அமைச்சர் சீனிவாசனை சீண்டிய மக்கள்!

ஆவேசம்

தேர்தல் காலங்களில் அமைச்சர் பெருமக்களுக்கு, ‘விரட்டியடிப்பு’, ‘முற்றுகை’ என பல சிறப்புகள் கிடைப்பது வழக்கம். ஆனால், ஆட்சியில் இருக்கும்போதே அதுபோன்ற ‘சிறப்புகள்’ அரங்கேறுவது அரிதான ஒன்று. அப்படி ஒரு சிறப்பு, அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கிடைத்துள்ளது.

பழனி அருகே பாலசமுத்திரம் கிராமத்து குப்பை கிடங்கில் கடந்த 8-ம் தேதி தீவிபத்து ஏற்பட்டு, 40-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின. உடனே, பழனி தி.மு.க எம்.எல்.ஏ-வான ஐ.பி.செந்தில்குமார் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னார். ஆனால், அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் எட்டிப் பார்க்கவில்லை என புகார் எழுந்தது. இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி, நூற்றுக்கணக்கான கட்சியினர் புடைசூழ வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அந்தப் பகுதிச் சென்றார்.

பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்டுவிட்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளிடம் மட்டுமே நடந்ததை விசாரித்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சோகத்தை அமைச்சரிடம் முறையிடலாம் என காத்திருந்தனர். வீடு இழந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் பாய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் இருந்தன. நிவாரணம் வழங்கும் இடத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். அங்கு, அரசியல் மேடையில் பேசுவதுப்போல, கட்சி நிர்வாகிகள் பெயர்களை வரிசையாக வாசித்தார். பிறகு, இரண்டு மூன்று நபர்களுக்கு மட்டும் நிவாரணத்தைக் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு அதிகாரிகள் தருவார்கள் என்றபடி கிளம்பத் தயாரானார். அதைக்கண்டு மக்கள் ஆத்திரம் அடைந்தனர். ‘‘பாதிக்கப்பட்ட எங்களிடம் கருத்து கேட்காமல், அதிகாரிகளிடம் கருத்து கேட்டது தவறு. தீவிபத்து நடந்த பகுதி முழுவதையும் அமைச்சர் பார்வையிட வேண்டும். எங்களுக்கு வீடு வேண்டும்” என தர்ணாவில் மக்கள் ஈடுபட்டனர். அவர்களைக் கண்டுக்கொள்ளாமல் அமைச்சர் அங்கிருந்து செல்ல முயன்றனர். அதனால், மேலும் ஆத்திரம் அடைந்த மக்கள், அமைச்சரை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். அங்கு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை சற்றும் எதிர்பார்க்காத திண்டுக்கல் சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். அவரை, ஒரு வழியாக கட்சியினர் காப்பாற்றி, அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான முருகனிடம் பேசினோம். ‘‘மதியம் 2 மணிக்கு அமைச்சர் வருவாருன்னு சொல்லி, எங்களை எங்கேயும் போகவிடாம வெச்சிட்டாங்க. 4 மணிக்கு அமைச்சர் வந்தாரு. வந்தவரு சில வீடுகளை மட்டும் பாத்துட்டு, கட்சிக்காரங்ககிட்ட விசாரிச்சாரு. பாதிக்கப்பட்ட வீடுகளைப் பாக்க விடாம அதிகாரிங்க, நிவாரணம் கொடுக்குற இடத்துக்கு அமைச்சரை கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்க கட்சி விழா மாதிரி நிர்வாகிங்க பேரை எல்லாம் அமைச்சர் சொல்லிட்டு இருந்தாரு. அதுனால மக்கள் கொஞ்சம் கடுப்பாகிட்டாங்க. 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுத்தாங்க. ‘எங்களுக்குப் பணம் வேண்டாம். வீடுகளுக்கு ஏற்பாடு செய்யுங்க’னு கேட்டாங்க. அதனால கொஞ்சம் சலசலப்பு ஆகிடுச்சு. நடந்த தள்ளுமுள்ளுல அமைச்சர் தடுமாறிட்டாரு. அவரைக் கட்சிக்காரங்க பாதுகாப்பா கூட்டிட்டுப் போயிட்டாங்க. அவரு போன பிறகு, பாதிக்கப்பட்டவங்ககிட்ட கட்சிக்காரங்க தகராறு பண்ணினாங்க. போலீஸ் தலையிட்டு அமைதியை ஏற்படுத்துனாங்க’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்