‘‘காப்பாத்துங்க...’’ கதறும் நார்த்தாமலை ரயில்வே ஸ்டேஷன்!

பரிதவிப்பு

‘‘ஹலோ மக்களே! ஹூம்.... கொஞ்சம் ஃப்ரியா இருக்கீங்களா... என் கதையை உங்கக்கிட்ட சொல்லணும். வாழ்ந்து கெட்ட குடும்பம்னு சொல்லுவாங்கள்ல... அது போல, இது வாழ்ந்து சிதலமடைந்த ரயில் நிலையத்தின் கதை. ஆம், நான் ரயில் நிலையம்தான் பேசுகிறேன்.

என் பெயர் நார்த்தாமலை ரயில் நிலையம். புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவுல இருக்கேன். ஒரு காலத்துல நான் ரொம்ப பிஸியா இருந்தேன். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துல, தென் தமிழகத்தில முதன் முதலில் திருச்சி-காரைக்குடி இடையே ரயில் பாதை அமைத்தபொழுது முதலில் நார்த்தாமலையிலதான் ரயில்வே ஸ்டேஷனை அமைச்சாங்க. முதலில் ரயில்வே பண்டக பரிமாற்ற இடமாதான் இருந்தேன். நர்த்தாமலையைச் சுற்றி ஏராளமான கற்கோவில்கள், புனித ஸ்தலங்கள் இருக்கிறதால... மக்கள் பயன்பட்டுக்காக, என்னை ரயில் நிலையமா புதுப்பிச்சாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. நிறைய மனிதர்கள் வந்து போய்க்கிட்டு இருந்தாங்க. அதுக்கு பிறகும் ஏறத்தாழ ஒன்பது தசாப்தங்கள் பல கனவுகளை, காதல்களை, கோபத்தை சுமந்துக்கிட்டு இயங்கிட்டுதான் இருந்தேன். நீங்க வேண்டும்னா... ஒரு முறை என்னை வந்து பாருங்க... நிச்சயம் நினைவுகள் என் சுவர் முழுவதும் வழிந்தோடுவதை உங்களால உணர முடியும். சரி... ‘இப்ப அதுக்கு என்ன’ன்னு கேட்கிறீங்களா? இப்ப என்னை மூடிவிட முடிவு பண்ணிட்டாங்க.

வளர்ச்சி, செலவுக்குறைப்பு என என்னை மூடுவதற்கு நியாயம் கற்பித்து நூறு பதங்கள் பயன்படுத்தப்படலாம். ஆனால், என்னை பயன்படுத்தும் கிராம மக்களின் வலியைக் கடத்த ஒரு சொல்லைக்கூட பயன்படுத்த முடியாது. கடந்த ஜூன் மாதத்தில் ஒருநாள், ‘நார்த்தாமலை ரயில் நிலையம் இரண்டு மாதங்களில் மூடப்படும்’ என்ற அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டது. சொல்லியது போல் ஆகஸ்டு மாதம் ரயில் நிலையத்தை மூடியது. மூடிய அன்று மக்கள் ஏதோ தங்கள் வீட்டில் துக்கம் நடந்தது போல் கலங்கிப்போயிட்டாங்க. அதுவும் குறிப்பாக மாணவர்கள். நான் இல்லாமல் போனாலும், ஊரிலிருந்து வெளியூருக்குச் செல்ல மக்களால முடியும். ஆனால், பேருந்தைப் பிடிக்க சில கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும்.

இன்னொரு விஷயம். நான் நார்த்தாமலைக்கு மட்டும் சொந்தம் இல்லை. அந்த ஊரைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு கிராமங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான எளிய மனிதர்கள் என்னையே நம்பி இருந்தார்கள். அதுமட்டுமல்ல, நார்த்தாமலையைச் சுற்றி சித்தன்னவாசல், 12 விஷ்ணு கொண்ட கோயில்கள், மலை மாதா கோயில் என பல வழிபாட்டு தலங்கள் இருக்கின்றன. அங்கே வருகிறவர்களும் என்னைப் பயன்படுத்தி வந்தார்கள்.

ஒரு ரயில்வே நிலையத்தை மூட வேண்டும் என்றால், முறையாகப் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, பின்பு தானே மூட வேண்டும். ஆனால், நான் மூடப்படப்போகிறேன் என்ற நோட்டீஸ் பக்கத்து ரயில் நிலையமான கீரனூரில் ஒட்டப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சீசன் டிக்கெட் முடியும் முன்பே ரயில் சேவையை நிறுத்திவிட்டனர். அத்தனை பேரும் ஏழை மாணவர்கள். ரயில் சேவை நின்ற பிறகு 5 கிலோமீட்டர் தூரம் குழந்தைகளால் நடந்து செல்ல முடியவில்லை என்பதால் பல நாட்கள் பள்ளிக்கே செல்லவில்லையாம். இதையெல்லாம் கேள்விப்பட்டு நான் சிந்திய கண்ணீர் உங்கள் கண்களுக்குத் தெரியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்