உள்ளே அக்கவுன்ட் தொடங்குபவர்களுக்கு டீஃபால்ட்டாக அம்மா படம் கவர் போட்டோவாகவும் வைக்கப்படும். இதன் மூலம் அவதூறு பேசுபவர்கள் ஈஸியாக ட்ராக் செய்யப்பட்டு ‘அன்போடு’ கவனிக்கப்படுவார்கள்.

இன்னும் ‘அம்மா வாட்டர் தீம் பார்க்’, ‘அம்மா கட்சித்தாவல் எம்.எல்.ஏ-க்கள் பாதுகாப்பு கவுன்சில்’ என ஏராளமானத் திட்டங்கள் காண்டாமிருகக் கொம்பில் உதிக்கின்றன. அவை எல்லாம் நெக்ஸ்ட்...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்