கட்டுப்பாட்டுக்குள் வரும் வாடகைத்தாய் சந்தை!

சர்ச்சைஓவியம் : ஸ்யாம்

த்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கும் புதிய வாடகைத்தாய் மசோதா பல சர்ச்சைகளை உண்டாக்கி இருக்கிறது.

வாடகைத்தாய் முறை மிகப்பெரிய தொழிலாக இந்தியாவில் உள்ளது. உதாரணமாக, கடந்த சில ஆண்டுகளில், சுமார் 30 ஆயிரம் குழந்தைகளை குஜராத் மாநிலத்தை செர்ந்த வாடகைத்தாய்கள், வெளிநாட்டவர்களிக்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். இதன் மூலம், சம்பந்தப்பட்ட மருத்துவ மனைகளும், புரோக்கர்களும்தான் பெரும் பலனை அடைந்திருக்கிறார்கள். இந்தியா முழுக்க இதுதான் நிலைமை. குழந்தைகளைப் பெற்றெடுத்த வாடகைத்தாய்களின் நிலையோ பரிதாபம். வாடகைத் தாய்களை, நார்மல் டெலிவரிக்கு அனுமதிப்பது இல்லை. காரணம், எந்தச் சிரமமும் இல்லாமல் குழந்தை வெளிவர வேண்டும் என்பதுதான். கருச்சிதைவு ஏற்பட்டால், வாடகைத்தாயை அப்படியே கைவிட்டுவிடுவார்கள்.

இந்த நிலையில், வாடகைத்தாய் தொடர்பாகப் பல சட்டச் சிக்கல்கள் வந்ததைத் தொடர்ந்து, வாடகைத்தாய் தொடர்பாக புதிய சட்டத்துக்கான மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. அதில், ‘வாடகைத்தாயாக ஒப்பந்தம் செய்து கொள்பவர் 21 வயது நிரம்பிய வராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்; வெளிநாட்டைச் சேர்ந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளத் தடை; வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள் இனிமேல் மருத்துவ விசாவில் இந்தியா வர வேண்டும்’. சுற்றுலா விசாவில் வந்து குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது; குழந்தையை பின் நாட்களில் வாடகைத் தாய் பார்க்க விரும்பினால் காட்ட வேண்டும்; தம்பதி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டால் வாடகை தாய் அங்கு சென்று குழந்தையைப் பார்க்க அனுமதிக்க வேண்டும். வாடகை தாயுடன் செய்த  ஒப்பந்தம் தொடர்பான நகலை இந்திய தூதரகத்திடம் தர வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல புது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டம் பற்றி இந்தியன் சரோகேசி லா சென்டரின் (Indian Surrogacy Law Centre) தலைமை ஆலோசகர் ராமசுப்பிரமணியன், “வாடகைத்தாய் முறை இந்தியாவுக்கு ஒன்றும் புதிது கிடையாது. நம் சமூகத்தில் அதை ஒரு முறைகேடாக யாரும் பார்க்கவில்லை. வாடகைத்தாய் முறையில் பணம் வாங்காமல் தாயாக இருப்பது, பணம் பெற்று கமெர்ஷியலாக தாயாக இருப்பது இரண்டு வகை உண்டு. உறவுகள் மூலமாக மட்டும்தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கமெர்ஷியலாக செய்ய முடியாது என்கிறது இந்த மசோதா. உறவுகளுக்கு இந்த முறையில் குழந்தை பெற்று எடுப்பது எத்தனை பேருக்கு வாய்ப்பு இருக்கும்? பணம் வாங்காமல் குழந்தையைப் பெற்று கொடுக்க எத்தனை பேர் முன்வருவார்கள்? ஒரு குழந்தையை தத்து எடுக்கும்போது அதில் கெடுப்பிடியான விதிமுறைகளை கொண்டு வருவதில்லைதான். ஆனால், இது தத்து எடுப்பது போன்ற விஷயம் இல்லை. தன் குழந்தையை எப்படிப் பெற்று எடுக்க வேண்டும் என அரசாங்கம் விதிமுறைகளை சொல்வது சரியாக இருக்காது. இதில் இருக்கும் அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும். அதிகமான வெளிநாட்டவர்கள் இங்கு வந்து இந்த முறையில் ஏன் பெற்றுக்கொள்கிறார்கள் என்றால் அவ்வளவு தேவை இருக்கிறது என்பதை உணரலாம். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழலில் தவிக்கும் தம்பதிகளுக்கு இவ்வளவு விதிமுறைகளை போட்டால், இது பிளாக் மார்க்கெட்டிங்காக மாறவே வழி செய்யும். ஒரு பெண் வாடகை தாயாக இருப்பது தாயின் தனி உரிமை.... தனி மனித உரிமை. அரசாங்கம் எப்படி தலையிட முடியும்?

இது குறித்து வழக்கறிஞர் சுதா, “வாடகைத்தாய் விவகாரத்தில் அரசுக்குத் தெளிவு இல்லை. விதிமுறைகள், கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, வாடகைத்தாய் முறையை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். பெண்கள் ஒன்றும் குழந்தை பெரும் மெஷின் அல்ல. குழந்தை இல்லாத தம்பதிகள், குழந்தை வேண்டும் என்று விரும்பினால், ஆதரவற்ற குழந்தைகளை அவர்கள் ஏன் தத்து எடுக்கக்கூடாது? அதற்கான சூழலையும், மனநிலையையும் அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்